ADVERTISEMENT

“ஆளுநர் ஒன்றும் ஆண்டவர் அல்ல...” - அமைச்சர் சேகர்பாபு பேட்டி

11:25 AM May 10, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

“ஆளுநர் பவன் போல் இல்லாமல் அரசியல் பவனாக ஆளுநர்கள் மாற்றுக்கருத்து கூறும் பொழுது அதற்கு பதில் சொல்லும் கடமை ஆட்சி செய்யும் அரசுக்கு இருக்கிறது” என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், “ஆளுநர்கள் குறித்து தவறான கருத்துகளைக் கூறுகிறார்கள். மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கும் அதிகாரங்கள் உள்ளது. அதேபோல் ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றாலும் சில அதிகாரங்கள் அவர்களுக்கு உள்ளது. ஆளுநருக்கு அதிகாரமில்லை என்றால் திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது ஏன் ஆளுநரைச் சந்தித்தார்கள். எல்லோரையும் மரியாதையுடன் பேச வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

தமிழிசையின் இந்த கருத்து குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, ''அவர் அரசியல்வாதியாக இருக்கும் பொழுது ஒரு நிலை எடுப்பார். அவர் தற்பொழுது ஆளுநராக இருப்பதால் இந்த நிலையை எடுத்திருக்கிறார். எங்களை பொறுத்தவரை அதிகாரமிக்க ஒருவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள் தான். மக்கள் பிரதிநிதிகளை மையப்படுத்தி தான் ஆட்சியும், அரசும், மக்களும் சுழல்வார்களே தவிர எதுவும் ஆளுநரை மையப்படுத்தி சுழலாது. ஆளுநருடைய அனைத்து கேள்விகளுக்கும் தமிழக முதல்வர் நேற்று முன்தினம் நடைபெற்ற பல்லாவரம் கூட்டத்தில் தெளிவாகப் பதில் சொன்னார். ஆளுநர் முதல்வரை நண்பர் எனக் கூறியதை வரவேற்கிறேன் என்று சொல்லிவிட்டு நட்பிற்காக கொள்கையை விட்டுக் கொடுக்கின்ற கட்சி திமுக அல்ல; தமிழக முதல்வர் அல்ல என்பதை தெளிவாகச் சொல்லியிருக்கிறார். நட்பு என்பது வேறு கொள்கை என்பது வேறு.

அதேபோல் ஆளுநர், ஆளுநருக்கு உண்டான இடத்தில் இருக்கின்ற பொழுது அனைத்து மரியாதையும் புகழும் ஆளுநரைச் சாரும். ஆளுநர் அவரது பதவியை மறந்து ஆளுநர் பவன் போல் இல்லாமல் அரசியல் பாவனாக மாற்றுக்கருத்து கூறும் பொழுது அதற்கு பதில் சொல்லும் கடமை ஆட்சி செய்யும் அரசுக்கு இருக்கிறது. ஆளுநர் எதை வேண்டுமானாலும் பேசலாம், கேட்டுக்கொள்ள வேண்டும் எனச் சொன்னால் எங்கள் தோல் ஒன்றும் மரத்துப் போகவில்லை. உணர்ச்சி மிக்க ஒரு இயக்கம் திமுக. உணர்வுப்பூர்வமான முதல்வர் இருக்கிறார். நிச்சயம் அவர் சொல்லுகின்ற குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லியே தீருவோம். ஆளுநர் ஒன்றும் ஆண்டவர் அல்ல'' என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT