ADVERTISEMENT

“பெயர் பட்டியலோடு அண்ணாமலை வெளியிட வேண்டும்” - ஆர்.எஸ்.பாரதி

03:07 PM Apr 14, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “1972 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் கொடுத்த ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு கலைஞர் சட்டமன்றத்தில் பதில் அளிக்கும் முன், எடுத்த எடுப்பிலேயே அந்த குற்றச்சாட்டுகளைப் பார்த்தேன் படித்தேன் ரசித்தேன் என கலைஞர் தெரிவித்தார். தொலைக்காட்சியில் சாலமன் பாப்பையா பட்டிமன்றம் பார்ப்பது வாடிக்கை. சாலமன் பாப்பையா பட்டிமன்றத்தைப் பார்த்தால் சிரிக்கக்கூடிய வாய்ப்பாக இருக்கும். அதுபோலத்தான் இன்று அண்ணாமலை கொடுத்துள்ள பேட்டிகளைப் பார்த்தால் சிரிக்கத்தான் தோன்றுகிறது. அவரது அறியாமையைப் பார்த்தால் இப்படிப்பட்ட ஒருவரை எப்படி காவல்துறையில் வைத்திருந்தார்கள் என்ற சந்தேகம் வருகிறது.

சம்பந்தப்பட்ட நபர்கள் அவர் மீது புகார் அளிப்பார்கள். சம்பந்தம் இல்லாத சொத்துக்களை எல்லாம் சேர்த்துள்ளார் சம்பந்தப்பட்டவர்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள். அண்ணாமலை தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்வதை விட நீதிமன்றங்களுக்கு சுற்றுப்பயணம் செய்யும் நேரம் தான் அதிகமாக இருக்கும். ஒவ்வொருவரும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தால் அனைத்திற்கும் பதில் சொல்ல வேண்டி வரும். அண்ணாமலை யார் யாருக்கோ சொந்தமான சொத்துகளை இவர்களுக்கு சொந்தமானது என எழுதிக் கொடுத்துள்ளார்.

அனைவரின் சொத்து மதிப்புகளிலும் ஒரு ஜீரோ சேர்த்துள்ளார். நடவடிக்கை எடுக்கும் இலாக்காக்கள் அனைத்தும் மோடியிடம் உள்ளது. திமுக திறந்த புத்தகம். திமுக இம்மாதிரியான பல சவால்களைச் சந்தித்துள்ளது. திமுக 6 முறை ஆட்சிக்கு வந்துள்ளது. ஒரு ஊழல் குற்றச்சாட்டையாவது நிரூபித்துள்ளார்களா? எம்ஜிஆர் ஆட்சியிலும் ஜெயலலிதா ஆட்சியிலும் புகார்கள் கூறினர். ஆனால் ,நிரூபிக்க முடியவில்லை. எம்ஜிஆரை விட ஜெயலலிதாவை விட அண்ணாமலை அறிவுலக மேதை இல்லை.

திமுகவிற்கு சொந்தமான பள்ளிகள் ரூ.3418 கோடிக்கு உள்ளதாக சொல்கிறார். அந்த பள்ளிகள் எந்த ஊரில் எந்த பெயரில் உள்ளது என்பதை பெயர் பட்டியலோடு வெளியிட்டு 15 நாட்களுக்குள் ஒப்படைக்க வேண்டும். கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் ரூ.187.7 கோடிகள் என சொல்லியுள்ளார். இதற்குரிய ஆவணங்களையும் அண்ணாமலை ஒப்படைக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT