ADVERTISEMENT

‘தமிழகத்தில் ‘குலேபகாவலி’ ஆட்சி’ - ராஜேந்திரபாலாஜி கிண்டல்

12:48 PM Sep 19, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

இராஜபாளையத்தில் விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில், விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ராஜேந்திரபாலாஜி பேசியபோது; “இந்த ராஜபாளையம் தொகுதியில் 3,500 வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றி பறிபோனது. 10 ஆண்டுகளாக ராஜேந்திரபாலாஜியை அமைச்சராக பார்த்த மக்கள், ஒரு மாற்றம் வேண்டும் என எண்ணிவிட்டார்கள். 1967-ல் அறிஞர் அண்ணா முதல்வராக பொறுப்பேற்றபோது, அவருக்கு புற்றுநோய் வந்தது. அமெரிக்காவில் வைத்தியம் பார்த்துவிட்டு சென்னைக்கு வந்தார். சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சியினர் சிகிச்சை செய்ததற்கு யார் பணம் கொடுத்தார்கள் என்று கேட்டபோது, எம்.ஜி.ஆர் எனத் தெரிவித்தார். மிகவும் சிரமத்திற்கு நடுவில், நடித்து சம்பாதித்த பணத்த அள்ளிக் கொடுத்த வள்ளல் எம்.ஜி.ஆர் உருவாக்கிய கட்சி அதிமுக. அண்ணாவுக்கு பிறகு உருவான தலைவர் கலைஞரால் அதிமுகவை அழிக்க முடியவில்லை. கலைஞருக்குப் பின்னால் வந்த ஸ்டாலினால் எப்படி அதிமுகவை அழிக்க முடியும்?

என்னை விரட்டி விரட்டி பிடித்தனர். என்னை துப்பாக்கி முனையில் கைது செய்தனர். நான் பயப்பட்டு அதிமுகவை விட்டு வெளியேறவில்லை. என் மீது பல வழக்குகள் டெல்லியில் நிலுவையில் உள்ளன. என்னை நாள் முழுவதும் காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். ஆட்டம் முடியப் போகிறது. அதிகாரத்திற்கு வந்தவுடன் தலைகால் தெரியாமல் ஆடக்கூடாது. நான் 10 வருடங்கள் மந்திரியாக இருந்தபோது யாரையும் மரியாதைக் குறைவாக நடத்தியது இல்லை.

ராஜபாளையம் கூட்டத்துக்கு வந்து கொண்டிருந்தபோது, ஒருவர் என்னைத் தடுத்து நிறுத்தி, நகர்மன்ற தலைவர் பவித்ரா.. அவங்க கணவரை கொலை செய்துவிட்டனர். பல கோடி கேட்டு அவரை இம்சை செய்து கொலை செய்து விட்டனர். அமைச்சராக இருந்தபோது, சேர்மன் விஷயத்தில் நான் தலையிட்டதே இல்லை. ஆனால், சேர்மன் விஷயத்தில் இப்போது அரசியல் தலையீடு அதிகமாக இருக்கிறது. பவித்ராவின் கணவர் ஷியாம் இறப்புக்கு ராஜபாளையத்தில் உள்ள அரசியல் மையம்தான் காரணம் என்று என்னிடம் தெரிவித்தார்கள்.

ஒன்றிய சேர்மன் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. அப்போது எந்த தில்லும் முல்லும் அதிமுக செய்யவில்லை. ராஜபாளையத்தில் இன்று அதிகார துஷ்பிரயோகம் நடக்கிறது. அதிகாரத்தில் தலையிடுவது அழிவுக்கு வழிவகுக்கும். தேவதானம் அருகே கண்மாய்கள் காணாமல் போகிறது. ஸ்டாலினுக்கு ஒரு கோரிக்கை, கட்சி நிர்வாகிகளை கட்டுப்படுத்த வேண்டுகிறேன். டிராக்டர், லாரி உள்ளிட்ட வாகனங்களுக்கு பல்வேறு திமுக கட்சி நிர்வாகிகள் வரி வசூல் செய்கின்றனர். அதிமுக ஆட்சியில் இது போன்ற எந்த தொல்லையும் இருந்ததில்லை. திமுகவுக்கு இதே வேலைதான். கலைஞர் ஆட்சியில் எட்டு மணி நேரம் மின்தடை என்றால்.. தற்போது ஸ்டாலின் ஆட்சியில் 10 மணி நேரம் மின்தடை. இதுதான் இருவருடைய ஆட்சிக்கும் உள்ள வித்தியாசம். மின் கட்டணம் உயர்ந்ததால், அதை ஈடு செய்வதற்கு அடிக்கடி மின்தடை ஏற்படுத்துகின்றனர்.

காப்பர் கிடைக்காத காரணத்தால் ரூ.13,000 விலையுள்ள மின் மோட்டார் சரி செய்ய ரூபாய் 15,000 வரை செலவு ஆகிறது என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். விவசாய மின் மோட்டார் ரூ.15 ஆயிரத்திலிருந்து ரூ.30,000 வரை விலை உயர்ந்துள்ளது. விவசாயிகள் வயிற்றில் அடிக்கின்ற ஆட்சி திமுக ஆட்சி. டாஸ்மாக் கடையில் கவர்மெண்ட் சரக்கு, கரூர் சரக்கு என இரண்டு வகை சரக்குகள் கிடைக்கிறது. தற்போது கட்டிங் அடித்தால் போதை ஏறுவதில்லை. தொழிலாளர்கள் வாங்கிய ஊதியம் அனைத்தையும் டாஸ்மாக்கில் தொலைக்கின்றனர். அதிமுக ஆட்சியில் அரிசி, பருப்பு, டாஸ்மாக் என அனைத்து பொருட்களும் ஒரிஜினலாக இருக்கும். தற்போது இட்லி கடையில், இட்லிக்கும் சட்னிக்கும் சாம்பாருக்கும் தனித்தனி விலை வைக்கிறார்கள். அதுவும் எடை போட்டு கொடுக்கின்றனர். இந்த கொடுமை அனைத்தும் திமுக ஆட்சியில் தான் நடக்கிறது.

அம்மா உணவகத்தில் ஐந்து ரூபாய் இருந்தால் வயிறார சாப்பிடலாம். தற்போது அதிலும் கை வைத்து விட்டனர். மே மாதம் ஆறாம் தேதி திமுக பதவி ஏற்ற பிறகு இதுவரை ராஜபாளையத்திற்கு மண்ணெண்ணெய் வரவில்லை. அடுத்து திமுகவுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பதால் கிடைத்ததைச் சுருட்ட வேண்டும் என்ற மனநிலைக்கு திமுகவினர் வந்துவிட்டனர். பத்து வருடம் அதிமுக ஆட்சி நடத்திய போதும் இந்த அளவுக்கு எதிர்ப்பு வரவில்லை. ஆனால் தற்போதுள்ள எதிர்ப்பால் திமுக விரைவில் வீட்டுக்கு சென்று விடும். நாடாளுமன்ற தேர்தல் வரப்போகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் என சட்டமன்ற தேர்தலையும் சேர்த்து வைத்து விடுவார்கள் என்று நினைக்கிறேன்.

அரசியலுக்கு வந்தால் சேவை மனப்பான்மையோடு தூய்மையாக ஆட்சி நடத்த வேண்டும். தளவாய்புரம் பகுதியில் செயல்படும் அரிசி ஆலைகளில் மாதம் ஒரு தொகை கட்சியினர் கமிஷனாக கேட்பதாக, அரிசி ஆலை அதிபர்கள் என்னிடம் சொல்கிறார்கள். அதிமுக ஆட்சியில் தொழில் துறைக்கு இடையூறு கொடுக்கப்பட்டதில்லை. தற்போது, நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் ஒரு மூடைக்கு 40 ரூபாய் லஞ்சமாக கொடுக்கிறார்கள். நியாயவிலைக் கடை ஊழியர்களை மிரட்டி திமுகவினர் பணம் வாங்குகிறார்கள். இது போன்ற செயல்கள் ஏழை எளிய மக்களைத்தான் பாதிக்கும்.

திமுக ஆட்சியில் ராஜபாளையத்திற்கு எந்த திட்டமும் கொண்டு வரப்படவில்லை. கடந்த ஆட்சியில் நான் கொண்டு வந்த ரயில்வே மேம்பாலம், பாதாள சாக்கடை, தாமிரபரணி திட்டங்கள் இன்றுவரை நிறைவடையவில்லை. இதை துண்டு பிரசுரங்கள் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று என்னுடன் இருந்தவர்கள் கூறியபோது, இதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் தெரியும் என்று கூறினேன்.

குடிநீர்த் திட்டப் பணிகள் இன்னும் நிறைவடையாத நிலையில் தண்ணீருக்கான வரி மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. குப்பைக்கும் வரி விதிக்கப்பட்டுள்ளது . இனி மனைவிக்கு வரி போடுவது ஒன்றுதான் பாக்கி. நின்றால் வரி, நடந்தால் வரி, உட்கார்ந்தால் வரி என குலேபகாவலி படத்தில் வருவது போல் இருக்கிறது. தற்போது திட்டப் பணிகள் நிறைவடையாத காரணத்தால் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் இதை கவனிக்காது. மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் வாங்கும் அதிகாரிகள்தான், மேம்பாட்டுப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். விரைவில் பணிகள் நிறைவடையாத பட்சத்தில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவோம்.

திமுகவை குற்றம் சொல்லி பெயர் வாங்கக்கூடாது. பாட்டு எழுதி பெயர் வாங்க வேண்டும். திமுக ஆட்சியில் ஒவ்வொரு வரி உயர்வின் போதும் வருமான வரிசோதனை அங்கங்கே நடக்கிறது. ஸ்டாலின் மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்று நினைத்தாலும் அவருடைய குடும்பம் பெரியதாக இருப்பதால், அவரால் அதைச் செய்ய முடியாது. திமுக ஆட்சியில்.. ஸ்டாலின் குடும்பத்தில் அதிகார மையங்கள் அதிகமாக இருக்கிறது. அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா தலைமையில் கட்டுக்கோப்பாக ஆட்சி நடந்தது.

மக்கள் நான் வெற்றி பெறவில்லை என்று இப்போது வருத்தப்படுகின்றனர். மாற்றம் வரும் என்ற மக்கள் நினைத்த நிலையில் ஏமாற்றம் வந்துவிட்டது. அனல் மின்சார உற்பத்தி மையம் பூட்டக்கூடிய சூழலில் உள்ளது. இதனால் மின் கட்டணம் உயரும். தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும். இதற்கு அரசினுடைய நிர்வாகச் சீர்கேடு தான் காரணம்.

தலைமைப் பொறுப்பில் இருக்கக்கூடிய ஸ்டாலின் நாள் ஒன்றுக்கு ஐந்து புகைப்பட ஷூட்டிங்கில் ஈடுபட்டு வருகிறார். விளம்பரத்தால் உயரும் வாழ்க்கை நிரந்தரமாகாது. உழைக்க வேண்டும், பிழைக்க வேண்டும். தமிழகத்திலே உழைக்கக் கூடிய 7 கோடி மக்களின் மனநிலை தற்போது மோசமாக உள்ளது. பொதுமக்களின் சிரமம் குறித்து முதல்வருக்கு கவலை இல்லை. அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் கடவுளை வணங்குகின்றனர். அவர்களின் நம்பிக்கையை புண்படுத்தும் நோக்கில் அவர் நடந்து வருகிறார். அனைத்து மத கடவுள்களையும் வணங்குவதால்தான் இன்றும் நான் நிலைத்து இருக்கிறேன். ஆனால் ஸ்டாலின் ஒரு மதத்தை மட்டும் குறிப்பிட்டு குற்றம் சாட்டி பேசுவார்.

ஆட்சியில் இருக்கும் வரை அதிகார போதையில் எதுவும் கண்ணுக்குத் தெரியாது. கடந்த ஆட்சியில் இருந்த அதிமுகவுக்கு டப்பா தான் கழன்றது. திமுகவுக்கு டாப்பே கழன்றுவிடும். திமுக ஆட்சி மக்கள் விரோத ஆட்சியாக இருக்கிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலோடு சேர்ந்து சட்டமன்ற தேர்தலும் வரலாம். எது நடந்தாலும் உங்கள் உழைப்பை மதிக்க கூடிய நபர்களை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்” இவ்வாறு பேசினார் ராஜேந்திரபாலாஜி.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT