ADVERTISEMENT

கரோனாவால் சரிந்த பங்குச்சந்தைகள்! ஆனாலும் முதலீட்டுக்கு ஏற்ற காலம் இதுதான்! 

06:41 AM Jun 16, 2020 | rajavel

ADVERTISEMENT


கரோனா வைரஸின் இரண்டாவது அலை விசுவரூபம் எடுத்துள்ளதால் திங்களன்று (ஜூன் 15) இந்தியப் பங்குச்சந்தைகளில் கரடியின் ஆதிக்கமே நிலவியது. இதனால் பங்குகளின் மதிப்பு கடுமையாக சரிவடைந்தன. வீழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும், முதலீடு செய்வதற்கு இதுதான் தக்க தருணம் என்கிறார்கள் சந்தை ஆய்வாளர்கள்.

ADVERTISEMENT


மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் தடாலடியாக 552.09 புள்ளிகள் சரிவடைந்து, நேற்றைய வர்த்தக நேர முடிவில் 33228 புள்ளிகளில் நிறைவடைந்தது.

சென்செக்ஸில் நேற்று துவக்கநிலை இண்டெக்ஸ் 33670 புள்ளிகளாக இருந்த நிலையில், ஒருகட்டத்தில் 32923.74 புள்ளிகள் வரை வீழ்ச்சி கண்டது. துவக்கநிலையும் அதிகபட்ச உயர்வும் ஒரே அளவில் இருந்தது. சென்செக்ஸில் வணிக கணக்குகளை மதிப்பிட உதவும் 30 பங்குகளில் நான்கு பங்குகள் மட்டுமே ஓரளவு விலை உயர்ந்தன. மற்ற 26 பங்குகளின் மதிப்பும் சரிவடைந்தன.

தேசிய பங்குச்சந்தையிலும் கரோனா தாக்கம் தன் வேலையைக் காட்டி இருந்தது. நிப்டியின் துவக்கநிலை இண்டெக்ஸ் 9919 புள்ளிகளாக இருந்ததால், சந்தை நிபுணர்கள் கணிப்பின்பிடி நேற்றே 10000 புள்ளிகளை எட்டிவிடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதற்கேற்ப ஒருகட்டத்தில் நிப்டி 9943 புள்ளிகள் வரை எகிறின. பின்னர் படிப்படியாக சரிந்து வர்த்தக நேர முடிவில் 9813.70 புள்ளிகளில் நிறைவடைந்தன. அதாவது, முந்தைய நாள் நிலவரத்தைக் காட்டிலும் இது 159.20 புள்ளிகள் (1.60 சதவீதம்) சரிவாகும்.


நிப்டியின் 50 முக்கிய பங்குகளில் 8 பங்குகள் முதலீட்டாளர்களுக்கு ஓரளவு லாபம் கொடுத்தன. மற்ற 42 பங்குகள் கடும் வீழ்ச்சி அடைந்தன.

கெயில் 3.68 சதவீதம், விப்ரோ 2.60 சதவீதம், ஹெச்சிஎல் டெக் 1.49 சதவீதம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 1.48 சதவீதம், சன் பார்மா 0.84 சதவீதம் ஆகிய பங்குகள் நிப்டியில் வளர்ச்சி கண்டன.

அதேபோல், தொடர்ந்து லாபம் கொடுத்து வந்த இண்டஸ் இந்த் வங்கி பங்குகள் 7.20 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தன. ஆக்சிஸ் வங்கி 4.49 சதவீதம், டாடா மோட்டார்ஸ் 4.42 சதவீதம், பஜாஜ் பைனான்ஸ் 3.93 சதவீதம், ஐசிஐசிஐ வங்கி 3.39 சதவீதம் சரிவடைந்தன.


அதேபோல் வங்கி மற்றும் நிதி சேவை நிறுவனங்களின் பங்குகளின் வீழ்ச்சியும் சந்தையின் சரிவுக்கு முக்கிய காரணம். கரோனா தாக்கம் காரணமாக முதலீட்டாளர்கள், கையிருப்பில் உள்ள பங்குகளை அதிகளவில் விற்பனை செய்ய ஆர்வம் காட்டியதும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியும் இந்தியப் பங்குச்சந்தைகளை பதம் பார்த்துள்ளன.


''சில நாள்களுக்கு முன்பு நிப்டி 9544 புள்ளிகளாக வீழ்ச்சி கண்டிருந்தபோதும் வாரத்தின் துவக்க நாளில் (ஜூன் 15) 9813 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றிருப்பது, நேர்மறையாகவே பார்க்கப்படுகிறது. நடப்பு வாரத்தில் 10000 முதல் 10200 புள்ளிகள் என்ற நிலையில் வர்த்தகம் நடைபெற வாய்ப்புகள் உள்ளன. ஆகையால், ஒவ்வொருமுறை பங்குகளின் மதிப்பு சரிவடையும்போதும் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கிப் போடுவதற்கு இப்போது ஏற்ற தருணம்தான்,'' என்கிறார் மோதிலால் ஆஸ்வால் நிதி சேவை நிறுவன ஆய்வாளர் அர்பித் பேரிவால்.

சந்தை நிலையற்றதாக இருக்கும் என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறோம். இந்நிலையில், ஸ்மால் கேப், மிட்கேப் பங்குகளில் அன்றைய நிலவரத்தைப் பொருத்து முதலீடு செய்யலாம்.

நீண்டகால முதலீட்டுக்கு...:

நீண்ட கால முதலீட்டை விரும்புவோர் ரிலையன்ஸ், மைண்ட்ரீ, பரோடா வங்கி, டாக்டர் ரெட்டி, ஹிண்டால்கோ, லூபின், காட்ரெஜ், அப்பல்லோ ஹாஸ்பிடல், ஹெச்சிஎல் டெக், பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகிய பங்குகளில் முதலீடு செய்யலாம்.

குறுகிய கால ஆதாயம்:

பேஜ் இண்டியா, டிவிஸ் லேப், நேஷனல் அலுமினியம், ஐடிஎப்சி பர்ஸ்ட், ஐடிசி, கம்மின்ஸ் இண்டியா, ஆர்பிஎல் வங்கி, ஐஜிஎல் கெடிலாக் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஓரிரு காலாண்டிற்குள் ஆதாயம் அளிக்க வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

மிகக்குறுகிய கால முதலீட்டுக்கு:

அப்பல்லோ டயர், டாடா பவர், செஞ்சுரி டெக்ஸ், பயோகான், கெயில், ஓன்ஜிசி, சிப்லா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் மிகக்குறுகிய கால முதலீட்டுக்கு ஏற்றவை என்கிறார்கள்.


வாங்கும் ஆர்வம்:

ஜூபிலாண்ட் லைப், டிவி18 பிராட்காஸ்ட், டாடா கம்யூனிகேஷன்ஸ், சுமிட்டோமோ கெமிக்கல் இண்டியா, ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ் ஆகிய பங்குகள் அதிக ஆதாயம் தரக்கூடியவை என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்களிடம் நிலவுவதால் இப்பங்குகளுக்கு சந்தையில் இன்றும் (ஜூன் 16) அதிக தேவை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT