Skip to main content

"தலைமை செயலாளரை விடுவிக்க முடியாது" - பிரதமருக்கு மம்தா கடிதம்!

Published on 31/05/2021 | Edited on 31/05/2021

 

mamata - modi

 

வங்கக்கடலில் உருவாகி ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் இடையே கரையைக் கடந்த யாஷ் புயலால் ஏற்பட்ட சேதத்தை ஆய்வுசெய்த பிரதமர் மோடி, சில தினங்களுக்கு முன்பு மேற்கு வங்கத்திற்கு வருகைதந்தார். அங்கு அவரும், மேற்கு வங்க முதல்வரும் புயல் பாதிப்பு குறித்து ஆலோசனை நடத்துவதாக இருந்தது. ஆனால் மம்தாவும் மேற்கு வங்க தலைமைச் செயலாளரும் இந்தக் கூட்டத்திற்குத் தாமதமாக வந்ததாகவும், வந்தவுடன் கிளம்பிவிட்டதாகவும் சர்ச்சை எழுந்தது.

 

பிரதமருடனான ஆலோசனைக் கூட்டம் முடிந்த சில மணிநேரங்களிலேயே, மேற்கு வங்க தலைமைச் செயலாளர் அலபன் பாண்டியோபாத்யாய் இடமாற்றம் செய்யப்பட்டு, மத்திய அரசுப் பணிக்குத் திரும்ப அழைக்கப்பட்டார். இன்று காலை (31.05.2021) 10 மணிக்கு டெல்லி நார்த் ப்ளாக்கில் பணியில் சேரவும் அவருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மம்தா, பிரதமரின் அனுமதியுடன்தான் கூட்டத்திலிருந்து சென்றதாக விளக்கமளித்ததோடு, பிரதமரை கடுமையாக விமர்சித்தார். மேலும், தலைமைச் செயலாளரை மத்திய அரசுப் பணிக்கு அழைக்கும் உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

 

இந்தநிலையில், மம்தா பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர், ‘இந்த முக்கியமான நேரத்தில் மேற்கு வங்க அரசால் தலைமைச் செயலாளரை விடுவிக்க முடியாது.’ விடுவிக்கவுமில்லை என தெரிவித்துள்ளதோடு, தலைமைச் செயலாளரைத் திரும்ப அழைக்கும் உத்தரவை மறுபரிசீலனை செய்து, இரத்து செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“காங்கிரசிற்கு ஒரு வாக்குக்கூட கிடைக்காது” - மம்தா பானர்ஜி அதிரடி பேச்சு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Mamata Banerjee speech on Congress won't get a single vote in west bengal

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொண்டு நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ், இடது சாரிகள் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன.

இதற்கிடையில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ், 42 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. இது காங்கிரஸ் தரப்பினரிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், தொகுதி பங்கீடு தொடர்பாக திரிணாமுல் காங்கிரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறிய காங்கிரஸ் கட்சிக்கும் மேலும் அதிருப்தி ஏற்படுத்தும் வகையில், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 42 வேட்பாளர்களை மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்தார்.

அந்த வகையில், 42 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில், ஏப்ரல் 19, 26 மற்றும் மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மேலும், பகவான்கோலா மற்றும் பாராநகர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் மே 7 மற்றும் ஜூன் 1 அன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி மேற்கு வங்கத்தில் தேர்தல் நடைபெற்றது. வரும் 26ஆம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. 

அதன்படி, மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நேற்று (24-04-24) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், “மேற்கு வங்கத்தில் 26,000 ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆசிரியர்களிடமிருந்து அல்ல, எந்த அரசாங்க ஊழியரிடமிருந்தும் பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸுக்கு ஒரு வாக்கு கூட கிடைக்காது. உச்சநீதிமன்றத்தில் இருந்து நீதி கிடைக்கும் என இன்னும் நான் நம்புகிறேன்.

பாஜக உயர் நீதிமன்றத்தை விலைக்கு வாங்கியுள்ளனர். சி.பி.ஐயை விலைக்கு வாங்கியுள்ளனர். என்.ஐ.ஏ.வை வாங்கியுள்ளனர். பி.எஸ்.எப்-ஐ விலைக்கு வாங்கியுள்ளனர்.  தூர்தர்ஷனின் நிறத்தை காவி நிறமாக்கி விட்டார்கள். அதில், பாஜக மற்றும் மோடியைப் பற்றி மட்டுமே பேசுவார்கள். அதைப் பார்க்காதீர்கள். புறக்கணிக்க வேண்டும்” என்று கூறினார். 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.