ADVERTISEMENT

"தலிபான் ஸ்டைலில் தாக்குதல் நடத்த வேண்டும்" - பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை கருத்து! 

11:41 AM Aug 20, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், பாஜகவிற்கும் நீண்ட நாட்களாக மோதல் நடைபெற்றுவருகிறது. இந்தநிலையில் தற்போது மம்தா, பாஜக ஆளும் திரிபுராவில் ஆட்சியைப் பிடிக்க காய்களை நகர்த்திவருகிறார். இதனையொட்டி மேற்கு வங்க திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் எம்.பிக்கள் அவ்வப்போது நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், கட்சிப் பணிகளைக் கவனிக்கவும் திரிபுராவிற்குச் சென்றுவருகின்றனர்.

இந்தநிலையில், மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் பிரதிமா பவுமிக்கிற்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் பேசிய திரிபுரா மாநில பாஜக எம்.எல்.ஏ அருண் சந்திர பவுமிக், திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்கள் மீது தலிபான் ஸ்டைலில் தாக்குதல் நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர், "மேற்கு வங்கத்தைச் சேர்ந்த திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்கள் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியின் தூண்டுதலால் பிப்லாப் தேப் தலைமையிலான பாஜக அரசை சேதப்படுத்த முயற்சித்துவருகிறார்கள். அவர்கள் இங்கிருக்கும் விமான நிலையத்திற்கு வந்து இறங்கினால், நாம் அவர்களைத் தலிபான் ஸ்டைலில் தாக்க வேண்டும் என உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். பிப்லாப் தேப் தலைமையிலான நமது அரசை, ஒவ்வொரு துளி இரத்தத்தாலும் பாதுகாப்போம்" என தெரிவித்துள்ளார்.

இது பெரும் சர்ச்சையையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. அருண் சந்திர பவுமிக்கை கைது செய்ய வேண்டுமென திரிணாமூல் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இதற்கிடையே திரிபுரா பாஜக செய்தித்தொடர்பாளர், அருண் சந்திர பவுமிக் தெரிவித்தது அவரது சொந்த கருத்து எனவும், கட்சி அதற்குப் பொறுப்பேற்காது எனவும் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT