ADVERTISEMENT

.குருவாயூர் போல் சபரிமலைக்கும் தனிச்சட்டம்! -கேரள அரசுக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்!

09:41 PM Nov 20, 2019 | kalaimohan

குருவாயூர் கோவிலுக்கும் பக்தர்கள் வழிபாட்டுக்கும் பிரத்யேக தனிச்சட்டம் உள்ளதுபோல், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கென்று தனிச்சட்டத்தை உருவாக்கப்பட வேண்டும் என, கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT


ரஞ்சன் கோகாய் அமர்வானது, அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்திட தடையில்லை என்றது. மேலும், இந்த வழக்கை ஏழு நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வுக்கு மாற்றியது. நீதிபதி ரமணா தலைமையிலான இந்த அமர்வில் இன்று விசாரணை நடந்தது. அப்போது நீதிபதிகள் ‘சபரிமலை கோவிலுக்காக புதிய சட்டம் உருவாக்கும்படி கேரள மாநில அரசைக் கேட்டிருந்தோம். அவர்கள் இன்று திருவாங்கூர்-கொச்சி இந்துமத அமைப்புகள் சட்டத்தை திருத்தியது தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளனர். இதனை ஏற்க இயலாது. குருவாயூர் கோவிலுக்கென்று தனிச்சட்டம் நடைமுறையில் உள்ளது. அதுபோல், சபரிமலை கோவில் நிர்வாகத்துக்கும் பக்தர்கள் வழிபாட்டுக்கென்றும் புதிய தனிச்சட்டம் உருவாக்கப்பட வேண்டும். இதற்காக கேரள அரசுக்கு 4 வார கால அவகாசம் அளிக்கிறோம். தனிச்சட்டம் தொடர்பான விரிவான அறிக்கையை ஜனவரி 3-ஆம் தேதிக்குள் உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு தாக்கல் செய்ய வேண்டும். இதனைத் தாமதப்படுத்துவது கூடாது. தனிச்சட்டம் உருவாக்கினால்தான், பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு உதவ முடியும். புதிய அறிவிப்புக்கள் வரும்வரை பழைய உத்தரவே செல்லும். அதன்பிரகாரம், சபரிமலை ஆலயத்தில் தற்போது அனைத்து வயது பெண்கள் சென்று வழிபடுவதற்கு எந்தத் தடையும் இல்லை.” என்று கூறினார்கள்.

ADVERTISEMENT

தற்போது கார்த்திகை சீசன் என்பதால், சபரிமலை செல்லும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. கேரள அரசோ, 50 வயதுக்குக் குறைவான பெண்கள் வந்தால் பாதுகாப்பு அளிக்க முடியாது என்று தெரிவித்துவிட்டது. ஆனாலும், சபரிமலையில் தரிசனம் செய்வதற்கு அனுமதி கோரி இதுவரையில் இளம்பெண்கள் 319 பேர் ஆன்லைனில் விண்ணப்பித்திருக்கின்றனர். அதேநேரத்தில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண்களில் ஒருவர்கூட சபரிமலை தரிசனத்திற்காக முன்பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT