Skip to main content

"அ.தி.மு.க அரசின் ஊழலுக்கு உடந்தையா பா.ஜ.க.?" இமாலய ஊழல் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும்: மு.க.ஸ்டாலின்! 

Published on 07/09/2020 | Edited on 07/09/2020

 

mkstalin

 

"அ.தி.மு.க அரசின் ஊழலுக்கு உடந்தையா பா.ஜ.க.?" "விவசாயிகளுக்கான பிரதமரின் நிதி - வீடு கட்டும் திட்டங்களில் நடந்து வரும் இமாலய ஊழல் குறித்து சி.பி.ஐ விரைவாக விசாரணை நடத்திட வேண்டும்'' என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரோனா காலத்திலும் 'கொள்ளை ஒன்றே உயிர்மூச்சுக் கொள்கை' எனச் செயல்பட்டு வருகிறது பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு.

 

ப்ளீச்சிங் பவுடர் முதல் முகக்கவசம் வரை எல்லாவற்றிலும் ஊழல்..! ஊழல்... ஊழலோ ஊழல்... ஊழலைத் தவிர வேறெதுவும் இல்லை...!!

 

மத்திய அரசிடமிருந்து ஜி.எஸ்.டி வரிக்குரிய மாநிலத்தின் பங்கு வந்து சேரவில்லை என்றும், கரோனா பேரிடரை எதிர்கொள்வதற்காக மத்திய அரசிடம் கேட்டநிதி கிடைக்கவில்லை என்றும் முதலமைச்சர் பழனிசாமி, எஜமானருக்குப் பணிந்த வேலையாள்போல, மயில் இறகு கொண்டு தடவிக் கொடுப்பதைப் போல, மெல்லிய குரலில் கோரிக்கை வைத்துக் கடிதம் எழுதுகிறார். தி.மு.கழகம் எதிர்க்கட்சியாக இருந்தாலும், மாநில அரசு கேட்கின்ற தொகையை முழுமையாக வழங்கிடுமாறு மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது.

 

மாநிலத்தின் உரிமைகளுக்காக மத்திய அரசிடம் ஓங்கிக் குரல் கொடுக்கவே அஞ்சுகிற அ.தி.மு.க ஆட்சியாளர்கள்தான், மத்திய அரசு ஒதுக்குகிற குறைந்தபட்ச நிதியிலும் கோடி கோடியாகக் கொள்ளையடித்து வருகிறார்கள் என்பதை, ஊடகங்கள் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தி வருகின்றன.

 

பிரதம மந்திரியின், விவசாயிகளுக்கான ஆண்டுக்கு 6,000 ரூபாய் நிதியுதவித் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் தொகையை, விவசாயிகளுக்கு வழங்காமல், முதலமைச்சர் பழனிசாமி போலவே ‘விவசாயி’ என்று சொல்லிக் கொள்ளும் போலிகளுக்கு வழங்கி, பலகோடி ரூபாய் மோசடி செய்திருப்பது அப்பட்டமாக அம்பலமாகியுள்ளது.

 

முதலமைச்சர் பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தில் மட்டும் 10 ஆயிரத்து 700 பேரை, விவசாயிகள் என்று போலியாகக் கணக்குக் காட்டி, பிரதமரின் திட்டத்தில் 4 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்திருப்பது தெரிய வந்ததால், அவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

 

சேலத்தில் மட்டுமா ஊழல்? தமிழகம் முழுவதும் கரோனா போலவே நீக்கமற நிறைந்திருக்கிறது அ.தி.மு.க அரசின் ஊழல்!

 

கடலூர் மாவட்டத்தில், 'போலி விவசாயிகள்' கணக்கில் சூறையாடப்பட்ட பிரதமர் நிதியிலிருந்து 4 கோடியே 20 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் 4 கோடியே 50 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மோசடிப் புகார்கள் எழுந்துள்ளன.

 

வேளாண் துறையில் தங்களுக்குக் கைப்பாவையாக உள்ள அதிகாரிகளை நியமித்து, அவர்கள் மூலமாக இந்த மோசடிகளை அ.தி.மு.க அரசு தொடர்ச்சியாகச் செய்து வருகிறது. ஊரடங்காலும், கரோனா நோய்த் தொற்றுப் பரவலாலும், போதிய அளவு பயிர்ப் பாதுகாப்பு இல்லாததாலும், வாழ்வாதாரம் இழந்து வாடிநிற்கும் விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் கொடுமையாக இந்த மோசடிகள் அரங்கேறி வருகின்றன.

 

Ad

 

விவசாயிகளுக்கான பிரதமரின் நிதி உதவித் திட்டத்தில் மட்டுமல்ல, பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்காக ஒதுக்கப்படும் நிதியிலும் மாபெரும் ஊழல் நடந்தது பற்றி சில வாரங்களுக்கு முன் ஆதாரப்பூர்வமான செய்திகள் வெளியாயின.

 

'ஒரு பானைச் சோற்றுக்கு ஒருசோறு பதம்' என்கிற வகையில், திருவாரூர் மாவட்டம் - மன்னார்குடி வட்டம் - தலையாமங்கலத்தில், ஏறத்தாழ 150 வீடுகள் கட்டப்பட்டதாகப் பொய்க் கணக்குக் காட்டி, பயனாளிகள் பெயரில், தலா ஒன்றே முக்கால் லட்ச ரூபாய் என்ற வகையில், பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது.

 

எடுத்துக்காட்டாக, காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்று, 2018-ம் ஆண்டிலேயே இறந்துபோன ஜெயச்சந்திரன் என்பவர் பெயரில், 2019-ம் ஆண்டில் 4 தவணைகளில் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணமும், கட்டுமானப் பொருட்களுக்காக 55 ஆயிரம் ரூபாய் என்றும் ஒன்றே முக்கால் லட்ச ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது.

 

இறந்தவர் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கி, பண மோசடி நடந்துள்ளது. வீடு கட்டப்படவில்லை. இதுபோலவே, உயிரோடு இருப்பவர்கள் பெயரிலும் மோசடி நடந்துள்ளது.

 

தங்கள் பெயரில் பண மோசடி நடந்திருப்பதை அறியாத அப்பாவி மக்கள் பலர், இன்னமும் ஒழுகும் குடிசைக்குள் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அ.தி.மு.க. ஆட்சியாளர்களும் அவர்களுக்குத் துணை போகும் அதிகாரிகளும், ஆள்வோருடன்  கூட்டுச் சேர்ந்து பகல் கொள்ளை அடிக்கிறார்கள்.

 

தமிழ்நாட்டில்தான் ஊழல் ஆட்சி நடைபெறுகிறது என மேடையில் விமர்சனம் செய்த பா.ஜ..க. தலைவர்கள், தேர்தலில் அதே ஊழல் ஆட்சியுடன் கூட்டணி சேர்ந்து கொண்டார்கள். கோட்டை முதல், அமைச்சர்களின் பங்களாக்கள் வரை சோதனை நடத்திய வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ போன்ற மத்திய அரசின்கீழ் இயங்கும் நிறுவனங்கள் கைப்பற்றிய ஆவணங்களின் அடிப்படையில், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதும் தெரியவில்லை.

 

மக்கள் மறந்து விட்டதாக நினைக்கிறார்கள்; இவை போன்ற காரியங்களை மக்கள் ஒருபோதும் மறப்பதுமில்லை; மன்னிப்பதுமில்லை; நேரம் வரும்போது கடுமையாகத் தண்டித்து விடுவார்கள்.

 

Nakkheeran

 

'ஊழலை ஒழிக்க வந்தவர் பிரதமர் மோடி' எனப் பெருமை பேசிக்கொண்டே, அ.தி.மு.க.,வினரின் ஊழலை மறைத்து, அரசியல் இலாபம் தேடும் போக்கை மேற்கொண்டால் ஊழல் ஒழிந்துவிடுமா?

 

அ.தி.மு.க.,வின் ஊழல்களுக்கு உடந்தையாக  இருக்கிறதா பா.ஜ.க.? என்கிற கேள்வி, பாமர மக்களின் மனதிலும் எழுகிறது; அந்தக் கேள்வி, அப்படியே நின்று வளரும் தன்மை கொண்டது.

 

பிரதமரின் பெயரிலான விவசாய நிதி உதவியிலும், வீடு கட்டும் திட்டத்திலும் அப்பட்டமாக ஊழல் செய்துள்ள அ.தி.மு.க ஆட்சியாளர்கள் மீது சி.பி.ஐ விசாரணை நடத்தி, நியாயமான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கோடை வெப்பம்; தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Tamil Nadu Chief Minister M. K. Stalin's instructions for summer heat

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக மதுரை, ஈரோடு போன்ற பகுதிகளில் வெப்ப அலை வீசி, மக்களைப் பாதிப்படைய செய்கிறது.

வெப்ப நிலை அதிகமாக இருக்கும் இந்த நிலையில் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை எதிர்க்கொள்ளும் வகையில் அரசு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது, “வெப்ப நிலை அதிகரிக்கும். வெப்ப அலை வீசும், என்பது போன்ற செய்திகள் தினந்தோறும் வெளிவந்து கொண்டு இருக்கிறது. இதனை உணர்த்தும் வகையில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அடுத்த 5 நாட்களுக்கு வடதமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அதிக வெப்பமும் வெப்ப அலையும் ஏற்படக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இத்தகைய சூழலில் பொதுமக்கள் கவனத்துடனும் மிகுந்த எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பொதுவாக கோடை காலம் என்பது வெப்பம் அதிகம் உள்ள மாதங்களாக இருந்தாலும், நாளுக்கு நாள் வெப்ப அளவு அதிகமாகி வருகிறது. இதில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை ஆகும். அதனால்தான் நேற்றைய தினம் தலைமைச் செயலகத்தில் அரசுத் துறை அதிகாரிகளுடன் இது தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தினேன். இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மருத்துவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் ஆலோசனையை அரசு அதிகாரிகள் கேட்டுத் தெரிந்து கொண்டதன் அடிப்படையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த அறிக்கையை வெளியிடுவது மிக மிக அவசியமானதாகக் கருதுகிறேன். வெப்பநிலை அதிகமாகும் காலங்களில் குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவிகள், வயதானவர்கள். கர்ப்பிணிப் பெண்கள், உடல்நலக் குறைபாடுகள் உடையவர்கள் அதிகமாகப் பாதிக்கப்படலாம். இவர்களை மிகக் கவனமாக பாதுக்காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கோடை வெயிலினால் அதிக வியர்வை வெளியேறும்போது. உடலில் உப்புச்சத்து மற்றும் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைச்சுற்றல், தசைப்பிடிப்பு, மயக்கம் மற்றும் வலிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். பணிநேரங்களில் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். தாகம் இல்லை என்றாலும், போதிய அளவு நீரை தொடர்ந்து பருகவேண்டும். அதிக அளவில் மோர், அரிசிக்கஞ்சி, இளநீர், எலுமிச்சைப் பழச்சாறு போன்றவற்றை பருகவேண்டும். உணவுப் பழக்க வழக்கங்களில் மாறுதல்களைச் செய்து கொள்ள வேண்டும். நீர்ச்சத்து காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். பழச்சாறுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

பயணத்தின்போது துணி, துண்டு, தொப்பி குடிநீர் எடுத்துச் அணிந்து செல்லவேண்டும். தேவையில்லாமல் வெயிலில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். வியர்வை எளிதாக வெளியேறும் வகையில் மிருதுவான. தளர்ந்த, காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. வயது முதிர்ந்தவர்கள் நடந்து செல்லும் போது களைப்பாக இருந்தால் நிழலில் சற்று ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். வெப்பம் அதிகமாக உள்ள திறந்த வெளியில் வேலை செய்யும்போது, களைப்பு, தலைவலி, தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் ஒருவருக்கு ஏற்பட்டால், உடனடியாக நிழலுக்குச்செல்லவேண்டும். மேலும், தண்ணீர், எலுமிச்சைப் பழச்சாறு, ஓ.ஆர்.எஸ். பருக வேண்டும். மயக்கம், உடல் சோர்வு, அதிக அளவு தாகம், தலைவலி, கால், மணிக்கட்டு அல்லது அடிவயிற்றில் வலி ஏற்பட்டால் அருகிலுள்ள நபரை உதவிக்கு அழைக்கவும். மிகவும் சோர்வாகவோ, மயக்கமாகவோ இருந்தால் மருத்துவ உதவியை நாடவேண்டும். சிறுபிரச்சனை என்றாலும் அதனைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அனைத்து பொதுமக்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

அதிகரித்துவரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மூலமாகவும், அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலமாகவும், பொதுமக்கள். திறந்த இடங்களில் பணிபுரிவோர், நீண்டதூரம் சாலை பயணங்களை மேற்கொள்வோர் பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன். அரசு அதிகாரிகள், அலுவலர்கள் அனைவரும் மக்கள் பாதுகாப்பில் முழு அக்கறை செலுத்தி பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.