Skip to main content

"இதே நிலை தொடர்ந்தால் தனி நாடு கேட்போம்" -  காங்கிரஸ் எம்.பி. ஆதங்கம்

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
Congress M.P d.k.suresh says If this situation continues we will ask for a separate country

இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று (31-01-2024) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. அந்த வகையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான இன்று (01-02-2024) மத்திய அரசின் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவையில் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து 58 நிமிடங்கள் உரை நிகழ்த்தினார்.

நாடாளுமன்றத்தில், அவர் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட் குறித்து பலரும் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே. சுரேஷ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், "இது தேர்தல் பட்ஜெட். இந்த இடைக்கால பட்ஜெட்டில் பெயர்கள் மட்டுமே மாற்றப்பட்டுள்ளன. அவர்கள், சில சமஸ்கிருத பெயர்கள் மற்றும் ஹிந்தி பெயர்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். 

மத்திய அரசு, தென் மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி மற்றும் நேரடி வரிகளில் சரியான முறையில் பங்கை வழங்குவதில்லை. தென் மாநிலங்கள் அநீதியை சந்தித்து வருகின்றன. தென் மாநிலங்களில் இருந்து பணத்தை வசூலித்து வட மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது. இதே நிலை தொடர்ந்தால், தனி நாடு கோரும் நிலைக்கு தள்ளப்படுவோம். 4 லட்சம் கோடிக்கு மேல் எங்களிடம் இருந்து மத்திய அரசு பெறுகிறது. ஆனால், அதற்கு ஈடாக நாம் பெறுவது மிகவும் சொற்பம் தான். இதை நாம் கேள்வி கேட்க வேண்டும். இதை சரி செய்யாவிட்டால் அனைத்து தென் மாநிலங்களும் தனி நாடு கோரி குரல் எழுப்ப வேண்டும்" என்று கூறினார். தனி நாடு கோரும் நிலைக்குத் தள்ளப்படுவோம் என்று இவர் கூறியது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

சார்ந்த செய்திகள்