ADVERTISEMENT

நான் வரேன்.. மத்திய அரசுக்கு சிக்னல் கொடுத்த கமல்

03:47 PM May 27, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

தற்போது செயல்பட்டு வரும் நாடாளுமன்றக் கட்டடம் 96 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் 1927 ஆம் வருடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்றக் கட்டடத்தின் கட்டுமானம், பாதுகாப்பு வசதிகள் குறைவு மற்றும் இட வசதி குறைவு காரணமாக புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த நிலையில் புதிய கட்டடம் கட்டுவதற்கான திட்டத்திற்கு பிரதமர் மோடி கடந்த 2020 டிசம்பர் 10 ஆம் தேதி அடிக்கல் நாட்டினார்.

கட்டுமானப் பணிகள் முடிந்த நிலையில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் நாளை மே 28-ம் தேதி சவார்க்கர் பிறந்த நாளன்று பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட உள்ளது. மேலும் நாடாளுமன்றக் கட்டட திறப்பு விழாவுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், "புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை குடியரசுத் தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும். பிரதமர் அல்ல" எனப் பதிவிட்டிருந்தார். நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கு பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் சபாநாயகரின் இருக்கை அருகில் செங்கோல் ஒன்று நிறுவப்பட உள்ளது.

தொடர்ந்து திமுக, விசிக, மதிமுக உட்பட 19 எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றம் திறப்பு விழாவினை புறக்கணிப்பதாக கூட்டாக அறிவித்துள்ளன. அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், "நாட்டின் முதல் குடிமகனாக பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தேர்ந்தெடுக்கப்பட்டதன் நோக்கத்தையே மோடி அரசு சீர்குலைத்துவிட்டது; குடியரசுத் தலைவர் ஒப்புதலின்றி நாடாளுமன்றமே செயல்பட முடியாது என்ற நிலை உள்ளபோது, அவர் இல்லாமல் புதிய நாடாளுமன்றத்தை திறப்பது அரசியலமைப்பை மீறும் செயல்" என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

தொடர்ந்து பிரதமர் மோடி நாடாளுமன்றக் கட்டடத்தைத் திறந்து வைப்பதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை ஜனாதிபதி திறந்து வைக்க ஆணையிடக் கோரியும் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை திறக்க ஜனாதிபதியை அழைக்காததின் மூலம் அரசியல் சட்டத்தை மக்களவைச் செயலகம் மீறி விட்டதாகவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் நரசிம்ஹா, மகேஸ்வரி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘புதிய நாடாளுமன்றக் கட்டட திறப்பு விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை’ எனச் சொல்லி தள்ளுபடி செய்தனர். அதேபோல், மனுதாரர் தான் தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெற்றார்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், "புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவரை அழைக்காததால் தேசத்தின் பெருமிதம் அரசியல் ரீதியாக பிளவுபட்டுள்ளது; திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் ஏன் கலந்து கொள்ளக் கூடாது என்பதை நாட்டிற்குச் சொல்ல வேண்டும்; நாடாளுமன்றத்தின் புதிய வீட்டில் அதன் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வசிக்க வேண்டும்; தேசிய நலன் கருதி புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை உங்களுடன் கொண்டாட முடிவு செய்துள்ளேன்; ஜனநாயகத்தை நான் நம்புகிறேன்; எனவே, நிகழ்வைப் புறக்கணித்துள்ள எதிர்க்கட்சிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT