ADVERTISEMENT

“கூட்டணி ஏற்பட்டால் அண்ணாமலை தலைவராக இருக்க மாட்டார்” - எஸ்.வி.சேகர் 

03:20 PM Sep 24, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

பா.ஜ.க. தமிழ்நாட்டு தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா குறித்து அவதூறாக பேசினார். இதற்கு திமுக, அதிமுக சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த 18ம் தேதி அதிமுக - பாஜக கூட்டணி இல்லை என்று அறிவித்தார்.

இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு அதிமுக மூத்த நிர்வாகிகள் டெல்லி சென்று ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து பேசிவிட்டுவந்தனர். அதேபோல், பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவை சந்தித்து பேசியதாகவும், அப்போது அண்ணாமலையை தலைவர் பொறுப்பில் இருந்து மாற்றினாலேயே கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும், அண்ணாமலையை மாற்றும் கருத்தில் அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ். உறுதியாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை (25ம் தேதி) அதிமுக தலைமை அலுவலகத்தில் கூடும் என அக்கட்சி அறிவித்துள்ளது. இதில் கூட்டணி குறித்து முக்கிய முடிவுகள் வரும் என பேசப்பட்டுவந்த நிலையில், மீண்டும் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், “கூட்டணி குறித்து கடந்த 18ம் தேதி சொன்னதுதான் உறுதி. அதிமுக - பாஜக கூட்டணி இல்லை” என்று மீண்டும் உறுதியாக தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க. மூத்த நிர்வாகியான எஸ்.வி.சேகர், “அரசியலில் அண்ணாமலைக்கு ஆரம்பக் கட்ட அனுபவமே கிடையாது என்பதே இது வெளிக்காட்டுகிறது. கூட்டணியில் இருந்தால் அதன் தர்மத்தை கடைப்பிடிக்க வேண்டும். கூட்டணி வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை டெல்லி மேலிடம் முடிவு செய்யும். இவர் தனக்கென மறைமுக நோக்கத்தோடு, இந்தக் கூட்டணி கிடையாது. கூட்டணி வைத்தால் வெளியேறுவேன் என வாய்ச்சவடால் விடுவதெல்லாம் கட்சிக்கு சரியானதாக இருக்காது. கட்சியின் கொள்கை கோட்பாடு குறித்து மேலிடம் சொல்வதை கேட்டு இங்கு நடந்தால் தான் கட்சி இங்கு வளரும். இல்லையென்றால் வளரவாய்ப்பில்லை.

அண்ணாமலை அவரின் சுயநலத்திற்காக, அவரின் பெயரும் புகழும் வளர்த்துக்கொள்வதற்காக செய்துவருகிறார். கட்சி வளர்ந்துள்ளதா என்பது தேர்தலுக்கு பிறகு தான் தெரியும். என்னை போன்று கட்சிக்காக உழைக்கவேண்டும் என நினைக்கும் நிறைய பேரை ஓரம் கட்டிவிட்டார்கள். கட்சியில் திடீரென வருபவர்களுக்கு நேர்மையாக இருப்பவர்களை பிடிக்காது. அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி தமிழ்நாட்டில் ஏற்பட்டால் அண்ணாமலை தமிழ்நாடு பாஜக தலைவராக இருக்க மாட்டார்” என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT