Skip to main content

உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீற முயல்கிறது கேரள அரசு - பாமக ராமதாஸ் கண்டனம்

Published on 13/12/2022 | Edited on 13/12/2022

 

Kerala Govtfor trying to defy Supreme Court verdict-pmk Ramadoss condemned

 

முல்லைப் பெரியாற்றின் குறுக்கே இப்போதுள்ள அணைக்குக் கீழே புதிய அணை கட்டுவதற்கான பணிகளை கேரள அரசு தொடங்கலாம் என்று அம்மாநில அரசால் அமைக்கப்பட்டுள்ள வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘முல்லைப் பெரியாற்றில் தற்போதுள்ள அணையிலிருந்து 366 மீட்டர் கீழே புதிய அணை கட்டுவதால் இப்போதுள்ள அணை மற்றும் புதிதாகக் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஏதேனும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுமா? என்பது குறித்து ஐதராபாத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்திருந்தது. அதை ஆய்வு செய்வதற்காக கேரள அரசால் அமைக்கப்பட்டிருந்த வல்லுநர் குழு தான் இந்தப் பரிந்துரையை அளித்திருக்கிறது. வல்லுநர் குழுவின் பரிந்துரையை ஏற்று ரூ.1,500 கோடி செலவில் புதிய முல்லைப் பெரியாறு அணையைக் கட்டுவதற்கு முடிவு செய்துள்ள கேரள அரசு, அதற்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளது.

 

கேரள அரசின் இந்த நடவடிக்கை ஒருபுறம் அப்பட்டமான உச்சநீதிமன்ற அவமதிப்பு என்றால், மற்றொருபுறம் திட்டமிடப்பட்ட நாடகம் ஆகும். முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கான தேவை எள் முனையளவும் ஏற்படவில்லை. முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்ட அனுமதிக்க வேண்டும் என்று கோரி கேரள அரசால் தொடரப்பட்ட வழக்கில் 2014 ஆம் ஆண்டில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ‘‘முல்லைப் பெரியாறு அணை மிகவும் வலிமையாக உள்ளது. அங்கு புதிய அணை கட்டினால் எவ்வளவு வலிமையாக இருக்குமோ, அதைவிடக் கூடுதல் வலிமையுடன் இப்போதைய அணை உள்ளது. எனவே, புதிய அணை தேவையில்லை. மாறாக அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்’’ என்று ஆணையிட்டிருந்தது.

 

உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு முல்லைப் பெரியாறு அணையின் வலிமை குறித்து, உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட  கண்காணிப்புக் குழு ஆண்டுக்கு ஒரு முறை ஆய்வு செய்து வருகிறது. அனைத்து ஆய்வுகளிலும் முல்லைப் பெரியாறு அணை வலிமையாக இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை கேரள அரசு மதிக்கிறது என்றால், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும், கண்காணிப்புக் குழுவின் ஆய்வு முடிவுகளையும் ஏற்று முல்லைப் பெரியாறு அணையை வலுப்படுத்தி, அதன் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கான தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளித்திருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்வதற்கு கேரள அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

 

முல்லைப் பெரியாறு அணையின் அங்கமான பேபி அணைப் பகுதியில் உள்ள 15 மரங்களை வெட்டினால் மட்டும் தான் அணையை வலுப்படுத்த முடியும். ஆனால், கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசு பலமுறை கேட்டுக் கொண்ட பிறகும் கூட, அதற்கு கேரள அரசு அனுமதி அளிக்கவில்லை. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய வழக்கு தொடர்ந்த நிலையில் தான்,  இந்த விவகாரத்தைத் திசை திருப்பும் நோக்கத்துடன் புதிய அணையைக் கட்டப்போவதாக கேரள அரசு அறிவித்திருக்கிறது.

 

முல்லைப் பெரியாற்றின் நீர் எந்த வகையிலும் கேரளத்திற்கு தேவைப்படாது. அதனால், புதிய அணை  கட்ட வேண்டிய தேவை இல்லை. ஆனாலும், முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரளம் பிடிவாதம் பிடிப்பதன் நோக்கம், அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்படுவதைத் தடுக்க வேண்டும் என்பது தான். முல்லைப் பெரியாறு அணையின் நீர்த் தேக்கப் பகுதிகளில் ஏராளமான சொகுசு விடுதிகளும், கேரளப் பிரபலங்களின் மாளிகைகளும் கட்டப்பட்டுள்ளன. அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்பட்டால் அவை நீரில் மூழ்கி விடும். அவற்றைக் காக்கவே அணையின் நீர்மட்டத்தை உயர்த்த விடாமல் தடுக்கும் நோக்கத்துடன் புதிய அணை கட்டப்பட வேண்டும் என்ற முழக்கத்தை எழுப்பி கேரள அரசு நாடகம் ஆடி வருகிறது. இந்த முயற்சி முறியடிக்கப்பட வேண்டும்.

 

முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய கேரள அரசே ஒரு நிறுவனத்தை நியமிப்பதும், அந்நிறுவனத்தின் அறிக்கையை ஆய்வு செய்ய கேரள அரசே வல்லுநர் குழுவை அமைப்பதும், அதன் பரிந்துரையை கேரள அரசே ஏற்றுக் கொள்வதும் திட்டமிடப்பட்ட நாடகம் என்பதைத் தவிர வேறல்ல. இந்த நாடகத்தை எவரும் நம்ப மாட்டார்கள்.

 

கேரள அரசின் இந்த நாடகத்தை தமிழக அரசு அம்பலப்படுத்த வேண்டும். பேபி அணை பகுதியில் உள்ள மரங்களை வெட்ட அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விரைவாக விசாரணைக்கு கொண்டு வந்து அனுமதி பெற வேண்டும். அந்த மரங்களை அகற்றி அணையை வலுப்படுத்தும் பணிகளை விரைவாக முடித்து, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை முன்பிருந்தவாறு 152 அடியாக உயர்த்த தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

9 ஆண்டுகளாக ஓட்டுப் போட முடியாமல் தவிக்கும் பெண்; காரணம் என்ன?

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Woman unable to vote for 9 years in kerala

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொது மக்கள் என அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதே வேளையில், கடந்த 9 ஆண்டுகளாக கேரள பெண் ஒருவர் வாக்களிக்க முடியாமல் தவித்து வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம், ஷொர்ணாவூர் அருகே குருவாயூரப்பன் பகுதியைச் சேர்ந்தவர் உஷா (62). இவர் கடைசியாக, 2016ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் போது வாக்களித்துள்ளார். அப்போது, அவர் வாக்களித்தன் சான்றாக தேர்தல் ஆணையத்தின் சார்பாக அதிகாரிகள் அவருடைய ஆள்காட்டி விரலில் ‘மை’ வைத்துள்ளார்கள். வழக்கமாக அங்கு வைக்கப்படும் ‘மை’ சில நாட்களில் தானாகவே அழிந்துவிடும். ஆனால், உஷாவுக்கு நீண்ட நாட்களாகியும் அழியவில்லை. இதில் குழப்பமடைந்த உஷா, சோப்பு உள்ளிட்ட பல பொருட்களைப் பயன்படுத்தி மையை அழிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், மை அழியவில்லை.

இதனையடுத்து, உஷா கடந்த 2019ஆம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தல் மற்றும் 2021ஆம் ஆண்டில் நடந்த சட்டசபைத் தேர்தலிலும் வாக்களிக்க சென்றுள்ளார். ஆனால், அவரது விரலில் மை இருப்பதைக் கண்ட அதிகாரிகள், அவருக்கு வாக்களிக்கும் அனுமதியை மறுத்துவிட்டனர். இதில் மனமுடைந்த உஷா, இன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தனது ஜனநாயக கடமையை ஆற்ற வாக்குச்சாவடிக்கு சென்றுள்ளார். ஆனால், இப்போதும் அவரது விரலில் மை இருப்பதால் அவர் வாக்கை செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். 

Next Story

“தாமரை மலர வேண்டும்” - கீர்த்தி சுரேஷின் தாயார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
keerthy suresh mother menaka said bjp will win in election 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில் முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளில் நடந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளில் நடந்து வருகிறது. 

காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கேரளாவில் மோலிவுட் திரைபிரபலங்கள் ஃபகத் ஃபாசில், டோவினோ தாம்ஸ், மம்மூட்டி, பார்வதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாக்களித்தனர். மேலும் நடிகையும் கீர்த்தி சுரேஷின் தாயாருமான மேனகா சுரேஷ் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எந்த ஒரு விஷயத்திலும் மாற்றம் இருந்தால் தான் அது நல்லா இருக்கும். கடந்த 15 வருடத்தில் திருவனந்தபுரத்தில் எந்த மாதிரியான ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். 

அதிலிருந்து ஒரு புதிய ஆட்சி வந்தால் நல்லா இருக்கும். அப்போது தான் நமக்கு மாற்றங்கள் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்பது தெரியும். தாமரை மலர வேண்டும். அது என் ஆசை. கேரளாவில் பிஜேபி வந்ததேயில்லை. எல்டிஎப், யூடிஎப் இவர்களைத் தாண்டி ஒரு மாற்றம் வந்தால் நல்லா இருக்கும். பத்து தடவை கீழே விழுந்தால் பதினொறாவது முறை எழுவது இல்லையா. அதனால் மாற்றம் வரும். அந்த நம்பிக்கை இருக்கு. கேரளாவில் தாமரை மலர அதிக வாய்ப்பிருக்கு. சுரேஷ் கோபி கண்டிப்பாக ஜெயிப்பார்” என்றார்.