ADVERTISEMENT

'அப்பன்' என்பது கெட்ட வார்த்தையா? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி  

12:21 PM Dec 23, 2023 | kalaimohan

‘அப்பன்’ என்பது கெட்ட வார்த்தையா? என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வினவியுள்ளார்.

ADVERTISEMENT

நேற்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ''மழைக்கு முன் 92 சதவீதம் வடிகால் பணி முடிந்தது என்று கூறினார்கள். மழைக்குப் பின் 45 சதவீதம் பணிகளே நிறைவு என மாற்றி பேசினார்கள். 4000 கோடி என்னவானது? 2015-ல் ஏற்பட்ட வெள்ளத்தில் மாநில அரசு கற்றுக் கொண்ட பாடம் என்ன?'' தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை பேரிடராக அறிவிக்க முடியாது. இதுவரை எந்த மாநிலத்திலும் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்ததில்லை. அதற்கான வழக்கம் இல்லை'' என பேசியிருந்தார்.

ADVERTISEMENT

இதற்குப் பதிலளிக்கும் விதமாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “நான் அப்பன் வீட்டு பணத்தையா கேட்கிறேன். மக்கள் வரிப்பணத்தைத்தானே கேட்கிறேன் என பேசியதை தப்புன்னு சொல்றாங்களா. நான் வேணும்னா இப்படி சொல்லட்டுமா. மாண்புமிகு மத்திய அமைச்சரோட மரியாதைக்குரிய அப்பா சொத்தை நாங்க கேட்கல. தமிழக மக்கள் கட்டும் வரிப் பணத்தை தான் கேட்கிறோம்” எனத் தெரிவித்திருந்தார். இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஏற்கனவே தமிழிசை சவுந்தரராஜனும் உதயநிதியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சென்னையில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான வங்கி கடன் இணைப்பு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், ''நான் ஏதாவது கெட்ட வார்த்தை சொன்னேனா? மரியாதைக்குரிய நிதியமைச்சரிடம் மீண்டும் மரியாதையாக நான் கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய சொந்த விஷயத்திற்காக கேட்கவில்லை. தமிழ்நாடு மக்கள் கடும் பேரிடரில் உள்ளனர். பேரிடர் என்றும் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்கிறார்கள். சோசியல் மீடியாவில் கூட ஒரு நண்பர் பதிவிட்டிருந்தார். 10 வருட பாஜக ஆட்சியே கடும் பேரிடர் என்பதால் இதனை தனியாக பேரிடர் என்று பார்க்க மாட்டோம் என்று சொல்கிறோம் என பதிவிட்டிருந்தார். அதுபோல் தயவுசெய்து தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்காதீர்கள். எதை வைத்து அவர்கள் இப்படி பேசுகிறார்கள் என்று தெரியவில்லை.

மத்திய குழுவை அமைத்தார்கள். அவர்கள் எல்லாருமே இங்கு வந்து எல்லாவற்றையும் ஆராய்ந்து இழப்பீடு ஏற்பட்டிருக்கிறது. தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது என்று சொல்லிவிட்டு சென்றார்கள். ஆனால் நிதியமைச்சர் இதனை முழுவதுமாக அரசியல் ஆக்க முயற்சிக்கிறார். நான் யாரையும் மரியாதைக் குறைவாக பேசியதில்லை. தமிழ்நாட்டு மக்கள் குறிப்பாக சென்னை மக்கள், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட மக்கள், தென் தமிழகத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் தூத்துக்குடி மாவட்டம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில இடங்களில் தண்ணீர் வடியவில்லை. நேற்று மாலை வரை ஏரல் பகுதியில் இருந்தேன். நேற்று முன்தினம் காயல்பட்டினம் சென்று இருந்தேன். இன்னும் பாதிப்பில் இருந்து முழுமையாக வெளியே வரவில்லை. எனவே மீண்டும் நிவாரண தொகையை கொடுங்கள் என மரியாதையாக கேட்கிறேன். நான் என்ன அநாகரிகமாக பேசி விட்டேன். 'அப்பன்' என்பது கெட்ட வார்த்தையா? தெரியாமல் தான் கேட்கிறேன். மரியாதைக்குரிய ஒன்றிய நிதியமைச்சர் உடைய மரியாதைக்குரிய அப்பா, வணக்கத்திற்குரிய அப்பா, மாண்புமிகு அப்பா எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்'' என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT