Skip to main content

தீயணைப்பு வீரர்கள் உட்பட ஒன்பது பேர் பலி - மீட்புப்பணி தொடர்பாக மம்தா குற்றச்சாட்டு!

Published on 09/03/2021 | Edited on 09/03/2021

 

eastern railway

 

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில், கிழக்கு ரயில்வேக்கு சொந்தமான கட்டடத்தின் 13வது தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 4 தீயணைப்பு வீரர்கள், 2 ரயில்வே அதிகாரிகள், ஒரு காவல்துறை துணை ஆய்வாளர் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். இந்த தீ விபத்தில் இறந்தவர்களுக்கு குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

இந்த தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரமும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

 

இதனிடையே மீட்புப்பணி தொடர்பாக மம்தா பானர்ஜி ரயில்வே நிர்வாகத்தைக் குற்றஞ்சாட்டியுள்ளார். தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு நேரில் வந்த மம்தா பானர்ஜி, "இந்த இடம் ரயில்வேக்கு சொந்தமானது. இதற்கு பொறுப்பு வகிக்கும் அவர்களால், இந்தக் கட்டடத்தின் வரைபடத்தை வழங்க முடியவில்லை. இந்த துயரச் சம்பவம் தொடர்பாக நான் அரசியல் செய்ய விரும்பவில்லை, ஆனால் ரயில்வேயில் இருந்து யாரும் இங்கு வரவில்லை" எனத் தெரிவித்தார்.

 

ஆனால் இதற்குப் பதிலளித்துள்ள கிழக்கு ரயில்வேயின் பொது மேலாளர், “ரயில்வே அதிகாரிகள் அங்கு இருந்தனர். உடனடியாக அவர்களால் வரைபடத்தை வழங்க முடியாமல் போயிருக்கலாம்” என்றார். இந்த விபத்து குறித்து உயர்மட்டக் குழு விசாரிக்க உத்தரவிட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.

Next Story

வாக்களிக்கத் தயாரான மக்கள்; ரயில்வேயின் திடீர் அறிவிப்பால் அவதி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Suffering from the sudden announcement of the railway for assam People ready to vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 87 தொகுதிகள் தேர்தல் நடைபெறுகிறது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணமடைந்ததால் அந்த தொகுதியில் மட்டும் மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் ஈடுபட்டுள்ளனர். கேரள மாநிலம் வயநாட்டில் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள வாக்குச்சாவடிகளில் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 

Suffering from the sudden announcement of the railway for assam People ready to vote

இதற்கிடையில் 2 ஆம் கட்ட வாக்குப்பதிவுக்கு ஒரு நாள் முன்னதாக அஸ்ஸாமுக்கு மற்றும் அங்கிருந்து செல்லும் பல ரயில்களை ரத்துசெய்து மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக வடகிழக்கு எல்லை ரயில்வே அறிவித்துள்ளது. இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் அஸ்ஸாமின் 5 தொகுதிகளில் இன்று (26-04-24) இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், நேற்று (25-04-24) லும்டிங் பிரிவில் உள்ள ஜதிங்கா லம்பூர் மற்றும் நியூ ஹரங்காஜாவோ நிலையங்களுக்கு இடையே ரயில் தடம் புரண்ட சம்பவத்தின் காரணமாக பல ரயில்களின் நேரத்தை மாற்றியமைத்து ரத்து செய்ததாக வடகிழக்கு எல்லை ரயில்வே அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது.

கல்வி, தொழில் மற்றும் வேலைவாய்ப்பு நிமித்தமாக பிற மாநிலங்களுக்கு சென்று வாழும் அஸ்ஸாமிய மக்கள் இன்று ஓட்டு போடுவதற்காக தங்கள் சொந்த மாநிலமான அஸ்ஸாம் நோக்கி வர வார இறுதி விடுமுறையில் கிளம்ப இருந்த நேரத்தில் நேற்று (25-04-24) மாலை திடீரென்று அஸ்ஸாம் செல்லும் 15 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ரயில்வேயின் இந்த திடீர் அறிவிப்பால், பொதுமக்கள் பலரும் அவதியடைந்து வருகின்றனர். இதுபோன்ற முக்கியமான நாளில் வாக்காளர்கள், வாக்குச் சாவடிகளுக்குச் செல்வதைத் தடுக்கும் முயற்சியில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும், இந்த அறிவிப்புக்கு பின்னால் பா.ஜ.க.வின் சதி இருப்பதாகவும் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.