Skip to main content

“2021ல் பாஜக எப்படி எம்.எல்.ஏக்களை வென்றது என்பதே இதற்கு பதில்” - அண்ணாமலைக்கு அதிமுக பதிலடி 

Published on 07/03/2023 | Edited on 07/03/2023

 

"The answer is how BJP won MLAs in 2021" AIADMK's response to Annamalai

 

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்தே கட்சியில் சீனியர்கள் ஓரம் கட்டப்படுவதாகவும் கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் அனைத்திலும் தன்னையே அண்ணாமலை முன்னிறுத்திக் கொள்வதாகவும் சமீபகாலமாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் காயத்ரி ரகுராம் அண்ணாமலை தலைமையிலான பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று கூறி கட்சியிலிருந்து விலகினார்.

 

இந்த நிலையில் தமிழக பாஜக ஐ.டி பிரிவு தலைவர் நிர்மல் குமார் பாஜகவிலிருந்து விலகி, எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். இவரைத் தொடர்ந்து ஐ.டி.விங் செயலாளர் திலிப் கண்ணனும், ஓ.பி.சி மாநிலச் செயலாளர் ஜோதியும் பாஜகவிலிருந்து விலகி எடப்பாடி முன்னிலையில் இன்று தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவடைந்த நிலையில் மூன்று முக்கியப் பொறுப்பாளர்களும் பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை இது குறித்து பேசியதாவது, “கட்சியிலிருந்து அவர்கள் சென்றது நல்லதுதான். அப்போதுதான் புதிய ஆட்களுக்கு வாய்ப்புகள் கொடுக்க முடியும். ஒரு காலத்தில் திராவிட கட்சிகளை சார்ந்து தான் பாஜக வளரும் என்றும் அந்த கட்சிகளில் இருந்து ஆட்களை கொண்டு வந்தால்தான் வளர முடியும் என்றும் பேசப்பட்டது. ஆனால் இப்போ பாருங்க பாஜகவில் இருக்கும் இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட நிர்வாகிகளை சேர்த்துதான் அவர்கள் வளர வேண்டும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. இன்னும் யாரை வேண்டுமானாலும் அவர்கள் அதிமுகவிற்குள் இழுக்கட்டும். ஒவ்வொரு வினைக்கும் கண்டிப்பாக ஒரு எதிர்வினை இருக்கும். அதற்கான நேரமும் காலமும் வரும்போது பார்த்துக் கொள்ளலாம்.” எனக் கடுமையாக பேசியுள்ளார். 

 

இந்நிலையில் அண்ணாமலையின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக ஐடிவிங்கை சேர்ந்த செங்கை ராமச்சந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “NOTA-வை விட குறைவாக வாக்குகள் வாங்கி வந்த நிலையில், 2021 தேர்தலில் பாஜக எப்படி MLAக்களை வென்றது என்பதே இதற்கான பதில்! அதிமுக யார் தயவும் இன்றி, தனித்து போட்டியிட்டு தேர்தல்களை வென்ற இயக்கம். நிர்வாகிகள் வெளிவந்ததை மறைக்க அதிமுகவை வளர்க்க பாஜகவின் ஆட்கள் தேவை என்பது நகையே!” எனக் கூறியுள்ளார்.


 

சார்ந்த செய்திகள்