ADVERTISEMENT

''அண்ணே கவலைப்படாதீங்க'' என சொல்லி கலைஞருக்கு காரோட்டிய... ஸ்டாலின் பேச்சு

11:58 AM Sep 06, 2019 | rajavel

ADVERTISEMENT

கோவை மாவட்டம் ஈச்சனாரியில் தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி மு.கண்ணப்பன் எழுதிய “வாழ்வும் பணியும்” புத்தக வெளியீட்டுவிழா ஒரு தனியார் மண்டபத்தில் 05.09.2019 வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த புத்தகத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். விழாவில் மு.கண்ணப்பன், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின்,

1975ம் ஆண்டு இந்தியாவில் நெருக்கடி நிலை அமுல்படுத்தப்பட்டது. அந்த நெருக்கடி நிலையை எதிர்த்து முதல்முதலில் குரல் கொடுத்த இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் தலைவர் கலைஞர் அவர்கள் தான் முதன் முதலில் எதிர்த்து குரல் கொடுத்தார்.


அதை எதிர்த்தால் நிச்சயமாக ஆட்சி கவிழ்க்கப்படும் என்பது தலைவர் கலைஞர் அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

இன்னும் சொல்ல வேண்டும் என்றால், டெல்லியில் இருந்து சில தூதுவர்கள் வந்தார்கள். “அன்னை இந்திரா காந்தி கொண்டுவந்திருக்கும் நெருக்கடி நிலையை நீங்கள் எதிர்க்கக் கூடாது, ஆதரிக்க வேண்டும் என்று அவசியமில்லை; ஆனால், எதிர்க்கக்கூடாது. நீங்கள் ஆதரித்தால் மகிழ்ச்சி; ஆதரிக்கவில்லை என்று நாங்கள் கவலைப்படமாட்டோம். ஆனால், எதிர்க்கக்கூடாது. நீங்கள் எதிர்க்காமல் இருந்தால் உங்கள் ஆட்சி தொடர்ந்து தமிழ்நாட்டில் இருக்கும். நீங்கள் எதிர்த்தால், உங்கள் ஆட்சியை இந்த தமிழ்நாட்டில் இருந்து அடுத்த விநாடியே நாங்கள் கவிழ்த்துவிடுவோம்.” என்று வந்த தூதுவர்கள் சொன்னார்கள்.

அவர்களிடத்தில், "ஆட்சியென்ன? எங்கள் உயிரே போனாலும் நாங்கள் என்றைக்கும் சர்வாதிகாரத்திற்கு துணை நிற்கமாட்டோம் – ஜனநாயகத்தின் பக்கம்தான் நிற்போம்" என்று தலைவர் கலைஞர் அவர்கள் வந்த தூதுவர்களிடத்தில் சொல்லி அனுப்பினார்.

அதற்குப்பிறகு, சென்னை கடற்கரையில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தில் தீர்மானத்தையே படித்தார்ள். அந்த தீர்மானத்தை முன்மொழிந்து படித்துவிட்டு வந்திருந்த மக்கள் அனைவரையும் எழுந்து நிற்க வைத்து வழிமொழிய வைத்தார்;

நெருக்கடி நிலையை இரத்து செய்ய வேண்டும்.

கைது செய்து சிறையில் வைத்திருக்கும் தலைவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும். போன்ற தீர்மானங்களைப் படித்த அடுத்த 10வது நிமிடம் தமிழ்நாட்டில் தலைவர் கலைஞர் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருந்த நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி கவிழ்க்கப்படுகிறது.


கவிழ்க்கப்பட்டதற்குப் பிறகு ஏறக்குறைய 500க்கும் மேற்பட்டவர்கள் மிசா கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்ட கொடுமைகள் எல்லாம் உங்களுக்குத் தெரியும். அந்தக் கொடுமையில் தான் ‘சிட்டிபாபு’ என்கின்ற கழக தங்கத்தை இழந்தோம். சாத்தூர் பாலகிருஷ்ணன் என்கின்ற கழக கொள்கை வீரனை நாம் இழந்தோம்.

அதைத்தான் நம்முடைய ராசா அவர்கள் பேசுகின்ற போது குறிப்பிட்டுச் சொன்னார்.

சாத்தூர் பாலகிருஷ்ணன் இறந்துவிட்டார் என்ற செய்தி, சென்னையில் இருக்கக்கூடிய நம்முடைய தலைவர் கலைஞருக்கு கிடைக்கிறது.

அப்போது, அண்ணன் கண்ணப்பன் அவர்கள் மற்றும் கழக முன்னனியினர் அனைவரும் உட்கார்ந்திருக்கிறபோது “நாம் நேரடியாக மதுரைக்கு செல்ல வேண்டும். சாத்தூர் பாலகிருஷ்ணன் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க வேண்டும்” என்றார்.

தற்போது இளைஞர் அணியாக பணியாற்றிக் கொண்டிருக்கும் அலுவலகம் அன்பகம். அன்றைக்கு, தலைமைக் கழகமாக இருந்தது அன்பகம் தான்.




காரை ஓட்டிக்கொண்டிருந்த டிரைவர் சொல்லாமல் கொல்லாமல் போய்விட்டார். பிறகு யாரை வைத்து கார் ஓட்டுவது என்று சொல்லிக் கொண்டிருந்தபோது பக்கத்தில் இருந்த அண்ணன் கண்ணப்பன் சொன்னார். “அண்ணே கவலைப்படாதீர்கள் நான் கார் ஓட்டிக்கொண்டு வருகின்றேன்” என்று சொல்லி, அண்ணன் கண்ணப்பன் கார் ஓட்ட அருகில் தலைவர் கலைஞர் அவர்கள் உட்கார பின்னால் ஓ.பி.இராமன் அவர்கள் உட்கார்ந்திருக்க, அதற்குப்பிறகு கார் திருச்சிக்கு வருகிறபோது, அன்பில் தர்மலிங்கம் அவர்கள் காத்திருந்து ஏறிக்கொள்ள, அதற்குப்பிறகு மறைந்த சாத்தூர் பாலகிருஷ்ணன் அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட தியாக வரலாற்றுகளை எல்லாம் இந்த நூலில் மிக அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

டி.ஆர்.பாலு அவர்கள் நேரமில்லா காரணத்தினால் பேசவில்லை, நான் கூட அவரிடத்தில் இன்று காலையில் கேட்டேன். “நாங்கள் எல்லோரும் சிறைக்கு சென்றபிறகு, கொஞ்ச நாள் கழித்துதான் வந்தீர்கள். உங்களுடைய தம்பி திருமணம் தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் நடந்ததே, அது எப்போது?” என்று கேட்டேன்? “நான் சிறைக்கு வந்ததற்குப் பிறகுத்தான் திருமணம் நடந்தது” என்று சொன்னார். எனவே, அந்தத் திருமணத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் கலந்துகொண்டு அண்ணன் கண்ணப்பனைப் பற்றி பேசுகின்ற போது தலைவர் கலைஞர் சொன்னார், “எனக்கு காரோட்டி வந்த கண்ணப்பன்” என்று அந்தப் பட்டத்தை அன்றைக்கு வழங்கியிருக்கின்றார்கள்.

எனவே, எப்படிப்பட்ட தியாகத்தின் மீது இந்த இயக்கம் கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. தியாகிகள் நிறைந்த ஒரு இயக்கமாக இந்த இயக்கம் வளர்ந்திருக்கின்றது. அந்த இயக்கத்திற்கு இன்றைக்கு தலைவனாக இருக்கக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்திருப்பதை நினைத்து எண்ணிப் பார்க்கின்ற போது நான் உள்ளபடியே பெருமைப்படுகின்றேன் – மகிழ்ச்சியடைகின்றேன்.

தலைவர் கலைஞர் அவர்களுக்கு, எத்தனையோ பேர் உதவிகள் செய்திருக்கலாம், எத்தனையோ பேர் சோதனைகள் – வேதனைகள் வருகிறபோது பக்கத்தில் இருந்து ஆறுதல் சொல்லியிருக்கலாம். இப்படி பலர் இந்த இயக்கத்தில் ஏராளமானவர்கள் இருக்கின்றார்கள். ஆனால், எல்லாவற்றையும் தாண்டி தலைவர் கலைஞருக்கு காரோட்டியவர் ஒருவர் உண்டென்று சொன்னால் அது கண்ணப்பனாகத்தான் இருக்க முடியும். அந்தப் பெருமை நம்முடைய கண்ணப்பன் அவர்களுக்கு கிடைத்திருக்கின்றது.


அதனால்தான், ஒருமுறை அல்ல; இரண்டு முறை அண்ணன் கண்ணப்பன் அவர்களை அமைச்சராக்கி அழகு பார்த்தவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்.

திராவிட இயக்கம் இன்றைக்கு என்ன செய்தது என்று கேட்டுக்கொண்டிருக்கின்றார்களே?

அவர்களுக்கெல்லாம், நான் சொல்லவிரும்புகிறேன், தமிழக கோவில்களில் இன்றைக்கு தமிழில் வழிபாடு நடக்கின்றது என்றால் அது தி.மு.க ஆட்சியால் தான். அப்போது அந்தத் துறையின் அமைச்சராக இருந்தவர் அண்ணன் கண்ணப்பன் அவர்கள் தான்.

திராவிட இயக்கம் என்ன செய்தது என்று கேட்டுக் கொண்டிருக்கின்றார்களே?

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக இருக்கவேண்டும் என்று சட்டத்தை உருவாக்கியவர் தலைவர் கலைஞர் அவர்கள். அப்போது, அமைச்சராக இருந்தவர் அண்ணன் கண்ணப்பன் அவர்கள் தான். இவ்வாறு பேசினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT