ADVERTISEMENT

‘பாஜக ஆட்சி பொறுப்பேற்கும் போது பொருளாதாரம் பலவீனமாக இருந்தது’ - நாடாளுமன்றத்தில் வெள்ளை அறிக்கை தாக்கல்

06:24 PM Feb 08, 2024 | mathi23

இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31 ஆம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான கடந்த 31 ஆம் தேதி அன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. இதனையடுத்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான கடந்த 1 ஆம் தேதி மத்திய அரசின் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

ADVERTISEMENT

அதில், “கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசின் செயல்பாடுகளால் நாடு அடைந்துள்ள வளர்ச்சி குறித்து நடப்பு கூட்டத் தொடரிலேயே வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த 5 ஆம் தேதி (05.02.2024) குடியரசுத் தலைவர் உரைக்கு மக்களவையில் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். மேலும் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் மோடி நேற்று (07-02-24) மாநிலங்களவையில் பதிலளித்துப் பேசினார்.

ADVERTISEMENT

இந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இரு அவைகளிலும், மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்தார். 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையான 10 ஆண்டுக்கால மன்மோகன் சிங் கீழ் காங்கிரஸ் ஆட்சியில் பொருளாதார கொள்கைகள் தொடர்பாக வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், அப்போதைய அரசால் எடுக்கப்பட்ட பொருளாதார முடிவுகள், நடவடிக்கைகள் அதில் இடம்பெற்றுள்ளன.

2008ம் ஆண்டு நிகழ்ந்த உலகப் பொருளாதார மந்த நிலையின் போது இந்தியா மோசமாக பாதிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சி பொறுப்பேற்கும் போது பொருளாதாரம் மிகவும் பலவீனமான நிலையில் இருந்தது. டெலிகாம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் மிகவும் மோசமாக இருந்தது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகளை அதிகரிக்க உள்கட்டமைப்பில் காங்கிரஸ் அரசு முதலீடு செய்யவில்லை. மேலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் முதலீடுகள் குறைந்த அளவிலேயே இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி விட்டுச் சென்ற சவால்களை கடந்த 10 ஆண்டுகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு வெற்றிகரமாக சமாளித்துள்ளது. இந்தியாவை நிலையான வளர்ச்சிப் பாதையில் வைக்க கடினமான முடிவுகளை தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு எடுத்துள்ளது என்று வெள்ளை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT