ADVERTISEMENT

“அவர் திமுகவிற்கு சென்ற பிறகு இங்கே திட்டத்தை நகர்த்த முடியவில்லை” - செங்கோட்டையன் பேச்சு

06:35 PM Feb 06, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஈரோடு இடைத்தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து திமுக தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது. அதேநேரம் அதிமுக தற்பொழுதுதான் வேட்பாளரை உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 'ஒளிரும் ஈரோடு பவுண்டேஷன்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகையில், “கேட்டதைக் கொடுப்பவனே, கிருஷ்ணா கிருஷ்ணா என்று சொல்வார்கள். அதேபோல் நபிகளை பொறுத்தவரை 'இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை' என்று சொல்வார்கள். இயேசுநாதரை சொல்லும் பொழுது 'தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும்' என்று சொல்வார்கள். ஆனால், கேட்காமலே கொடுக்கும் உள்ளங்கள் இங்கே நிறைந்துள்ளது. எங்களை பொறுத்தவரை இங்கே சொல்வதற்கு ஒன்றே ஒன்றுதான் உள்ளது.

எம்ஜிஆர் காலத்தில் இந்த மாவட்டம் பிரிக்கப்பட்டது. ஜெயலலிதா காலத்தில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. அதற்கு பிறகு எடப்பாடியின் ஆட்சியில் சிறந்த முறையில் அமைதியான முறையில் நான்காண்டு காலம் பல்வேறு சோதனைகளுக்கு இடையில் ஆட்சி சீரோடும் சிறப்போடும் அரவணைத்து செல்கின்ற ஆட்சியாக இருந்தது. நீங்கள் எல்லாம் அறிந்தவர்கள்; எல்லாம் தெரிந்தவர்கள். உங்களுக்கு சொல்ல வேண்டும் என்று தேவையில்லை. ஆனால் திராவிட முன்னேற்றக் கழகம் என்று ஆட்சிக்கு வந்தாலும் இங்கு திட்டங்கள் நடைபெறுவதில்லை. ஈரோடு தொகுதியை பொறுத்தவரை அவர்கள் எடுத்துச் சொல்லட்டும் நாங்கள் இது போன்ற திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம் என்று. ஒரு திட்டத்தை அவர்களால் சொல்ல முடியாது. முத்துசாமி அதிமுகவில் இருந்தபோது பல திட்டங்களைக் கொடுத்தார். ஆனால், அவர் திமுகவிற்கு சென்றதற்கு பிறகு அவராலும் கூட இங்கே ஒரு திட்டத்தையும் நகர்த்த முடியவில்லை.

இந்த தேர்தலில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று எங்களால் புரிந்துகொள்ள முடியாது. கண்ணதாசன் ஒன்றைச் சொல்வார் 'பாலுக்குள் தயிர் இருக்கிறது; தயிருக்குள் வெண்ணெய் இருக்கிறது; வெண்ணெய்க்குள் நெய் இருக்கிறது; ஒன்றுக்கு ஒன்று உப்பிடுகிறது. ஆனால், மனிதன் உள்ளத்தில் என்ன இருக்கிறது என்று நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை' என்று கண்ணதாசன் சொன்னார். இதனால் ஒவ்வொருவரின் உள்ளங்களிலும் என்ன இருக்கிறது என்று நம்மால் புரிந்து கொள்ள முடியாது. ஆனால், உங்கள் உள்ளங்களில் எங்களை வாழ வைக்கும் எண்ணம் இருக்கிறது. ஆகவே வாழ வையுங்கள். நன்றி'' என்றார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT