ADVERTISEMENT

காவிரி பிரச்சினையில் சாதித்தது தி.மு.க.வா? அ.தி.மு.க.வா?

06:35 AM Jun 20, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

காவிரி பிரச்சினையில் சாதித்தது தி.மு.க.வா? அல்லது அ.தி.மு.க.வா? என்று ஒரே மேடையில் விவாதம் நடத்த நான் தயார்? என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரைமுருகன் சவால் விடுத்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை:

ADVERTISEMENT

“காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகம் துரோகம் செய்து விட்டது” என்று திரும்பத் திரும்ப சொன்னால் மக்கள் நம்பி விடுவார்கள் என்று நினைத்துக் கொண்டு மாண்புமிகு முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நேற்றைய தினம் நாகபட்டினத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றியிருப்பது அவர் வகிக்கும் முதலமைச்சர் பதவிக்கு துளியும் அழகல்ல என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். பொதுப்பணித்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் ஒன்று காவிரி சம்பந்தப்பட்ட கோப்புகளை படிக்க வேண்டும். அப்படியில்லையென்றால் அதிமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுப்பணித்துறையின் கொள்கை விளக்க குறிப்புகளை படிக்க வேண்டும். அதுவும் இல்லை என்றால் எங்கள் தளபதி அவர்களும், நானும் காவிரி பிரச்சினையில் தி.மு.க.வின் சாதனைகள் பற்றி சட்டமன்றத்தில் பேசியதையாவது காது கொடுத்து கேட்டிருக்க வேண்டும். இதில் எதையுமே செய்யாமல் ஒரு முதலமைச்சர் இப்படி பேசிக் கொண்டிருப்பது உள்ளபடியே தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள அவமானமாகவே கருதுகிறேன்.

காவிரிப் பிரச்சினையில் முதல் பேச்சுவார்த்தையை துவக்கியது, நடுவர் மன்றத்திற்கு முதலில் கோரிக்கை வைத்தது, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது, நடுவர் மன்றம் அமைத்தது, இடைக்காலத் தீர்ப்பு பெற நடுவர் மன்றத்திற்கு உச்சநீதிமன்றத்தில் அதிகாரம் பெற்றது, இடைக்காலத் தீர்ப்பினை அரசிதழில் வெளியிட்டு அதன்படி காவிரி நதி நீர் ஆணையம் அமைத்தது, அதிமுக அரசு முடக்கி வைத்திருந்த காவிரி வழக்கு இறுதி விசாரணையை முடித்து இறுதி தீர்ப்பு பெற்றது அனைத்துமே தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்து செய்த சாதனைகள் என்பதை முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி முதலில் புரிந்து கொள்ள வேண்டும். காவிரி இறுதி தீர்ப்பு ஏன் அரசிதழில் உடனடியாக வெளியிடப்படவில்லை என்பதற்கு அதிமுக அரசின் சார்பில் சட்டமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள கொள்கை விளக்க குறிப்பில் மறைந்த ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போதே விளக்கப்பட்டுள்ளது. “அனைத்து மாநிலங்களும் நடுவர் மன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் இறுதி தீர்ப்பின் மீது விளக்கம் கேட்டு வழக்கு தொடுத்திருப்பதால் அரசிதழில் வெளியிட முடியவில்லை” என்பது விளக்கப்பட்டுள்ளது. 1971ல் பேச்சுவார்த்தைக்கு வழி விட்டு காவிரி வழக்கு “மீண்டும் தாக்கல் செய்யப்படும் அதிகாரத்துடன்” அதுவும் அனைத்துக் கட்சிகளின் கருத்தினை கேட்டு திரும்பப் பெறப்பட்டது என்பதை கூட தெரிந்து கொள்ளாமல் “ வழக்கிற்காக தலைவர் கலைஞர் வாபஸ் பெற்று விட்டார்” என்று ஒரு முதலமைச்சர் அரை வேக்காட்டுத் தனமாக பேசுவது வேதனையளிக்கிறது.

2013ல் அரசிதழில் வெளியிடப்பட்ட காவிரி இறுதி தீர்ப்பை “மத்திய பா.ஜ.க. அரசுடன் கைகோர்த்து” உச்சநீதிமன்றத்தில் பல்வேறு நாடகங்களை இரு அரசுகளும் கூட்டாக நடத்தி திருத்தி விட்டு, நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரில் 14.75 டி.எம்.சி தண்ணீரையும் இழந்து விட்டு, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தன்னாட்சி அதிகாரமுள்ள காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் உரிமையையும் பறிகொடுத்து விட்டு தன் பதவியை மட்டும் காப்பாற்றிக் கொண்டால் போதும் என்று கூச்சமின்றி இருக்கும் முதலமைச்சர் தி.மு.க.வைப் பார்த்து காவிரி பிரச்சினையில் சுட்டு விரல் காட்டுவதற்கு எவ்வித தகுதியோ தார்மீக உரிமையோ இல்லை. காவிரி வரைவு திட்டம் உச்சநீதிமன்றத்தால் இறுதி செய்யப்பட்டு, ஜூன் மாதம் 1 ஆம் தேதிக்குள் காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றமே உத்தரவிட்டும், இன்று வரை அமைக்காமல் நாகபட்டினத்தில் நின்று கொண்டு “நான் தான் காவிரிப்பிரச்சினையில் சாதித்து விட்டேன்” என்று நர்த்தனம் ஆடுவதற்கு முதலமைச்சருக்கு கொஞ்சமாகவது தயக்கம் வேண்டாமா? ஆணையமே அமைக்காமல் காவிரி பிரச்சினையில் சாதித்து விட்டோம் என்று முதலமைச்சர் போய் பேசுகிறார் என்றால் “அய்யகோ, தமிழ்நாட்டிற்கு இப்படியொரு சோதனையா” என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

“இறுதியில் ஆயிரம் ஸ்டாலின்கள் வந்தாலும் அதிமுக அரசை அசைக்க முடியாது” திருவாய் மலர்ந்திருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. அவருக்கு நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஒரு ஸ்டாலினை சட்டமன்றத்தில் பேச விடுவதற்கே அஞ்சி நடுங்கி நிற்கும் நீங்கள் ஆயிரம் ஸ்டாலின்கள் வந்தால் வங்காள விரி குடா கடலில்தான் அதிமுக அரசு கிடக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதிமுக அரசை அசைத்துப் பார்க்க ஆயிரம் ஸ்டாலின்கள் தேவையில்லை. எங்கள் தளபதி கண் அசைத்தால் ஒவ்வொரு தி.மு.க. தொண்டனும் களத்தில் இறங்கினால் ஒரு பழனிச்சாமி அல்ல ஓராயிரம் பழனிச்சாமிகள் வந்தாலும் தாக்குப்பிடிக்க முடியாது என்று எச்சரிக்க விரும்புகிறேன். ஏதோ விபத்தில் முதலமைச்சராகி விட்ட பழனிச்சாமி வீராப்பு பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அது மட்டுமல்ல காவிரி பிரச்சினையில் சாதித்தது தி.மு.க.வா அல்லது அதிமுகவா என்று விவாதம் நடத்த விரும்பினால் நான் அதற்கு ரெடியாக இருக்கிறேன். ஒரே மேடையில் காவிரி பற்றி விவாதிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தயாரா என்பதை கேட்க விரும்புகிறேன். ’’


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT