ADVERTISEMENT

"மனரீதியாக பாதிக்கப்பட்டு இருக்கிறோம்" - அதிமுக நிர்வாகி 

04:24 PM Feb 23, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறும் என கடந்த மாதம் 18 ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. இடைத்தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் முதன்மைக் கட்சிகள் தங்கள் வேட்பாளரை அறிவித்து சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், சுயேட்சை வேட்பாளர்களும் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்காக கூட்டணிக் கட்சிகளான திமுக, விசிக போன்றவை களத்தில் இறங்கி தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றன. அதேபோல், அதிமுக வேட்பாளர் தென்னரசுவிற்கு ஆதரவாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கூட்டணிக் கட்சிகளான தமாகா, பாஜகவும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இபிஎஸ் தரப்பு வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்பே ஓபிஎஸ் தரப்பு வேட்பாளரை அறிவித்து வேட்பு மனுவையும் தாக்கல் செய்தது. ஆனால், தேர்தலில் அதிமுக வெற்றி பெற தனது வேட்பாளரை வாபஸ் பெறுவதாக ஓபிஎஸ் தரப்பினர் அறிவித்தனர். தொடர்ந்து, இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாகவும் ஓபிஎஸ் தரப்பு அறிவித்தது. ஆனால், தேர்தல் ஆணையம் ஓபிஎஸ் தரப்பினரின் பேச்சாளர் பட்டியலை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவாக ஓபிஎஸ் பிரச்சாரம் மேற்கொள்ள முடியாத நிலை வந்தது.

இந்நிலையில், அதிமுக ஓபிஎஸ் தரப்பு தனது வேட்பாளரை வாபஸ் பெற்றது. இது ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் அணி நிர்வாகிகள் விலகி எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்தனர். ஓ.பி.எஸ் அணியின் ஈரோடு மாவட்டச் செயலாளராக இருந்த முருகானந்தம், ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலாளர் தங்கராஜ், ஈரோடு மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் முருகன், வர்த்தக அணி செயலாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் பழனிசாமி அணியில் இணைந்தனர்.

ஈரோடு மாவட்டச் செயலாளர் முருகானந்தம் இது குறித்துப் பேசுகையில், "ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் என்பவரை அறிவித்தபோது, மாவட்டச் செயலாளரான எனக்கு தெரியாமலே அறிவித்தார்கள். கட்சியில் மரியாதை இல்லை. செயல்படுத்துகிற இடத்தில் யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. புகார்களை மதிப்பதில்லை. சரியான ஆட்கள் யாரும் ஓபிஎஸ்ஸிடம் இல்லை. வேட்பாளர் செந்தில் முருகன் என்பவரை நான் பார்த்தது கூட இல்லை. அவர் கட்சியின் உறுப்பினராக கூட இல்லை. மாவட்ட செயலாளர் மற்றும் மாவட்ட நிர்வாகிகளான எங்களை கலந்தாலோசிக்கவில்லை. இதுகுறித்து கேட்டதற்கு எங்களிடம் அவர்கள் எதுவுமே தெளிவுபடுத்தவில்லை. கட்சியில் மரியாதை கிடையாது. ஈரோடு மாவட்டத்தில் 106 பொறுப்பாளர்களை நியமித்தோம். அவர்கள் எல்லோரும் எடப்பாடி பழனிசாமி அணிக்கு வருவதற்கு தயாராக இருக்கிறார்கள். இப்போதைக்கு நாங்கள் 5 பேர் மட்டும் முடிவு எடுத்து உடனடியாக எடப்பாடி பழனிசாமியை சந்தித்தோம். மரியாதை இல்லாத இடத்தில் எப்படி இருக்க முடியும். மரியாதைக்கு தான் அரசியல் செய்கிறோம். ஆனால் நாங்கள் மன ரீதியாக பாதிக்கப்பட்டு இருக்கிறோம். கஷ்டத்திற்கு ஒரு மதிப்பு வேண்டும். அந்த மதிப்பு ஓபிஎஸ் அணியில் இல்லை. இடைத்தேர்தலில் எனக்கு வாய்ப்பு கொடுங்கள் என்றேன். ஆனால் வாய்ப்பு தரவில்லை. மனரீதியாக பாதிக்கப்பட்டு இருக்கிறோம்" என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT