ADVERTISEMENT

“இந்தியாவை சொர்க்க பூமியாக மாற்றுவேன், இல்லையென்றால் என்னை உயிரோடு எரியுங்கள்” நானும் தேடிக்கிட்டுதான் இருக்கேன் - கரு.பழனியப்பன்

01:14 PM Apr 09, 2019 | george@nakkheeran.in

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் சி.பி.ஐ.எம் சார்பில் போட்டியிடும் சு.வெங்கடேசனை ஆதரித்து மதுரையில் நடத்தப்பட்ட நிகழ்வில் திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர்...

ADVERTISEMENT

ADVERTISEMENT

“இங்கு மொழி வேறு, கலாச்சாரம் வேறு, உடை வேறு, உணவு வேறு இப்படி எல்லாமே வேறு வேறாக இருந்தாலும், அவற்றிற்கான இடத்தைக் கொடுத்து ஒன்றாக வாழ்கிற நாட்டுக்குத்தான் இந்தியா என்று பெயர் வைத்திருக்கிறோம். இப்போது புதுசா ஒருவன் வந்து எல்லாருக்கும் காவி அடிக்க முயற்சி செய்கிறான். காவி அடித்துவிட்டு நாங்கள்தான் இந்தியன் நீங்களெல்லாம் ஆண்ட்டி இந்தியன் என்று சொல்கிறான். உண்மையில் நாம்தான் இந்தியர்கள். நாம்தான் இந்தியா ஒன்றாக இருக்கவேண்டும் என நினைக்கிறோம். நீ மேற்கேப் பார்த்துக் கும்பிடு நான் கிழக்கெப் பார்த்துக் கும்பிடுறேன், நாம் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கும் போது கும்பிட்டுக்குவோம் அதுதான் முக்கியம் என சொல்வது நாம் தான். எனவே, நாம்தான் இந்தியன், அவன் ஆண்ட்டி இந்தியன். அந்த ஆண்ட்டி இந்தியன்கள் திரும்பவும் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதற்கான முக்கியமான தேர்தல் இது.

சு.வெங்கடேசனுடன் பிரச்சாரத்திற்குப் போகும்போது மிகப் பெரிய ஆச்சரியம். வீட்டில் இருந்த பெண்கள் எல்லோரும் வெளியே வந்து, முகம் மலர சிரித்து வரவேற்றார்கள். ஒரு வேட்பாளரைப் பார்த்து பெண்கள் எல்லோரும் முதலில் பயப்படாமல் இருக்கணும்ல. பொள்ளாச்சி மாதிரி ஒரு சம்பவம் நடந்த பிறகும் ஒரு அரசியல் கட்சிக் கூட்டத்திற்கு இவ்வளவுப் பெண்கள் வந்திருக்கிறார்கள் என்றால், இது தான் இந்த கூட்டணியின் மேல் பெண்கள் வைத்திருக்கும் மரியாதை. எவன் கேடு நடத்தினான், எவனை நம்பியும் வெளியே போக முடியலை என்பதெல்லாம் அடுத்த விஷயம். இந்த நாட்டுக்கு முதலமைச்சர் என்று ஒருத்தர் இருக்கிறார், அவர் துடித்திருக்க வேண்டாமா? இல்ல இல்ல சம்மந்தப்பட்டவன் ஆளுங்கட்சி, எதிர்கட்சி, நடுக்கட்சி என்று மாறி மாறிச் சொல்லிக்கிட்டே இருக்கிங்களே, எவனாக இருந்தாலும் தப்பு செய்தவனை அடிக்க வேட்டியை மடிச்சுக் கட்டிக்கிட்டு முதல் ஆளாக வந்திருக்க வேண்டிய முதலமைச்சர், சட்டம் தன் கடமையைச் செய்யும் என அருளாசி வழங்குகிறார்.

தமிழகம் முழுவதும் மோடியைப் பற்றியும், மத்தியில் நடக்கும் ஆட்சிப் பற்றியும் பேசிக்கொண்டிருக்கிறேன். எல்லோரும் ஆர்வமாக பேச்சைக் கேட்பார்கள், அங்க அங்க கைத்தட்டுவார்கள். எல்லாத்தையும் முடிச்சுட்டு அடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்று சொல்லுவேன், மொத்தக் கூட்டமும் சிரிக்கும். எனக்குத் தெரிந்து முதலமைச்சர் பதவி இப்படி சிரிப்பா சிரிக்கிறது எடப்பாடி இருக்கும்போது தான். அது அவர் கவனத்திற்க்கு வரவே மாட்டெங்குது. அவர் எதற்கும் ரியாக்‌ஷன் இல்லாமல் டூத் பேஸ்ட் விளம்பரம் மாதிரி ஒரு சிரிப்பு சிரிச்சுக்குவாரு. அவரைப் பொருத்தவரைக்கும் நம்ப கையில் ஒன்னும் இல்லை, எல்லாத்தையும் மேலே இருக்கிறவன் பார்த்துக்குவான் என்று நினைக்கிறார். இப்போ மேலே இருக்கிறவனை இறக்கப் போகிறோம், கீழ இருக்கிறவன் தன்னால இறங்கிடுவான்.
பாஜக-வை சேர்ந்தவர்கள் தேர்தல் காலத்தில் ஒரு முகம் காட்டுவார்கள் அது அவர்களின் முகமே இல்லை. தமிழ் நாட்டு பாஜகவை எடுத்துக்கொண்டால் இந்த ஐந்தாண்டு காலமாக சி.பி.ராதா கிருஷ்ணன் தொடங்கி அடிமட்டத்தில் இருக்கும் எல்லோருமே எல்லா தொலைக்காட்சிகளிலும், மேடைகளிலும் காவிச் சட்டையில் இருந்தார்கள், இப்போது வெள்ளைச் சட்டைக்கு மாறி விட்டார்கள். தேர்தல் முடிந்ததும் மறுபடியும் காவியை எடுத்து மாட்டிப்பார்கள். இப்போது ஒரு தடவ சொல்லேன், பெரியாரை செருப்பால் அடிப்பேன், பெரியார் சிலையை உடைப்பேன்னு சொல்லேன். அவசர அவசரமாக பெரியார் ஃபோட்டோவையும், அண்ணா ஃபோட்டோவையும் பேனரில் தூக்கி வச்சுருக்கியே, பெரியார் பின்னாடி இருந்து துப்புவார் என்று வெட்கமாக இல்லையா?

பண மதிப்பிழப்பு ஒரு காமெடி. கருப்புப் பணத்தை ஒழிச்சுடுவோம், கள்ளப் பணத்தை ஒழிச்சுடுவோம், எல்லாத்தையும் ஒழிச்சுடுவோம்னு சொல்லி பண மதிப்பிழப்புக் கொண்டுவரப் பட்டது. அப்போது நாட்டில் புழக்கத்தில் இருந்த பணம் 15,44000 கோடி ரூபாய். ஆனால், 6 மாதம் கழித்து ரிசர்வ் வங்கிக்கு 15.28000 கோடி ரூபாய் திரும்பிடுச்சு. அதாவது 99.3 % பணம் மறுபடியும் வந்துடுச்சு. கணக்கில் வராத பணம் வெறும் 16000 கோடி ரூபாய் மட்டும்தான் வெளியில் இருக்கிறது. புது 500 ரூபாய் நோட்டும் 2000 ரூபாய் நோட்டும் அச்சடிப்பதற்கு ஆகிய செலவு 21000 கோடி ரூபாய். 16000 கோடியைப் பிடிக்கத்தான் 21000 கோடி செலவழிச்சிங்களா? 130 பேர சாவடிச்சிங்களா? ஏடிஎம் வாசலில் நிக்க வச்சிங்களா? தண்ணிக் குடிக்க முடியாமல் தடுமாறினான், டாய்லெட் போக முடியாமல் தடுமாறினான். கல்யாணம் நின்னுபோச்சு, மருத்துவம் நின்னுபோச்சு, எல்லா கேடும் நடந்துச்சு “50 நாட்களில் எல்லாம் சரி செய்யப்படும், 6 மாதத்தில் இந்தியாவை சொர்க்க பூமியாக மாற்றுவேன், இல்லையென்றால் என்னை உயிரோடு எரியுங்கள்” என்றார் பிரதம மந்திரி, நானும் தேடிக்கிட்டெ இருக்கேன் அவர் நாட்டில் இருக்கவே மாட்டெங்குறார். ரபேல் ஊழல் மட்டும் ஊழல் இல்லை. நமது பணம் 21000 கோடியை ஊதாரித் தனமாக செலவு செய்ததும் ஊழல்தான்” என்று பாஜக மற்றும் அதிமுக அரசுகளை விமர்சித்துப் பேசினார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT