ADVERTISEMENT

பொதுச்செயலாளர் தேர்தல்; ஓ.பி.எஸ். தரப்பில் என்ன வாதிடப்பட்டது? 

11:23 AM Mar 19, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான தேதி கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டு, நேற்று சனிக்கிழமை இ.பி.எஸ். மனுத் தாக்கல் செய்துள்ளார். இ.பி.எஸ். மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால், இன்று வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததும் அவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவார் என சொல்லப்பட்டுவந்தது. இந்நிலையில், நேற்று சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி முன்னிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், ஆர்.வைத்திலிங்கம் ஆகிய மூன்று பேரும் தனித்தனியாக வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். சார்பில் ‘அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்’ என முறையீடு செய்யப்பட்டது.

இதனையடுத்து, பொறுப்பு நீதிபதி இந்த வழக்கை நீதிபதி குமரேஷ் பாபு விசாரிக்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து நீதிபதி குமரேஷ் பாபு முன்னிலையில் முறையீடு செய்யப்பட்டது. அதனையேற்ற நீதிபதி குமரேஷ் பாபு இன்று காலை அவசர வழக்காக ஏற்று விசாரிப்பதாகத் தெரிவித்தார்.

முன்னதாக அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தேதியை இ.பி.எஸ். அறிவித்து, நேற்று முதல் ஆளாய் வேட்புமனுவைத் தாக்கல் செய்ததும், ஓ.பி.எஸ். அணி சார்பில் பண்ருட்டி ராமச்சந்திரன், ஓ.பி.எஸ். ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அதனைத் தொடர்ந்து ஓ.பி.எஸ்., ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ளதை சுட்டிக் காட்டி, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை அறிவித்தது செல்லாது என அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து தலைமை தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதினார்.

அதேசமயம், எடப்பாடி பழனிசாமி தனது அணியின் மூத்த தலைவர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில், நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ். தரப்பு தாக்கல் செய்துள்ள வழக்கை எப்படி எதிர் கொள்வது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

“பண்ருட்டி ராமச்சந்திரன் அரசியலில் சகுனி..” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி குமரேஷ் பாபு முன்னிலையில் இன்று காலை வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில், ஓ.பி.எஸ். ஆதரவாளர்களுக்காக மூத்த வழக்கறிஞர்கள் பி.எஸ். ராமன், ஸ்ரீராம், மணிசங்கர் ஆகியோ ஆஜராகியுள்ளனர். இ.பி.எஸ். தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் வைத்தியநாதன், விஜயநாராயண் ஆகியோர் ஆஜராகியுள்ளனர்.

வழக்கு விசாரணை துவங்கியதும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்களின் வழக்கறிஞர்கள், பொதுக்குழு தீர்மானங்களை ரத்துசெய்யக் கோரிய வழக்கில் பதில் மனுவுக்கு அவகாசம் கேட்டு பொதுச்செயலாளர் தேர்தலை அறிவித்தனர். இன்று மாலையே வேட்புமனு நிறைவு பெற்றதாகக் கூறி பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்படலாம் என்று வாதிடப்பட்டது.

இதற்கு இ.பி.எஸ். தரப்பில், பதில் மனு தாக்கல் செய்ய நாங்கள் அவகாசம் கோரவில்லை என மறுப்பு தெரிவித்தனர்.

ஓ.பி.எஸ். தரப்பில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படியே வழக்கை தொடர்ந்துள்ளோம். நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்று அறிவித்துவிட்டு, இப்போது தேர்தலை அறிவித்துள்ளனர். வெள்ளிக்கிழமை பொதுக்குழு வழக்கு விசாரிக்கப்பட்ட நிலையில், அன்று மாலையே பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோர் வகித்த பதவிகளை வேறு யாரும் வகிக்க முடியாது. இடைக்கால பொதுச்செயலாளர் என தேர்தல் ஆணையம் இதுவரை யாரையும் அங்கீகரிக்கவில்லை. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தொடர்கின்றன. தேர்தல் ஆணையம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்றே கடிதங்களை அனுப்புகிறது. ஜெயலலிதாவே பொதுச்செயலாளராக இருக்கவேண்டும் என தொண்டர்கள் விரும்புகிறார்கள்.

அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவிக்கு அடிப்படை உறுப்பினர்கள் யாரும் போட்டியிட முடியாது என்ற நிலையை உருவாக்கியுள்ளனர். பத்து ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும், ஐந்து ஆண்டுகள் தலைமைக் கழக நிர்வாகியாக இருக்க வேண்டும் என்று விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சனிக்கிழமை வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி ஞாயிற்றுக்கிழமை முடிவு என்று அறிவித்துள்ளனர். 36 மணி நேரத்தில் 20 மாவட்டச் செயலாளர்களைச் சந்தித்து முன்மொழியவும், வழிமொழியவும் எப்படி கோர முடியும்.

ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ள நிலையில், வாக்காளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டதா. அவசரகதியில் அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். ஓரிரு நாட்களில் பதிலளிக்க உத்தரவிட வேண்டும். அதுவரை தேர்தல் நடத்தக்கூடாது என்று உத்தரவிட வேண்டும்.

விதிமுறைகளை மீறி பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துகிறார்கள். தேர்தலில் ஜனநாயக விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. இடைக்கால உத்தரவு பிறப்பிக்கவில்லை என்றால், ஒரே வேட்பு மனு பெறப்பட்டது என்று முடிவை அறிவித்துவிடுவார்கள். அதேபோல், இடைக்கால உத்தரவை பிறப்பிக்கவில்லை என்றால் பிரதான வழக்கே செல்லாததாகிவிடும்.


பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்த வழக்கு நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இன்னும் கலைக்கப்படவில்லை. அந்த இரு பதவிகளும் தற்போது சட்டப்படி உள்ளன. சட்டப்படி ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் உள்ள நிலையில், தேர்தல் நடத்துவது தவறு என ஓ.பி.எஸ். தரப்பில் வழக்கு தொடர்ந்துள்ள மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT