ADVERTISEMENT

பிளவுவாதிகளின் தலைவர் மோடி!  -கடுமையாக விமர்சித்த டைம் இதழ்!

03:46 PM May 10, 2019 | Anonymous (not verified)

நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இன்னமும் இரண்டே கட்ட வாக்குப்பதிவு வேலைகள் மீதமிருக்கின்றன. மோடியே மீண்டும் பிரதமராக பொறுப்பேற்பாரா? அல்லது ராகுல்காந்தி ஆட்சியைக் கைப்பற்றுவாரா? என்ற விவாதங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.

ADVERTISEMENT


இந்தவேளையில், உலகப்புகழ்பெற்ற டைம் இதழின் மே-20 தேதியிட்ட வெளியீட்டில், மோடியை விமர்சித்து அட்டைப்பட கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அந்தக் கட்டுரைக்கு, ‘இந்தியாவின் பிளவுவாதிகளின் தலைவன்’ என்ற தலைப்பும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த அட்டைப்படத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு விமர்சித்து வருகின்றனர்.

இந்தக் கட்டுரையை எழுதியிருக்கும் ஆடிஸ் தஸீர், “உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக அழைக்கப்படும் இந்தியா, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பிளவுபட்டுக் கிடக்கிறது” என குறிப்பிட்டிருக்கிறார். மோடி ஆட்சியின் கீழான இந்த ஐந்து ஆண்டுகளில் பசு குண்டர்கள் தாக்குதல், 2017-ல் உபி முதல்வராக யோகி ஆதித்யநாத்தை முதல்வராக ஆக்கியது, போபால் பா.ஜ.க. வேட்பாளராக சாத்வி பிரக்யா சிங்கை நிறுத்தியது என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளைக் குறித்து விவரித்திருக்கிறார்.

ஆடிஸ் தனது கட்டுரையில் எதிர்கட்சியான காங்கிரஸையும் விட்டு வைக்கவில்லை. மிக மோசமான கூட்டணியை அமைத்தது, கூட்டணிப் பேச்சுவார்த்தையின் போது இணக்கமான சூழலை ஏற்படுத்தாதது என சில விஷயங்கள் குறித்தும், ராகுல்காந்தியையும் கடுமையாக விமர்சித்திருக்கிறார். அதேசமயம், இதே தேதியிட்ட டைம் இதழில் , “இந்தியப் பொருளாதார சீர்திருத்தத்தின் மாபெரும் நம்பிக்கை” என்ற இன்னொரு கட்டுரையும் வெளியாகி இருக்கிறது.

இதற்கு முன்னர் 2015-ம் ஆண்டில் மோடி உடனான நேர்காணல் தொடர்பான அட்டைப்படக் கட்டுரையை வெளியிட்டது டைம் இதழ். ஆன்லைன் வாசகர்களுக்காக நடத்திய கருத்துக்கணிப்பிலும் மோடி வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

“மோடி ஆட்சியைப் பிடித்த ஓராண்டுக்குள் வெளியான அட்டைப்படக் கட்டுரையும், தற்போது வெளியாகி இருக்கும் இந்த கட்டுரையும் நேரெதிரானவை. சரியான சமயத்தில் இந்தக் கட்டுரை வெளிவந்துள்ளது” என பலரும் கருத்து தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT