ADVERTISEMENT

சுரங்கப் பாதை விபத்து; இறுதிக் கட்டத்தை எட்டிய மீட்புப் பணி

11:58 AM Nov 23, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உள்ள சில்க்யாரா என்ற பகுதியில் அமைந்துள்ள யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது. இந்த சூழலில் கடந்த 12 ஆம் தேதி (12/11/2023) காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாகச் சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி பணியில் இருந்த 41 தொழிலாளர்கள் சுரங்கத்தின் உள்ளே சிக்கினர். சுமார் 4.5 கி.மீ. நீளமுள்ள சுரங்கப் பாதையில் 150 மீட்டர் இடிந்து விழுந்து இந்த விபத்து நிகழ்ந்தது.

மீட்புப் பணிகளில் 12வது நாளாகத் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள், தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் முயற்சி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களும் இன்று பிற்பகலுக்குள் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி சம்பவம் நடைபெற்ற சில்க்யாரா சுரங்கப்பாதை அமைந்துள்ள இடத்திற்கு சென்று மீட்புப் பணிகள் குறித்து கேட்டறிந்தார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், “ஆஜர் இயந்திரம் மூலம் 45 மீட்டர் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. தொழிலாளர்களை மீட்பதில் சில தடைகள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும் தொழிலாளர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் என்று நம்புகிறேன். தொழிலாளர்கள் மீட்புக்கு பின்னர் தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதாவது ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு தேவையான வசதிகள் தயாராக உள்ளன. பிரதமர் மோடி ஒவ்வொரு நாளும் மீட்பு பணி குறித்து கேட்டறிந்து வருகிறார். இன்றும் இது குறித்த அப்டேட் கேட்டார். தொழிலாளர்களை மீட்க எங்கள் நிபுணர்கள் குழு இரவு பகலாக உழைத்து வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.

கர்வால் ரேஞ்ச் போலீஸ் ஐ.ஜி., கே.எஸ். நக்ன்யால் கூறுகையில், “ஆம்புலன்ஸ்களுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல உள்ளோம். சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களின் நிலை கவலைக்கிடமாக இருக்கும் பட்சத்தில், மருத்துவரின் ஆலோசனையின்படி, தேவைப்பட்டால் விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும். தொழிலாளர்களுக்கு சிறந்த மருத்துவ உதவி தேவைப்பட்டால் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுவார்கள்” எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT