ADVERTISEMENT

திருமணத்தை மீறிய உறவு; தம்பியை 20 துண்டுகளாக வெட்டிக் கொடூரமாகக் கொன்ற அக்கா

10:53 AM Mar 22, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

கர்நாடகா மாநிலம் விஜயபுரா மாவட்டம் சிந்திகி அருகே உள்ள தேவனாங்காவ் கிராமத்தைச் சேர்ந்தவர் சித்தப்பா. இந்த ஊர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ளது. சித்தப்பாவின் மகள் பாக்கியஸ்ரீ (31). இவரும் அதே பகுதியில் உள்ள சாசாபாலு கிராமத்தைச் சேர்ந்த சங்கரப்பா தளவார் (32) என்பவரும் கல்லூரியில் படித்த காலகட்டத்தில் இருந்தே காதலித்து வந்துள்ளனர். இருதரப்பு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த 2015ம் ஆண்டு பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். ஆனாலும் இருதரப்பும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் பெற்றோர்கள் அவர்களைப் பிரித்து விட்டனர்.

இதையடுத்து சங்கரப்பாவுக்கு திருமணமாகியது. கருத்து வேறுபாட்டால் ஆறு மாதங்களிலேயே அவர் மனைவியைப் பிரிந்து சொந்த கிராமத்தை விட்டு கர்நாடகா மாநில எல்லையில் உள்ள ஜிகினி தொழிற்பேட்டையில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு தனியாக அறை எடுத்து தங்கியபடி வேலை செய்து வந்த சங்கரப்பா, தனது முன்னாள் காதலி பாக்கியஸ்ரீயுடன் அவ்வப்போது கைப்பேசியில் பேசி வந்தார். மீண்டும் அவர்களுக்குள் காதல் நெருக்கம் அதிகரித்தது. இதையடுத்து, சங்கரப்பா, ஒருநாள் காதலியை ஜிகினிக்கு வருமாறு அழைத்துள்ளார். அங்கு சென்ற பாக்கியஸ்ரீ அதன்பின் வீடு திரும்பவில்லை. காதலர்கள் இருவரும் கணவன், மனைவி போல் ஒரே அறையில் தங்கி குடும்பம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில், பாக்கியஸ்ரீயின் தம்பி லிங்கராஜ் (22) கடந்த 2015ம் ஆண்டு அக்காவைத் தேடி ஜிகினி பகுதிக்குச் சென்றார். அங்கு தனது அக்கா சங்கரப்பாவுடன் திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்தி வருவதை அறிந்து ஆத்திரம் அடைந்தார். சங்கரப்பா ஏற்கனவே திருமணமானவர். அவருடன் வாழ வேண்டாம் என்றும், தன்னுடன் சொந்த ஊருக்கு வந்துவிடுமாறும் அக்காவை லிங்கராஜ் அழைத்துள்ளார். அதற்கு பாக்கியஸ்ரீ மறுத்துவிட்டார். ஆனால், லிங்கராஜ் தொடர்ந்து அவர்களுக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டிருந்தார்.

தனது காதல் வாழ்க்கைக்கு தம்பி இடையூறாக இருப்பதாக எண்ணிய பாக்கியஸ்ரீ, காதலன் சங்கரப்பாவுடன் சேர்ந்து அவரை அடித்துக் கொலை செய்தார். பின்னர் சடலத்தை 20 துண்டுகளாக வெட்டி 3 பைகளில் அடைத்து ஜிகினி மற்றும் அருகில் உள்ள மஞ்சனஅள்ளி ஏரிகளில் வீசிவிட்டனர். இதையடுத்து பாக்கியஸ்ரீயும் சங்கரப்பாவும் ஜிகினியில் இருந்து தப்பித்து மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் கடந்த 8 ஆண்டுகளாக தலைமறைவாக வாழ்ந்து வந்தனர். மற்றொருபுறம் லிங்கராஜ் கொலை வழக்கு தொடர்பாக ஜிகினி காவல்துறையினர் கொலையாளிகளைத் தேடி வந்தனர்.

இந்த நிலையில்தான், கொலையாளிகள் இருவரும் மகாராஷ்டிரா மாநிலத்தில் பதுங்கி இருப்பது ஜிகினி காவல்துறைக்கு தெரியவந்தது. ரகசியத் தகவலின் பேரில் மார்ச் 19ம் தேதி காவல்துறை தனிப்படையினர் மகாராஷ்டிரா மாநிலம் விரைந்தனர். அங்கு ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்த பாக்கியஸ்ரீ, சங்கரப்பா ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு சிறையில் அடைத்தனர். முறையற்ற உறவுக்கு தொல்லையாக இருந்த தம்பியை அக்காவே காதலனுடன் சேர்ந்து அடித்துக் கொலை செய்த வழக்கில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT