ADVERTISEMENT

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள்; ஓபிஎஸ் - இபிஎஸ் மரியாதை

10:26 AM Feb 24, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் 75 ஆவது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அவரின் புகைப்படம், சிலை போன்றவற்றிற்கு அரசியல் கட்சித் தலைவர்களும் பிரபலங்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். மேலும், இணையத்தில் பதிவிட்டும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பதிவில், “இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அஇஅதிமுக மக்களுக்காகவே இயங்கும்" என சூளுரைத்து, துரோகிகளையும்,எதிரிகளையும் தகர்த்தெறிந்து கழகத்தை காத்து, கல்லும் கனியாகும் கருணையால் மக்களுக்காக அள்ளி அள்ளி நலத்திட்டங்களைக் கொடுத்து எல்லோர்க்கும் அன்னையெனத் தொண்டாற்றி, மகத்தான சாதனைகள் பல புரிந்த மக்கள் தலைவி,சரித்திர வெற்றிகளும் மாறாப் பெரும் புகழும் கொண்ட புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பவள விழா பிறந்தநாளில், நூற்றாண்டுக் கனவை நிறைவேற்ற உறுதியேற்று அவர் தம் புகழைப் போற்றி வணங்குகிறேன்” எனக் கூறியுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், “எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற இலட்சியத்துடன் தமிழக மக்களுக்காக, அயராது உழைத்த மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 75வது பிறந்த நாளான இன்று அவரது சாதனைகளை நினைவுகூர்ந்து அவரது வழியில் பயணிப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின் 75வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. அவர் கொண்டு வந்த எண்ணற்ற மகளிர் மற்றும் சமூக நலத் திட்டங்கள் காலமெல்லாம் அவர் நினைவைப் போற்றும்” என்று தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன், “பணிந்து நின்றுதான் பணிசெய்ய வேண்டும் என்பதில்லை... துணிந்து நின்றும் பணி செய்யலாம் என்பதனை நிரூபித்த பெண் ஆளுமை மரியாதைக்குரிய முன்னாள் முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களின் பிறந்த தினமான இன்று அவரது நினைவைப் போற்றுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT