Skip to main content

சட்டப்படிப்பில் முனைவர் பட்டம் பெற்ற தமிழக வழக்கறிஞர்!

Published on 10/09/2020 | Edited on 10/09/2020
Supreme Court Advocate Ram Shankar

 

 

உச்சநீதிமன்ற வழக்கறிஞரும், டெல்லி தமிழ் வழக்கறிஞர்கள் சங்க செயலாளருமான திரு. ராம் சங்கர் சட்டப் படிப்பில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.   

 

தமிழகத்தின் ராஜபாளையத்தை சேர்ந்த வழக்கறிஞர் ராம் சங்கர் கடந்த 2012 முதல் டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர் இந்துக்களின் புண்ணிய நதியாக கருதப்படும் கங்கை நதியை பாதுகாக்கவும், தேசிய மேல்முறையீட்டு நீதிமன்றங்களை சென்னை, மும்பை, கல்கத்தா போன்ற பெருநகரங்களில் அமைக்க வழி செய்ய வேண்டி உட்பட பல்வேறு முக்கிய வழக்குகளில் உச்சநீதிமன்றத்தில் வாதாடி பல நல்ல தீர்ப்புகளை பெற்றுள்ளார்.

 

அகில இந்திய பார் கவுன்சிலின் சிறப்பு வழக்கறிஞராக பணியாற்றிவரும் ராம் சங்கர் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் சிறப்பு வழக்கறிஞராகவும் பணியாற்றி வருகிறார். இவர் சட்டப்படிப்பில் முனைவர் பட்டம் பெறுவதற்கான நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்று இந்தியாவில் புகழ்பெற்ற ஜி. டி. கோயங்கா பல்கலைக்கழகத்தில் பகுதி நேர ஆராய்ச்சி மாணவராக சேர்ந்து, கடந்த நான்கு ஆண்டுகளாக குஜராத் தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திரு. சாந்தகுமார் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்படி  "இந்திய  உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகளின் தேர்வு" என்ற தலைப்பில் ஆராய்ச்சி மேற்கொண்டார். 

 

Supreme Court Advocate Ram Shankar

 

 

அவரது ஆராய்ச்சியில் உச்ச நீதிமன்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் எவ்வாறு, எதன் அடிப்படையில், யார் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பது பற்றியும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் அதற்கான சிறப்பு அதிகாரங்கள் இருந்தும் அதை இந்திய நீதித்துறை ஏன் பின்பற்றுவதில்லை என்றும், அரசியலமைப்பு சட்டத்தில் இல்லாத "கொலிஜியம்" என்ற பெயரில் நீதிபதிகளை தேர்வு செய்து பணியமர்த்துவதில் உள்ள சாதக பாதகங்கள் குறித்தும் மற்ற வெளிநாடுகளில் நீதிபதிகள் எவ்வாறு தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பது பற்றியும் விரிவாக ஆராய்ந்து பல தகவல்களை தனது  விளக்க உரையில் சமர்ப்பித்திருந்தார்.   

 

ராம் சங்கரின் விளக்கமான விரிவான ஆராய்ச்சிக் கட்டுரை பல்கலைக்கழக மானிய குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டு அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து ராம் சங்கருக்கு ஜி.டி. கோயங்கா பல்கலைக்கழகம் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி முனைவர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது. முனைவர் பட்டம் பெற்ற ராம் சங்கரை முன்னாள் உச்ச நீதிமன்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் திரு. செல்லமேஸ்வர், திரு. நாகப்பன், திருமதி. விமலா உள்ளிட்ட நீதிபதிகளும் மதுரை ஆதீனம் உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்கள் மற்றும் வழக்கறிஞர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விவிபேட் வழக்கு; உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Supreme Court verdict for case of Vvpad 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தைப் பற்றி பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பி இருந்தனர். அதாவது இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று முன்தினம் (24.04.2024) விசாரணைக்கு வந்தபோது தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்திருந்தனர்.

இந்த வழக்கு விசாரணையின் போது, “தேர்தல் நடக்கும் முறை குறித்து எந்தவொரு சந்தேகமும் அச்சமும் இருக்க கூடாது. ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்த தகவல்களில் ஏன் முரண்பாடுகள் உள்ளன. கண்ட்ரோலிங் யூனிட்டில் மைக்ரோ கண்ட்ரோலர் நிறுவப்பட்டுள்ளதா? அல்லது விவிபேட்டில் உள்ளதா?. மைக்ரோ கண்ட்ரோலர் கருவி ஒருமுறை மட்டுமே மென்பொருளை பதிவேற்றம் செய்யக் கூடியதா?. கண்ட்ரோல் யூனிட் மட்டும் சீல் வைக்கப்படுமா? விவிபேட் இயந்திரம் தனியாக வைத்திருக்கப்படுமா? மைக்ரோ கண்ட்ரோலர் என்பது ஒருமுறை மட்டும் புரோகிராம் செய்யக்கூடியதா?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தன. மேலும், ‘ஒப்புகைச் சீட்டு விவகாரத்தில் சில சந்தேகங்கள் உள்ளன’ என நீதிபதி சஞ்சீவ் கண்ணா தெரிவித்திருந்தார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட தேர்தல் ஆணைய அதிகாரி ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது விவிபேட் இயந்திரம் தொடர்பாக தங்களுக்கு எழுந்துள்ள தொழில்நுட்ப சந்தேகங்கள் குறித்து ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். 

Supreme Court verdict for case of Vvpad 

இதனையடுத்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கையில், “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், விவிபேட், கட்டுப்பாட்டுக் கருவிகளில் தனித்தனி மைக்ரோ கண்ட்ரோலர்கள் உள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலர்களில் எந்த மாற்றமும் செய்ய முடியாது. தேர்தல் முடிந்த பிறகு இந்த மூன்று கருவிகளும் சீல் வைக்கப்படும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் செய்யப்பட்டுள்ள புரோகிராம்களை மாற்ற முடியாது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்துவதற்காக 4 ஆயிரத்து 800 கருவிகள் உள்ளன. அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள தகவல்கள் 45 நாட்கள் பாதுகாத்து வைக்கப்படும். 46ஆவது நாளில் உயர்நீதிமன்றத்தை தொடர்புகொண்டு வழக்குகள் ஏதும் தொடரப்பட்டுள்ளதா என கேட்டறியப்படும். அப்போது தேர்தல் தொடர்பான வழக்குகள் தொடரப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட தகவல்கள் பாதுகாத்து வைக்கப்படும்” எனத் தெரிவித்தனர். 

Supreme Court verdict for case of Vvpad 

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “தேர்தல்களில் முறைகேடு நடந்ததாக இதுவரை எந்த ஆதாரமும் தரப்படவில்லை. அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் கிடைத்துள்ளது” எனத் தெரிவித்து இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில் விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் 100 சதவித ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக்கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கியது. அதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) வாக்குகளை அவற்றின் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய ஒப்புகைச் (VVPAT) சீட்டுகள் மூலம் 100 சதவீதம் சரிபார்க்கக் கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 

Supreme Court verdict for case of Vvpad 

இந்த வழக்கில் தீர்ப்பை வாசித்த நீதிபதிகள், “தேர்தல் ஆனையம் கொடுத்த அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த ஆதரங்களையும், அதற்கான வாதங்களையும் முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம். எனவே வாக்குச்சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த உத்தரவிட முடியாது” எனத் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இரண்டு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. ஒரு முறையில்  சின்னம் பதிவு செய்யும் செயல்முறை முடிந்ததும், சின்னம் பதிவேற்றும் இயந்திரத்தை (SLU) சீல் வைக்க வேண்டும். வாக்குகள் எண்ணி முடித்த பின் அவை குறைந்தது 45 நாட்களுக்கு சேமிக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.  

Next Story

‘கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கம்’ - போக்குவரத்துத் துறை தகவல்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Transport Department Information for Additional Special Bus Operation

முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் மக்கள் தொடர்பு இணை இயக்குநர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “இன்று வெள்ளிக்கிழமை முகூர்த்த நாள் (26/04/2024) என்பதாலும், நாளை சனிக்கிழமை (27/04/2024) மற்றும் நாளை மறுநாள் ஞாயிறு (28/04/2024) என வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று (26/04/2024) 280 பேருந்துகளும், நாளை (27/04/2024) 355 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. அதே போன்று சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று (26/04/2024) மற்றும் நாளை (27/04/2024) 55 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, தினசரி இயக்கக் கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இன்று அன்று 280 பேருந்துகளும் மற்றும் நாளை 355 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து 55 பேருந்துகளும் மேற்கண்ட இடங்களிலிருந்தும் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார இறுதி நாளான இன்று 9 ஆயிரத்து 276 பயணிகளும், நாளை 5 ஆயிரத்து 796 பயணிகளும் மற்றும் நாளை மறுநாள்  8 ஆயிரத்து 894 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் மொபைல் செயலிமூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் இந்த வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.