ADVERTISEMENT

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், துணை முதல்வர் எடப்பாடி என பேனர்! 

02:20 PM Jun 11, 2019 | rajavel

ADVERTISEMENT

அதிமுகவிற்கு ஒற்றை தலைமை வேண்டும் என ராஜன் செல்லப்பா ஆரம்பித்து வைத்த கலகக் குரல் அதிமுகவை அதிர வைத்துக்கொண்டிருக்கிறது. இதற்கு பின்னணியில் முதல்வர் எடப்பாடியின் பலே அரசியல் இருக்கும் சூழலில், ஒற்றை தலைமை குறித்து விவாதிக்கவும், கட்சியின் பொதுக்குழுவை கூட்டுவது பற்றி ஆலோசிக்கவும் மா.செ.க்கள் கூட்டத்தை நாளைக்கு கூட்டியுள்ளார் எடப்பாடி.

ADVERTISEMENT




இதில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களும் கலந்துகொள்கின்றனர். இதில் இபிஎஸ்சுக்கு ஆதரவாக பல எம்.எல்.ஏ.க்களும், ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக பல எம்.எல்.ஏ.க்களும் காரசாரமாக விவாதிக்கவிருக்கிறார்கள் என்கிற பரபரப்பான சூழலில், மதுரையில் ராஜன் செல்லப்பா கூட்டிய ஆலோசனை கூட்டத்திற்காக வைக்கப்பட்ட ஒரு பேனர் அதிமுகவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பரங்குன்றம் ஒன்றிய அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலுக்கு ஆயத்தமாவதற்கான நிர்வாகிகள் கூட்டம் நிலையூர் கைத்தறி நகரில் நேற்று நடைபெற்றது. இதில் ராஜன் செல்லப்பா கலந்துகொண்டார். இதற்காக அங்கு வைக்கப்பட்ட பேனர் ஒன்றில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என்றும், துணை முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.



இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பலரும் அந்த பேனரை படம் பிடித்தனர். அப்போதுதான் பேனரில் ஏற்பட்டுள்ள தவறு, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு தெரிந்ததை தொடர்ந்து, காகிதத்தை பேனரில் ஒட்டி, தவறை அதிமுகவினர் மறைத்தனர்.


இது தொடர்பான புகைப்படம் சமூகவலைதளங்களில் பரவி பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. ஏற்கனவே, தேனியில் உள்ள கோயில் ஒன்றில் துணை முதல்வர் ஓபிஎஸ்-சின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத்தின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டில், ரவீந்திரநாத் எம்.பி என அச்சடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த விவகாரமும்.அதிமுக மேலிடத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT