Skip to main content

"தலைவர் படம்தான் எங்களுக்கு தீபாவளியே!" - சி.ஆர்.சரஸ்வதி  

விவாதங்களில் எத்தனை பேர் இருந்தாலும் இவரது குரல் தனியே ஒலிக்கும். அதிமுகவில் இருந்த போதும், இப்பொழுது அமமுகவில் இருக்கும்போதும் சுழன்று சுழன்று கூட்டங்கள், பேட்டிகள், விவாதங்கள் என சுற்றி வருகிறார் அமமுக செய்தித் தொடர்பாளரும், நடிகையுமான சி.ஆர்.சரஸ்வதி. தீபாவளியை முன்னிட்டு அவரிடம் ஒரு நான்-பொலிட்டிக்கல் பேட்டி எடுத்தோம்...

 

c.r.saraswathyபொதுவாக தீபாவளியை எப்படி கொண்டாடுவீங்க?

பொதுவாக தீபாவளி, பொங்கல் பண்டிகைகளை சிறப்பாகக் கொண்டாடுவோம். தீபாவளியை விட பொங்கல் பண்டிகையை எனது சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் கிராமத்தில்தான் கொண்டாடுவோம்.

இப்போதெல்லாம் டிவி, செல்போனில் படம் பார்க்கிறோம். நாங்க சின்ன வயதாக இருக்கும்போது, சினிமாவுக்கு அழைத்துச் செல்ல மாட்டார்கள். வீட்டில் அடம் பிடித்து, குறிப்பாக எம்.ஜி.ஆர். படங்கள் ரிலீஸாகும்போது அதை பார்த்தே ஆகனுமுன்னு அழுது புரளுவேன், பிறகு அழைத்துச் செல்வார்கள். தலைவர் எம்ஜிஆர் படத்தைப் பார்க்க பெரும் கூட்டமே திரளும். அதுதான் எங்களுக்கு தீபாவளி. பிறகு அந்தப் படம் வெற்றி பெற்ற பின்னர் எங்களுக்கு இன்னொரு தீபாவளின்னு கொண்டாடுவோம்.
சினிமாவுக்கு வந்த பிறகு நான் நடிச்ச படங்கள் தீபாவளிக்கு வருதுன்னு சந்தோஷப்படுவேன். வெற்றி பெற்ற பின்னர் கூட நடிசவங்களோட சந்தோஷத்தை பகிர்ந்துகொள்வேன்.

அதிமுகவில் இணைந்த பிறகு வருடம்தோறும் தீபாவளிக்கு அம்மாவை (ஜெயலலிதா) இல்லத்திற்கு சென்று சந்தித்து புத்தகங்களை பரிசாக அளிப்பேன். பொதுவாக அனைவரும் புத்தாண்டு அன்றுதான் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பார்கள். ஆனால் நான் தீபாவளிக்கு வாழ்த்து தெரிவிப்பேன். அதற்கு அவர் 'நன்றி கடிதம்' அனுப்புவார். வாழ்த்து தெரிவித்த அனைவருக்குமே நன்றி தெரிவித்து கடிதம் அனுப்புவார்.

இப்போது அவரது மறைவுக்குப் பிறகு தீபாவளியை நான் கொண்டாடுவதில்லை. எங்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஒரு போராட்டக் களத்தில் உள்ளது. எங்களது போராட்டம் வெற்றி பெற்ற பிறகுதான் எங்களுக்கு தீபாவளி, பொங்கல் பண்டிகையெல்லாம். எங்களது போராட்டம் வெற்றி பெற்று அடுத்த வருடம் தீபாவளி, பொங்கல் பண்டிகையை கொண்டாடுவோம்.

உங்கள் சினிமா வாழ்க்கை பற்றி...

'எங்க சின்ன ராசா'தான் நான் நடிச்ச முதல் படம். அதில் தொடங்கி தமிழ், தெலுங்கு எல்லாம் சேர்த்து 85 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன். முழு நேர அரசியலுக்கு வந்த பின் நடிப்பதை நிறுத்திவிட்டேன்.

 

c,r,saraswathi enga chinna rasaநடிக்க வாய்ப்பு வரவில்லையா? வேண்டாம் என்று விட்டுவிட்டீர்களா?

ஏதாவது ஒன்றில்தான் டிராவல் பண்ண முடியும். எங்கேயாவது ஷூட்டிங்கில் இருக்கும்போது, கூட்டத்திற்கு நேரம் ஆகுது வரவில்லையா என்பார்கள். கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கும்போது, ஏதாவது விவாத்தில் கலந்து கொண்டிருக்கும்போது ஷூட்டிங் நேரத்திற்கு வரவேண்டாமா என்பார்கள். எதற்கு இதெல்லாம்... அதான் முழு நேர அரசியல் என்று முடிவு எடுத்துவிட்டேன்.

பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். வருடத்தில் ஒரு நாள் கிடைக்கும் மகிழ்ச்சியில் இப்படி கட்டுப்பாடு விதிப்பது சரியா என்று பலரும் கேட்கிறார்கள். உங்கள் கருத்து என்ன?

குழந்தைகளை நினைச்சாதான் கஷ்டமாக இருக்கிறது. மாசில்லாத சுற்றுச்சூழலை பேணிக்காப்பது ஒவ்வொருவரின் கடமை. அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. அதேநேரத்தில் மாசில்லா தீபாவளியை கொண்டாடுவோம் என்று நீதிமன்றம், சமூக ஆர்வலர்கள் சொன்னதற்கு பின்னர் நிறைய மாறி இருக்கிறது. தற்போது அதிக ஒலி எழுப்பும் வெடிகளை பொதுமக்கள் வெடிப்பதில்லை. முன்னரெல்லாம் விடிய விடிய வெடிப்பார்கள். அதுபோன்றெல்லாம் இப்போது இல்லை. 10 மணிக்கு மேல் யாரும் வெடிப்பது இல்லை. மேலும் அதிக புகை, ஒலி வரக்கூடிய பட்டாசுகளை தயாரிப்பதும் இல்லை, அதுபோன்ற பட்டாசுகளை பொதுமக்கள் வாங்குவதும் குறைந்துவிட்டது.

தீபாவளிக்கு மட்டுமா பட்டாசுகளை பயன்படுத்துகிறார்கள்? நல்லது கெட்டது, திருவிழா உள்பட எல்லாவற்றிக்கும் பட்டாசுகளை வெடிக்கிறார்கள். இந்த விசயத்தைப் பொறுத்தவரை தமிழக அரசு தன்னோட வாதத்தை சரியாக எடுத்து வைக்கவில்லை. சிவகாசியில் இந்தத் தொழிலை நம்பி பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இருப்பதை நினைத்து பார்த்திருக்கலாம்.

 

 


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்