Skip to main content

அதிமுக நிர்வாகிகளைப் புறக்கணித்த அமித்ஷா

Published on 22/09/2023 | Edited on 23/09/2023

 

Amit Shah ignored ADMK executives

 

இந்திய ஜனநாயகக் கூட்டணியில் கூட்டணிக் கட்சிகளாக இருக்கும் அதிமுகவும், பாஜகவும் தமிழகத்தில் மோதிக் கொள்கின்றன. சமீப காலமாக அதிமுக - தமிழக பாஜக இடையே வார்த்தைப் போர் நிலவி வருகிறது. சமீபத்தில் பேரறிஞர் அண்ணா குறித்து அண்ணாமலை பேசியது அதிமுகவினரை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியது. இதையடுத்து அண்ணா குறித்துப் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜு, சி.வி. சண்முகம் போன்றவர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். இது தொடர்பாக மாறி மாறி இரு கட்சித் தலைவர்களும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

 

இதனையடுத்து அதிமுகவின் மூத்த நிர்வாகிகளும், முன்னாள் அமைச்சர்களுமான வேலுமணி, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், கே.பி. முனுசாமி, சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். இவர்கள் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து டெல்லிக்குச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது. இவர்கள் 5 பேரும் இன்று இரவு பாஜக மூத்தத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை சந்தித்துப் பேச உள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது.

 

இந்த சூழலில் அதிமுக மூத்த நிர்வாகிகள் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின் போது, பாஜக மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசனும் உடன் இருந்தார் என சொல்லப்பட்டது. அண்ணாமலை அண்ணா குறித்துப் பேசியது தொடர்பாகவும், பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை மாற்ற அதிமுக சார்பில் கோரிக்கை வைத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் அதிமுக மூத்த நிர்வாகிகள் சார்பில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேச கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் அதிமுக நிர்வாகிகளுடன் பேச அமித்ஷா நேரம் ஒதுக்கவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அதிமுக நிர்வாகிகள் தமிழகம் திரும்ப உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விளவங்கோடு தொகுதி காலியானதாகத் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்!

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
A letter to the Election Commission stating that Vilavankode constituency is vacant

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் விஜயதாரணி கடந்த 24 ஆம் தேதி பாஜகவில் இணைந்தார். அவர் பாஜகவில் இணைந்ததைத் தொடர்ந்து அவர் வகித்து வந்த பதவிகளில் இருந்து விலகுவதற்கான ராஜினாமா கடிதத்தை கொடுத்திருந்தார். அதேபோல் தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையும் அவரைக் கட்சியிலிருந்து நீக்கியதோடு, கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் மூலம் அவருடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியைத் தகுதி நீக்கம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை சட்டப் பேரவை முதன்மைச் செயலருக்கு, 'விஜயதாரணி காங்கிரஸ் கட்சியின் மூலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் பாஜகவில் சேர்ந்து விட்டார். அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்' என்று கடிதம் அனுப்பி இருந்தார். அதே சமயம் தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவி விலகல் கடிதத்தை கைப்பட எழுதி சட்டப்பேரவை தலைவருக்கும் சட்டப்பேரவையினுடைய முதன்மை செயலாளருக்கும் அனுப்பி இருந்தார் விஜயதாரணி. இதனையடுத்து விஜயதாரணியின் பதவி விலகல் ஏற்றுக் கொள்ளப்பட்டது என சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார்.

இந்நிலையில், விஜயதாரணி தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாக இந்தியத் தேர்தல் ஆணையத்திற்குத் தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் கடிதம் எழுதியுள்ளார். இதன் மூலம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுடன் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

Next Story

ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல்; கைதானவர்கள் விவரங்கள் வெளியீடு!

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
worth 2 thousand crores incident details released

டெல்லியில் போதைப்பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த 24 ஆம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருள்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மொத்த மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி எனவும் தெரியவந்தது.

தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போதைப் பொருள் கடத்தலில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவருக்கும் தொடர்பு உள்ளதாகவும், அவர் போதைப்பொருள் கடத்தல் சம்பவத்திற்கு மூளையாகச் செயல்பட்டதும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய நிலையில் திரைப்படத் தயாரிப்பாளரும், தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக்தான் அந்த நபர் என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து தி.மு.க. சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் கட்சியிலிருந்து அவரை நிரந்தரமாக நீக்குவதாக தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் கைதானவர்கள் யார் என்ற விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிபுர் ரஹ்மான் மற்றும் விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற விவரம் தெரியவந்துள்ளது. மேலும் இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடத்தல் கும்பல் தலைவனாக ஜாபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியாகியுள்ளது.