ADVERTISEMENT

இனி அப்படி மட்டும் சொல்லாதீர்கள் “ப்ளீஸ்”! எடப்பாடி பழனிசாமியை கேட்டுக்கொண்ட ஸ்டாலின்...

02:12 PM Sep 18, 2020 | rajavel

ADVERTISEMENT

"பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சியான சிரோமணி அகாலிதளம் எதை கடுமையாக எதிர்த்து, அதன் மத்திய அமைச்சரே பதவியை ராஜினாமா செய்திருக்கிறாரோ, விவசாயிகளின் முதுகெலும்பை ஒடிக்கும் அந்தச் சட்டங்களுக்கு, ஊழல் வழக்குகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மகிழ்ச்சியுடன் ஆதரவளிக்கிறது பழனிசாமி அரசு" "இனியொரு முறை மேடைகளில் நின்று கொண்டு 'நான் ஒரு விவசாயி' என்று மட்டும் முதலமைச்சர் பழனிசாமி சொல்ல வேண்டாம்" என கேட்டுக்கொண்டுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பா.ஜ.க.,வின் கூட்டணிக் கட்சியான சிரோமணி அகாலிதளம்” எதைக் கடுமையாக எதிர்த்து - அதன் மத்திய அமைச்சராக இருந்த ஹர்ஸிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா வரை சென்றுள்ளாரோ; அதற்கு காரணமான, மத்திய பா.ஜ.க. அரசின் சட்டங்களுக்கு - விவசாயிகளின் முதுகெலும்பை ஒடிக்கும் சட்டங்களுக்கு; மக்களவையில், அந்தச் சட்டங்கள் விவசாயிகளின் நலனுக்கு முற்றிலும் எதிரானவை என அறிந்தே; அ.தி.மு.க. மகிழ்ச்சியுடன் ஆதரவளித்துள்ளதற்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விவசாயிகளின் விளைபொருட்களை “கார்ப்பரேட்” நிறுவனங்கள் பதுக்கி வைத்துக்கொள்ள வழிவகுப்பது “அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம்”. வேளாண் உற்பத்தி ஊக்குவிப்பு சட்டமும், விவசாயிகளுக்கு விலை உத்தரவாதம் வழங்கும் வேளாண் சேவைகள் திருத்த சட்டமும் - தமிழக விவசாயிகள் மட்டுமின்றி - ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளின் வாழ்வில் சாவு மணி அடிக்கும் சட்டங்களாகும். ஆனால் இந்த சட்டங்களை, “விவசாயிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் சட்டங்கள்” என்றும், “தமிழகப் பொருளாதாரத்தை உயர்த்தும் சட்டங்கள்” என்றும் கூறி அ.தி.மு.க. ஆதரித்திருப்பது, “விவசாயி”களுக்கு இதுவரை செய்த பாதகமெல்லாம் போதாது என்று - மன்னிக்க முடியாத துரோகத்தையும் தற்போது செய்திருக்கிறார் முதலமைச்சர் திரு. பழனிசாமி!

மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள இந்த மூன்று சட்டங்கள் - கார்ப்பரேட்டுகளின் கையில் விவசாயிகளை அடமானம் வைக்கும் அராஜக சட்டங்கள். மாநிலப் பட்டியலில் உள்ள வேளாண்மை விவகாரத்திலும், மூக்கை நுழைக்கும் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான, சகித்துக்கொள்ள முடியாத சர்வாதிகாரம். “ஆன்லைன் வர்த்தகம்” செய்யும் விவசாயி, நிச்சயம் “பான் நம்பர்” பெற்றிருக்க வேண்டும் என்பது - வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள விவசாயத்தை “வருமான வரி வரம்பிற்குள்” கொண்டு வரும் சதி!

தமிழகத்தில் உள்ள வேளாண் விற்பனைக் கூடங்களுக்கும், கழக ஆட்சியில் துவங்கப்பட்ட உழவர் சந்தைத் திட்டத்திற்கும் முற்றிலும் எதிரானது. விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த எந்த வகையிலும் உதவாதது மட்டுமின்றி - வறட்சி, கனமழை ஆகியவற்றால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு எந்த நிவாரணமும் இல்லாத சட்டங்கள் இவை. மாநிலத்தில் உள்ள சிறு, குறு விவசாயிகளின் நலன்களை நசுக்கி, குழி தோண்டிப் புதைத்து - கார்ப்பரேட்டுகளை கோபுரத்தில் அமர வைக்கும் தீய உள்நோக்கம் நிறைந்தது இந்தச் சட்டங்கள். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சூறையாட, கரோனா பேரிடர் காலத்தில் “அவசரச் சட்டங்களாக” பிறப்பிக்கப்பட்டு - இப்போது சட்டமாக்கப்படுபவை! விவசாயிகளின் குறைந்தபட்ச ஆதார விலைக்கு எவ்வித உத்தரவாதமும் இல்லாமல்; விவசாயிகளுக்கு முழுக்க முழுக்க படு பாதகமானதும், அவர்களை மேலும் கடனில் மூழ்க வைத்துத் திணறடிப்பதுமான இந்த சட்டங்களைப் புகழ்ந்து, ஆதரவு அளித்து, “நவீன விவசாயி” திரு. பழனிசாமி, இன்று தனக்குத்தானே இத்தனை நாளும் போட்டு ஏமாற்றிக் கொண்டிருந்த பகல் வேடம் கலைந்து, அம்பலமாகி நிற்கிறார்.

மத்திய பா.ஜ.க. அரசோ, மாநிலப் பட்டியலில் “வேளாண்மை” இருந்தும் - விவசாயிகளுக்கு எதிரான இந்த சட்டங்கள் குறித்து மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிக்கவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்கள் – குறிப்பாக கூட்டணிக் கட்சியினரே எதிர்த்த பிறகும், அவற்றை நிலைக்குழுவிற்கும் அனுப்பவில்லை. அவசரமாக நிறைவேற்றப்பட்டுள்ள இந்தச் சட்டங்கள் விவசாயிகளுக்காக அல்ல! கார்ப்பரேட்டுகளுக்கு “பல்லக்கு” தூக்கி, ‘பாதாபிஷேகம்’ செய்வதற்காக மட்டுமே!; 2022-க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம்” என்று பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் சொன்னதை நிறைவேற்றுவதற்காக அல்ல; வருமானமின்றி ஏற்கனவே வறுமையில் வாடிக் கொண்டிருக்கின்ற விவசாயிகளின் வயிற்றில் “அம்மிக்கல்” கொண்டு அடித்து - அனைத்து விவசாயிகளும் கார்ப்பரேட்டுகளின் அடிமைகளாகவே இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக; ஏன், தமிழகத்தில் விவசாய நிலங்களை “சகாரா பாலைவனம்” ஆக்கும் பா.ஜ.க. அரசின் பல்வேறு மக்கள் விரோதத் திட்டங்களை எதிர்த்து விவசாயிகள் முணுமுணுப்பே காட்டக் கூடாது என்று எச்சரிப்பதற்காக!

பா.ஜ.க. அரசின் சூழ்ச்சியைப் புரிந்து கொண்டுதான் - விவசாயிகளுக்கும் - தமிழக வேளாண் முன்னேற்றத்திற்கும் எதிரான இந்த சட்டங்களைத் திராவிட முன்னேற்றக் கழகம் மக்களவையில் கடுமையாக எதிர்த்துள்ளது. ஆனால் ஊழல்களில் புரையோடிப் போயிருக்கும் முதலமைச்சர் திரு. பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு- வழக்குகளில் இருந்து தப்பித்து, தங்களைப் பாதுகாத்துக்கொள்ள - எஞ்சிய இன்னும் சில மாதங்கள் “பா.ஜ.க.,வின் பாதுகாப்பில்” ஒளிந்து கொண்டு, கஜானவை மேலும் கொள்ளையடிக்க - மத்திய பா.ஜ.க. அரசின் இந்த விவசாயிகள் விரோத சட்டங்களுக்கு மண்டியிட்டு முதலமைச்சர் திரு. பழனிசாமி ஆதரவளித்து - விவசாயிகளின் நலன் குறித்து, கொஞ்சம் கூட இரக்கமின்றி நடந்து கொண்டிருக்கிறார்.

முதலமைச்சர் பழனிசாமி அவர்களை நான் ஒன்றே ஒன்றை மட்டும் கேட்டுக் கொள்கிறேன்; இனியொரு முறை மேடைகளில் நின்று “நான் ஒரு விவசாயி” என்று மட்டும் சொல்லாதீர்கள் “ப்ளீஸ்”!

இவ்வாறு கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT