ADVERTISEMENT

ட்ரம்பை ஆதரித்த மோடிக்கு இதுவொரு படிப்பினை! - திருமாவளவன் அறிக்கை!

05:01 PM Nov 09, 2020 | rajavel

ADVERTISEMENT

ADVERTISEMENT

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு, 'வெறுப்பு அரசியலை மக்கள் ஏற்கவில்லை' என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது. இது இந்தியாவில், ட்ரம்பை ஆதரித்த மோடிக்கும் ஒரு படிப்பினையாகும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் ஜோ பைடன் அவர்களுக்கும், துணை அதிபராகத் தேர்வு ‌‌செய்யப்பட்டிருக்கும் இந்திய வம்சாவழியைச் சார்ந்த கமலா ஹாரிஸ் அவர்களுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜோ பைடன் அவர்களின் வெற்றி, வெறுப்பு அரசியலை மக்கள் ஏற்கவில்லை என்பதையும் இந்தியாவில் ட்ரம்பை ஆதரித்த மோடிக்கு இதுவொரு படிப்பினை என்பதையும் உறுதிப் படுத்துகிறது.

உலகில் ஜனநாயகம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவை மென் மேலும் பல்கிப்பெருக இவரின் வெற்றி உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறோம்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிகமான வாக்குகளைப் பெற்று ஜோ பைடன் வெற்றி பெற்றிருக்கிறார். அதுபோலவே அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாகப் பெண் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பொறுப்பேற்க இருக்கிறார். இது ஜனநாயகத்தின்மீது அமெரிக்கவாழ் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது.

கடந்த நான்காண்டு கால டிரம்ப் அவர்களின் ஆட்சிக் காலத்தில் அமெரிக்காவில் கறுப்பின மக்கள் கடுமையான ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டார்கள். அத்துடன், அறிவியலுக்கு எதிரான அவருடைய நிலைப்பாடு அமெரிக்காவில் அதிக அளவில் கரோனா பெருந்தொற்று பரவுவதற்கும், பெருமளவில் மரணங்கள் நிகழ்வதற்கும் காரணமாக அமைந்தது.

ட்ரம்பின் மிகமோசமான வெறுப்பு அரசியலால் கறுப்பின வாக்காளர்களில் 90 சதவீதத்துக்கு மேலானவர்கள் ஜோ பைடனுக்கு வாக்களித்துள்ளனர். அத்துடன், அனைத்துத் தரப்பு இளைஞர்களும் பைடனுக்கு பெருமளவில் வாக்களித்துள்ளனர்.

ஜனநாயகத்தை மதிக்கும் பைடன், அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்பது, உலக அளவில் ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. பருவநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து டிரம்ப் ஆட்சிக்காலத்தில் அமெரிக்கா வெளியேறியது. அதில் மீண்டும் இணைவோம் என்று திரு பைடன் கூறி இருக்கிறார். இது அவர் மீதுள்ள நம்பிக்கையை வலுப்படுத்துவதாக உள்ளது.

அமெரிக்காவில் குடியேறிய ஒரு குடும்பத்தைச் சார்ந்த பெண்மணி கமலா ஹாரிஸ் துணை அதிபராகப் பொறுப்பேற்று இருப்பது குடியேறியவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, இந்தியாவிலிருந்து வேலை தேடிச் செல்பவர்களின் பாதுகாப்பு உறுதிப் படுத்தப்படும் என்கிற நம்பிக்கையையும் இவர்கள் இருவரின் வெற்றியும் உண்டாக்கியிருக்கிறது. அத்துடன், ஆப்பிரிக்க- அமெரிக்கர்கள் இனி உயிர் அச்சம் இல்லாமல் வாழமுடியும் என்ற நம்பிக்கையையும் பைடனின் வெற்றி ஏற்படுத்தியிருக்கிறது.

பைடனின் ஆட்சிக்காலத்தில் அமெரிக்க இந்திய உறவுகள் மேம்பட்டு இந்தியாவில் ஜனநாயகம் வலுப்பெற உதவுமென்றும், உலக அளவில் சமாதானமும் அமைதியும் நிலவ வழிவகுக்கும் என்றும் நம்புகிறோம்.


தமிழ் நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்தைச் சார்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபராகப் பதவியேற்பது தமிழர்களுக்குப் பெருமையளிக்கிறது. அவர் பதவி வகிக்கும் காலத்தில் செம்மொழியான தமிழ் மொழியின் பெருமைகளை உலக அளவில் கொண்டு செல்ல உதவுவார் என்று நம்புகிறோம். அமெரிக்க பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகளை அமைப்பதற்கு அவர் தனிக் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று இந்த நேரத்தில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT