ADVERTISEMENT

மம்தாவால் அதிருப்தி... திரும்ப அழைக்கப்பட்ட மேற்கு வங்க தலைமை செயலாளர்!

10:19 AM May 29, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

வங்கக்கடலில் உருவான யாஷ் புயல், கடந்த 26ஆம் தேதி ஒடிஷா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கிடையே கரையைக் கடந்தது. இதனையொட்டி புயலால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்ட பிரதமர் மோடி, ஒடிசா முதல்வர் மற்றும் அதிகாரிகளுடன் புயல் பாதிப்பு குறித்து ஆலோசனை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து, மேற்கு வங்கம் சென்ற பிரதமர் மோடி, அம்மாநில முதல்வர் மம்தா மற்றும் அதிகாரிகளோடு ஆலோசனை நடத்துவதாக இருந்தது. ஆனால் மேற்கு வங்க முதல்வர் மம்தாவும், மேற்கு வங்க தலைமைச் செயலாளரும் ஆலோசனை கூட்டத்திற்கு 30 நிமிடங்கள் தாமதமாக வந்ததுள்ளனர். வந்தவுடன் புயல் தாக்கம் குறித்த பேப்பர்களை வழங்கிவிட்டு வேறு கூட்டங்கள் இருப்பதாக கூறி உடனடியாகச் சென்றுவிட்டனர். இதற்கு மத்திய அமைச்சர்கள் உட்பட பாஜகவினர் கண்டம் தெரிவித்தனர்.

இந்தநிலையில், ஆலோசனைக் கூட்டம் முடிந்த சில மணிநேரங்களிலேயே, மேற்கு வங்க தலைமைச் செயலாளர் அலபன் பாண்டியோபாத்யாய் இடமாற்றம் செய்யப்பட்டு, மத்திய அரசுப் பணிக்குத் திரும்ப அழைக்கப்பட்டுள்ளார். அலபன் பாண்டியோபாத்யாய் இந்த மாதம் 31ஆம் தேதியோடு ஓய்வுபெறுவதாக இருந்தது. இருப்பினும் மம்தா பானர்ஜி, கரோனா தடுப்பு பணிகளைக் கருத்தில்கொண்டு அவருக்கு மூன்று மாதம் பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். இதனையடுத்து அலபன் பாண்டியோபாத்யாய்க்கு மூன்று மாதங்கள் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இதற்கான ஒப்புதலை மத்திய அரசு கடந்த 24ஆம் தேதி வழங்கியது. ஆனால், அடுத்த நான்கே நாட்களில் அவர் மத்திய அரசின் பணிக்கு மாற்றப்பட்டிருப்பதற்கு, மம்தா நடவடிக்கையின் மீதான மத்திய அரசின் அதிருப்தியே காரணம் என கருதப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT