Skip to main content

“இரட்டை இலை எங்களுக்குத்தான்; பொறுத்திருந்து பாருங்கள்” - செங்கோட்டையன் பேட்டி

Published on 23/01/2023 | Edited on 23/01/2023

 

"The double leaf is for us; wait and see"- Sengottaiyan interview

 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் வேகம் எடுக்கத் தொடங்கிவிட்டது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அதிரடியாக அறிவிக்கப்பட்டார். அதிமுக எடப்பாடி அணி சார்பில் வேட்பாளர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும், அதிமுகவினர் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டனர். அதிமுக சார்பில் தேர்தல் பணிகளைக் கவனிக்க 23 ஆம் தேதி காலை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை அருகே தேர்தல் பணிமனை அமைப்பதற்கான கால்கோள் பூஜை நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்  தலைமைத் தாங்கி கால்கோள் பூஜையைத் தொடங்கி வைத்தார்.

 

பின்னர், செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''ஈரோடு கிழக்கு தொகுதி அ.தி.மு.க.வின் எஃகு கோட்டை. இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இங்கு நாங்கள் அமைதியாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வோம். அதன் முன்னோடியாக ஏற்கனவே ஊழியர் கூட்டம் நடத்தப்பட்டது. இன்று தேர்தல் பணிமனை அமைப்பதற்கு பணிகள் துவக்கப்பட்டுள்ளது. கூட்டணிக் கட்சிகளுடன் கலந்துபேசி போட்டியிட விரும்புவோரிடமிருந்து விருப்பமனு பெற்ற பிறகு எடப்பாடி பழனிசாமி வேட்பாளரை அறிவிக்க உள்ளார். மக்களிடையே மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. மக்கள் ஆதரவு அதிமுகவுக்கே. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக உறுதியாக வெற்றி பெறும்.

 

ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுகவின் கோட்டை என்பதை மீண்டும் நிரூபிப்போம். 1972 திண்டுக்கல் தேர்தல் போல் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் தமிழகத்தில் திருப்புமுனையாக அமையும். திமுக தேர்தல் பணிக்குழுவில் அமைச்சர்கள் இடம்பெற்றிருப்பது வழக்கம் தான். நாங்களும் பணிக்குழு அமைத்து தேர்தல் பணியைத் துவக்குவோம். மக்கள் சரியாக இருக்கிறார்கள். மனம் மாறி இருக்கிறார்கள். அதிமுகவினர் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பார்கள். இரட்டை இலை சின்னம் எங்களுக்குத்தான் கிடைக்கும். அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் வலிமையுடன் போட்டியிட்டு வெற்றி பெறும். அதிமுக வேட்பாளரை எடப்பாடி பழனிசாமி விரைவில் அறிவிப்பார்." என்றார்.

 

மேலும், ஓ.பன்னீர்செல்வம் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்று கூறியிருப்பது, இரட்டை இலை சின்னம் தனக்குத்தான், இபிஎஸ் அணியுடன் பேசத் தயார் என்று அறிவித்திருப்பது குறித்த கேள்விக்கு, “பொறுத்திருந்து பாருங்கள்” என்றார். இரண்டு அணிகளும் ஒருங்கிணைந்து போட்டியிட வாய்ப்பு உள்ளதாக பாஜக துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் கூறியிருக்கிறாரே? என்ற கேள்விக்கு, மீண்டும் மீண்டும், “பொறுத்திருந்து பாருங்கள் பொறுத்திருந்து பாருங்கள்” எனப் பதில் கூறிவிட்டுச் சென்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்