ADVERTISEMENT

‘மத்திய பட்ஜெட்: ஏமாற்றம் தருகிறது!’ - வைகோ 

08:57 AM Feb 02, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

நடப்பு நிதி ஆண்டிற்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை நேற்று (01.02.2021) தாக்கல் செய்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். மத்யிய அரசின் இந்தப் பட்ஜெட், கார்ப்பரேட் முதலாளிகளுக்கான பட்ஜெட் என பல தரப்பிலும் கண்டிக்கப்படுகின்றன. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மதிமுக தலைவர் வைகோ, "மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள 2021 - 22 நிதி ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் பொருளாதார மீட்சிக்கான வழி வகையை உருவாக்கி இருப்பதற்கான அறிகுறி இல்லை.

கடந்த ஆண்டில் கரோனா பெரும் துயரத்தால் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு நாடே நிலைகுலைந்தது. கடந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மைனஸ் 23.9 சதவீதமாக சரிந்தது என்று உலக வங்கி கணித்தது. அதேபோல 2020-21 நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் மைனஸ் 9.6 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது என்றும் கூறியது. ஆனால் பொருளாதார ஆய்வறிக்கையில் நடப்பு நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 11 சதவீதமாக இரட்டை இலக்கில் இருக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது.

ஆனால், மத்திய பட்ஜெட்டில் அதற்கான சாத்தியக் கூறுகள் தென்படவில்லை. ஏனெனில் நிதிப் பற்றாக்குறை 6.8 சதவீதமாக மதிப்பிடப்பட்டு இருக்கிறது. மேலும் 2020 - 21இல் ரூபாய் 16 இலட்சம் கோடி வரி வருவாய் ஈட்ட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் 2020 நவம்பர் வரையில் ரூபாய் 7 இலட்சம் கோடி ரூபாய் மட்டுமே வரி வருவாய் கிடைத்துள்ளது. வருவாய் பற்றாக்குறையை எவ்வாறு ஈடுகட்டப் போகிறது மத்திய அரசு?

கரோனா காலத்தில் கடந்த ஆண்டு தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் 27 இலட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. ஆனால் 2019 - 20 நிதியாண்டில் முந்தைய அரையாண்டில் சாதாரண சூழலில் செய்யப்பட்ட செலவைவிட, 2020 - 2021 நிதியாண்டின் அரையாண்டில் கரோனா சூழலில் செய்யப்பட்ட செலவு குறைவானது என்று சி.ஏ.ஜி. ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

வங்கிகளின் வாரா கடன் அதிகரிப்பு, ரிசர்வ் வங்கியின் வட்டி விகித அதிகரிப்பு போன்றவை பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனால் முதலீடுகள் குறைந்துவிட்டன. மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கடுமையாகப் போராடி வரும் நிலையில் அவற்றை திரும்பப் பெறுவதற்கு முனையாமல், வேளாண் சட்டங்களை உறுதிப்படுத்தும் வகையில் பட்ஜெட் அறிவிப்புகள் உள்ளன.

கரோனா பொது முடக்கத்தால் தொழில்துறை கடும் நெருக்கடியைச் சந்தித்தது. கார்ப்பரேட் பெரு நிறுவனங்களுக்கு 9 இலட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டது. இதனால் கடந்த ஆண்டில் 50 பெரு நிறுவனங்களின் சொத்து, சந்தை மதிப்பில் 3 இலட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. ஆனால் 1.20 கோடி தொழிலளர்கள் வேலை இழந்துள்ளனர்.

முறைசாரா தொழில்களில் பணியாற்றிய 94 சதவீதம் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். மத்திய பட்ஜெட்டில் வாழ்வாதாரம் பறிபோன தொழிலாளர்களுக்குப் பெரும் ஏமாற்றமே அளிக்கப்பட்டுள்ளது. புதிய வேலைவாய்ப்புகளுக்கான திட்டங்கள் இல்லை.

சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் மீண்டும் உற்பத்தியைத் தொடங்குவதற்கு உறுதியான ஊக்குவிப்புகள் எதுவும் இல்லை.

உலக நாடுகள் எதிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில்தான் மறைமுக வரி 300 சதவீதமாக இருக்கிறது. இருந்தபோதிலும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதனைக் கட்டுப்படுத்தாததால் விலைவாசி உயர்ந்துகொண்டே இருக்கிறது. மத்திய பட்ஜெட்டில் இதற்கான தீர்வு இல்லை. மக்களின் நுகரும் சக்தி குறைந்துகொண்டே போகும் நிலையில் பொருளாதார வளர்ச்சி எவ்வாறு அதிகரிக்கும்?

ஜி.எஸ்.டி. வரி வசூலிக்கும் அதிகாரத்தை மத்திய அரசு எடுத்துக்கொண்டு மாநிலங்களுக்கு உரிய பங்கை அளிக்கவும் இல்லை. மாநிலங்கள் கடன் வாங்கிக் கொள்ளட்டும் என்று மத்திய அரசு கூறுகிறது. இதனால் மாநிலங்கள் நிதிச் சுமையால் தவிக்கின்றன.

பொதுத்துறை நிறுவனங்களை விற்று 1 இலட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டவும், வருவாய் கிடைக்காத அரசு சொத்துக்களை விற்க தனி அமைப்பு ஏற்படுத்தப்படுவதையும் நிதி அமைச்சர் ஊக்கப்படுத்தி இருக்கிறார். இதனால் நாட்டின் பொதுத் துறைகளும், மக்கள் சொத்துக்களும் தனியார் பெரு நிறுவனங்களின் பிடியில் சென்று விடும்.

வங்கிகள் தனியார் மயம், காப்பீட்டுத் துறைப் பங்குகள் விற்பனை போன்றவை தொடருகின்றன. தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவோம் என்ற அறிவிப்பின் மூலம் பா.ஜ.க. அரசின் எதேச்சாதிகாரம் மாநிலங்களின் மீது திணிக்கப்படுவது பட்ஜெட்டில் வெளிப்படையாகத் தெரிகிறது.

தமிழக மக்களின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் சேலம் - சென்னை 8 வழி பசுமைச் சாலையை நடப்பு நிதி ஆண்டில் தொடருவோம் என்று நிதி அமைச்சர் அறிவித்திருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.

மதுரை - கொல்லம் நெடுஞ்சாலை, ஒருங்கிணைந்த பல்நோக்கு கடல் பூங்கா, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் போன்றவை தமிழக சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழக இரயில்வே திட்டங்கள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டு இருப்பது ஏமாற்றம் தருகிறது" என்று சுட்டிக்காட்டியுள்ளார் வைகோ.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT