ADVERTISEMENT

தினகரனுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: கடம்பூர் ராஜூ 

10:31 AM Jul 12, 2019 | rajavel

ADVERTISEMENT

கோவில்பட்டி அருகே உள்ள கட்டாலங்குளத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

ADVERTISEMENT

அவர் கூறுகையில், சென்னையில் வீரன் அழகுமுத்துக்கோன் சிலையை ஜெயலலிதா நிறுவினார். தற்போது கட்டாலங்குளத்தில் வீரன் அழகுமுத்துக்கோனின் பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது போன்று, சென்னையிலும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. கட்டாலங்குளத்தில் வீரன் அழகுமுத்துக்கோனின் அரண்மனை சீரமைக்கப்படும். அவரது வாரிசுதாரர்களுக்கு ஓய்வூதியம் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.


தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே சிறந்த போலீஸ் நிலையங்களாக கோவை, சென்னை போலீஸ் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு விருதுகளை பெற்றுள்ளன. சில இடங்களில் உணர்ச்சியின் காரணமாக ஆணவக்கொலைகள் நடந்தாலும், அதனையும் அரசு கட்டுப்படுத்தி வருகிறது. மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் குற்றச்செயல்கள் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டு உள்ளன.

மத்தியில் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சியில் இருந்தபோதுதான், நீட் தேர்வு குறித்து அரசிதழில் வெளியிடப்பட்டது. அப்போது நீட் தேர்வினை ஜெயலலிதா கடுமையாக எதிர்த்தார். நீட் தேர்வுக்கு வித்திட்ட காங்கிரஸ், தி.மு.க.வால்தான், தற்போது நீட் தேர்வினை அமல்படுத்த வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு பா.ஜனதா தள்ளப்பட்டு உள்ளது.


கடந்த ஒரு வாரமாக சட்டசபையில் நீட் தேர்வு குறித்து விவாதம் நடந்து வருகிறது. ஆனால் டி.டி.வி.தினகரன் அங்கு வந்து கருத்து சொல்லவில்லை. சட்டசபைக்கு வந்து ஜனநாயக கடமையை ஆற்றாமல், வெளியில் இருந்து அவர் சொல்லும் கருத்துகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தமிழகத்தில் வருகிற 2021-ம் ஆண்டு வரையிலும் அ.தி.மு.க. ஆட்சி நீடிக்கும். அதன்பிறகும் அ.தி.மு.க. ஆட்சிதான் என்றும் தொடரும். இவ்வாறு கூறினார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT