ADVERTISEMENT

பேனா சின்னத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம் தொடங்கிய ஜெயகுமார்!

12:59 PM May 15, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

முன்னாள் முதல்வர் கலைஞருக்கு கடலில் பேனா சின்னம் அமைப்பதற்கு மத்திய அரசு ஓப்புதல் வழங்கியதற்கு எதிராக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள நிலையில் பேனா சின்னத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயகுமார், “கடலுக்கு சொந்தக்காரர்களே மீனவர்கள்தான். எங்களது ஆட்சியில் மீனவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களைக் கொண்டு வந்தோம். வாழ்வாதாரத்தைப் பாதுகாத்தோம். ஆனால், தற்போது பொறுப்பேற்றுள்ள திமுக அரசு மக்களுக்கு எந்த நலத்திட்டங்களையும் கொண்டு வரவில்லை. அதுமட்டுமில்லாமல் அவர்களது வாழ்வாதாரத்தை அழிக்கும் நோக்கத்தில் தான் செயல்பட்டு வருகிறது. யாருடைய பணத்தில் ரூ.81 கோடி மதிப்பில் பேனா சின்னம் அமைப்பது. ஸ்டாலின் வீட்டுப் பணமா அல்லது திமுகவுடைய பணமா? மக்களுடைய வரிப்பணம். மக்களுடைய வரிப்பணத்தில் உங்கள் அப்பாவுக்கு நினைவுச் சின்னம் வைக்க வேண்டும் என்றால் என்ன நியாயம்.

சாதி, மதம் என அனைத்தையும் கடந்து உலகிற்கு பொதுமறையைக் கொடுத்த திருவள்ளுவரை விட கலைஞருக்கு 134 அடியில் சிலை வைப்பதா? இப்படி பேனா சிலை வைப்பதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். பேனா சிலை அமையவுள்ள இடம் கடலும் ஆறும் கலக்கும் முகத்துவாரம். அந்த முகத்துவாரத்தில்தான் சிறிய மீன்கள், இறால்கள் உள்ளிட்டவை அதிகம் இருக்கும். அதனை நம்பி ஏகப்பட்ட கிராமங்கள் இருக்கிறது. இப்போது அங்கு பேனா சிலை அமைத்தால் மீன்களின் வரத்து குறைந்து அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். ஆனால், இதைப்பற்றி எல்லாம் இந்த அரசிற்கு அக்கறை கிடையாது” என்றார்.

இதனைத் தொடர்ந்து மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்கள் குறித்துப் பேசிய அவர், “கள்ளச்சாராயம் குடித்து மொத்தம் 14 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 48 பேருக்கும் மேல் சிகிச்சையில் உள்ளனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி இல்லை, சாராய மாடல் ஆட்சிதான் நடந்து வருகிறது. யார் யார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள், மதுவை கள்ளச்சந்தையில் விற்கிறார்கள் என்று போலீஸூக்கு தெரியாதா? ஆளுங்கட்சியும், போலீஸும் கை கோர்த்ததன் விளைவுதான் இன்று கள்ளச்சாரயத்திகு 14 பேர் பலியானது. அவர்களது குடும்பம் நடுத்தெருவில் நிற்பதற்கு காரணம் திமுக அரசுதான்” என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT