ADVERTISEMENT

நடப்பு அரசுக்கு நன்றி: திமுக ஆட்சியை வாழ்த்திய முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.ஸ்!

11:53 AM May 27, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தேனி மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் கரோனா தடுப்பு சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தலைமை தாங்கினார். இதில் முன்னாள் துணை முதல்வர் ஓபிஎஸ், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் கம்பம் ராமகிருஷ்ணன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் உட்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். இந்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய முன்னாள் துணை முதல்வர் ஓபிஎஸ், “கடந்த ஆண்டு மார்ச் மாதம் கரோனா பாதிப்பு ஏற்பட தொடங்கியது. இது தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இதன் பாதிப்பு மிகவும் குறைந்த அளவில் இருந்தது. அம்மாவின் அரசு எடுத்த நல்ல பல நடவடிக்கையால் பாதிப்பு குறைந்தது.

இந்த வைரஸ் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதையும் ஆட்சியில் இருக்கும் அரசு சவாலாக எடுத்து, பாதிப்பைக் குறைக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. அதற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். இது தேசிய பேரிடர், அரசுக்கு மட்டுமே பொறுப்பு உள்ளது என்று நமது கடமை, பொறுப்பை தட்டிக் கழிக்காமல் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டோம் என்றால் முழுமையாக இந்த வைரஸை நாட்டில் துடைத்து அகற்ற முடியும். பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உயிர்களைக் காக்கும் கடமை உணர்வு நம் அனைவருக்கும் உள்ளது. இந்த இரண்டாவது அலையின் தாக்கம், நகர் பகுதிகளைவிட கிராமப்புற பகுதிகளில் அதிக அளவில் இருக்கிறது. குறிப்பாக போடி நகரை எடுத்துக்கொண்டால், 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். போடி ஒன்றியப் பகுதியில் 200க்கும் மேற்பட்டவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்திலிருந்து லாரிகள் வெளிமாநிலங்களுக்குச் சென்றுவருகின்றன. அவ்வாறு சென்று திரும்பிவரும் ஓட்டுநர்கள், தொழிலாளர்களுக்கு உடனடியாக உரிய பரிசோதனை நடத்த வேண்டும். தேனியில் இருந்து கேரளாவுக்குத் தினமும் விவசாயப் பணிகளுக்காகச் செல்லும் சூழலில் 5 ஆயிரம் பேர் உள்ளனர். அவ்வாறு சென்றுவரும் விவசாயிகளுக்கும் கரோனா பரிசோதனை நடத்த வேண்டும். கர்ப்பிணிகள் கர்ப்ப காலம்முதல் பிரசவ காலம்வரை அவர்களுக்கு தனிக்கவனம் செலுத்த வேண்டும். நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். கரோனா தடுப்புப் பணியை மிகப் பெரிய விழிப்புணர்வு இயக்கமாக மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சையைத் தொடர்ந்து மஞ்சள் பூஞ்சை நோய் தாக்குதல் ஏற்படுகிறது. இந்த நோய் பாதிப்பு எதனால் ஏற்படுகிறது என மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கண்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி, பார்வையை இழக்கும் சூழல் உள்ளதால் அரசு கவனமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா பாதிப்பைத் தடுக்க அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் நாம் உறுதுணையாக இருப்போம்” என்று கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT