ADVERTISEMENT

உச்சநீதிமன்றத்திடம் தமிழகம் எதிர்பார்ப்பது ஆறுதலை அல்ல... நீதியை! ராமதாஸ்

08:17 PM Apr 05, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

பா.ம.க. நிறுவனர் ராமதாஸின் முகநூல் பதிவில் ஒரு கேள்வி... ஒரு பதில் என்ற தலைப்பில் இன்றைய பதிவு:

ADVERTISEMENT

கேள்வி: காவிரிப் பிரச்சினையில் தமிழகத்தின் நலன்களை தாங்கள் பார்த்துக் கொள்வதாகவும், தமிழக மக்கள் போராட்டத்தைக் கைவிட்டு அமைதி காக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கூறியிருக்கிறாரே?

பதில்: காவிரிப் பிரச்சினையில் தமிழக நலன் தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி காட்டும் அக்கறை உண்மை என்றால் அது வரவேற்கத்தக்கது தான். அதிலும் தலைமை நீதிபதி அமர்வில் வேறு வழக்குக்காக ஆஜராகச் சென்ற தமிழக அரசின் வழக்கறிஞரை அழைத்து இவ்வாறு கூறியிருப்பது, காவிரிப் பிரச்சினையில் தமிழகத்தில் நடைபெறும் நிகழ்வுகளை உச்சநீதிமன்றம் கவனித்து வருவதை உணர்ந்து கொள்ள முடிகிறது.

காவிரிப் பிரச்சினையை நீதிமன்றம் கவனித்துக் கொள்ளும் என்பதால் தமிழக மக்கள் போராட்டம் நடத்தக்கூடாது என்பது தலைமை நீதிபதியின் வாதம். நல்லது தான். ஆனால், இந்தியாவின் மிக உயர்ந்த நீதி அமைப்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும், ஆணையையும் மத்திய அரசே மதிக்கவில்லை என்பது தான் தமிழ்நாட்டில் போராட்டம் வெடிப்பதற்கான முக்கியக் காரணம் ஆகும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை இதுவரை செயல்படுத்தாத மத்திய அரசு, அதற்காக உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ள காரணம், ‘‘ காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால் அதை எதிர்த்து கர்நாடகத்தில் போராட்டம் வெடிக்கும்’’ என்பது தான். காவிரிப் பிரச்சினையில் பாதிக்கப்பட்ட மாநிலமான தமிழகம் போராட்டம் நடத்தக்கூடாது என்று அக்கறையுடன் கூறும் தலைமை நீதிபதி அவர்கள், வரும் 9&ஆம் தேதி காவிரி வழக்கு தொடர்பாக தமிழக அரசும், மத்திய அரசும் தாக்கல் செய்துள்ள மனுக்கள் விசாரணைக்கு வரும்போது அதே அக்கறையுடன்,‘‘ காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்கப்பட வேண்டும். அதற்கு எதிராக கர்நாடகத்து மக்கள் போராட்டம் நடத்தக்கூடாது. தமிழகத்திற்கு நீதி வழங்குவதை எதிர்க்கக்கூடாது’’ என்று ஆணையிட வேண்டும். அவ்வாறு ஆணையிட்டால் தமிழக மக்கள் மகிழ்ச்சியடைவர்.

காவிரி பிரச்சினை தொடர்பாக கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி உச்சநீதிமன்றம் இன்னும் கொஞ்சம் தெளிவாகத் தீர்ப்பளித்திருந்தாலே பல சிக்கல்களை தவிர்த்திருக்கலாம். இந்த விஷயத்தில் காவிரி நடுவர் மன்றம் அளித்தத் தீர்ப்பு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பது தான். தமிழகம் தொடர்ந்த வழக்கின் கோரிக்கையும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஆணையிட வேண்டும் என்பது தான். அந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம்,‘‘காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்த காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்’’ என்று தெளிவாகக் கூறியிருந்தால் மத்திய அரசு தப்பித்திருக்க முடியாது. மாறாக ஸ்கீம் என்று குறிப்பிட்டது தான் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் ஆகும்.

மத்திய அரசின் சார்பில் விளக்கம் கோரும் மனு சில நாட்களுக்கு முன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட போது, ‘‘ ஆறு வார கால அவகாசம் முடிந்த பிறகா விளக்கம் கேட்க வருவீர்கள். தீர்ப்பளிக்கப்பட்ட ஓரிரு நாட்களில் விளக்கத்தைக் கேட்டு குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் வாரியத்தை அமைத்திருக்க வேண்டாமா?’’ என்று கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், உச்சநீதிமன்றம் அதை செய்யவில்லை.

இப்போதும் ஒன்றும் கெட்டுப்போய்விடவில்லை. வரும் 9-ஆம் தேதி காவிரி வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் போது காவிரி மேலாண்மை வாரியத்தை 4 நாட்களில் அமைக்க நீதிபதிகள் ஆணையிட வேண்டும். அதுதான் தமிழக மக்களின் எதிர்பார்ப்பு.

தமிழ்நாட்டின் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அவர்கள் காட்டிய அக்கறைக்கு நன்றிகள். ஆனால், உச்சநீதிமன்றத்திடம் தமிழகம் எதிர்பார்ப்பது ஆறுதலை அல்ல... நீதியை!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT