“National leadership will talk about alliance..” - Vanathi Srinivasan

இந்திய ஜனநாயகக் கூட்டணியில் கூட்டணிக் கட்சிகளாக இருக்கும் அதிமுகவும், பாஜகவும் தமிழகத்தில் மோதிக் கொள்கின்றன. சமீப காலமாக அதிமுக - தமிழக பாஜக இடையே வார்த்தைப் போர் நிலவி வருகிறது. சமீபத்தில் பேரறிஞர் அண்ணா குறித்து அண்ணாமலை பேசியது அதிமுகவினரை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியது. இதையடுத்து அண்ணா குறித்துப் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜு, சி.வி. சண்முகம் போன்றவர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். இது தொடர்பாக மாறி மாறி இரு கட்சித் தலைவர்களும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Advertisment

இதனையடுத்து அதிமுகவின் மூத்த நிர்வாகிகளும், முன்னாள் அமைச்சர்களுமான வேலுமணி, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், கே.பி. முனுசாமி, சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் டெல்லி சென்றனர். இவர்கள் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து டெல்லிக்குச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது. இவர்கள் 5 பேரும் நேற்று இரவு பாஜக மூத்தத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை சந்தித்துப் பேச உள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது.

Advertisment

இந்த சூழலில் அதிமுக மூத்த நிர்வாகிகள் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்துப் பேசினர். இதற்கு காரணம், அமித்ஷா அதிமுக நிர்வாகிகளைச் சந்திக்க நேரம் ஒதுக்காததால் பியூஷ் கோயல் அவர்களைச் சந்தித்தார் என சொல்லப்படுகிறது. இந்தச் சந்திப்பின் போது, பாஜக மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசனும் உடன் இருந்தார் என சொல்லப்பட்டது. இந்நிலையில், அதிமுக நிர்வாகிகள் இன்று டெல்லியிலிருந்து திரும்பி சென்னை வந்தனர்.

அதிமுக நிர்வாகிகள் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவைச் சந்தித்து பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தச் சந்திப்பில், தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என அதிமுக தரப்பிலிருந்து வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது. அண்ணாமலையை மாற்றினால் மட்டுமே கூட்டணியை தொடர்வது குறித்து முடிவு எடுக்கமுடியும் என பேசியதாகவும் சொல்லப்படுகிறது. அண்ணாமலையை மாற்றச் சொல்லும் முடிவில் இ.பி.எஸ். உறுதியாக உள்ளதாகவும் அதிமுக நிர்வாகிகள் ஜெ.பி.நட்டாவிடம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. அதேசமயம், அதிமுக வைத்த கருத்தை ஜெ.பி.நட்டா ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் சொல்லப்படுகிறது.

Advertisment

இந்நிலையில் டெல்லியில் இருந்து இன்று கோவைக்கு வந்த வானதி சீனிவாசனிடம் விமானநிலையத்தில் செய்தியாளர்கள் கேள்விகள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த அவர்,“நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 33% பெண்கள் இட ஒதுக்கீட்டிற்கு கட்சியின் மகளிரணி சார்பில் பிரதமர் மோடிக்கு பாராட்டு விழா நடத்த திட்டமிடப்பட்டது. அதற்காக டெல்லி சென்றேன். மகளிரணியின் தலைவர் எனும் அடிப்படையில் நான் டெல்லி சென்று அந்த விழாவை நடத்தி முடித்துவிட்டு வந்தேன்.

நேற்று நடந்த அதிமுக நிர்வாகிகள் பாஜக மேலிட தலைவர்கள் சந்திப்பில் நான் பங்கேற்கவில்லை. நான் அங்கு இருந்ததாக தகவல்கள் பரவியது. அதன்பிறகு எனக்கு சிலர் போன் செய்து நான் அங்கு இருக்கிறேனா என்று கேட்டனர். அப்போது தான் அதிமுக நிர்வாகிகள் அங்கு வந்திருப்பதே எனக்கு தெரியும்.

என் தொகுதியில் என் மண் என் மக்கள் பயணம் நடைபெறப்போகிறது. அதன் காரணமாக நான் டெல்லியில் இருந்து இங்கு திரும்பிவிட்டேன். கூட்டணி தொடர்பாக தேசியத் தலைமை தான் பேசும்” என்று தெரிவித்து விட்டு கிளம்பிச் சென்றார்.