
கர்நாடக மாநிலம் விஜயப்புரா மாவட்டம் திகோட்டா தாலுகாவை சேர்ந்த கல்கவடாகி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் குரப்பா. இவரது மகள் பள்ளியில் பயின்று வந்த நிலையில் 21 வயதான மல்லு ஜகமண்டி என்ற கல்லூரி மாணவன் அச்சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கல்லூரி மாணவன் தனது மகளை கடத்திச் சென்று விட்டதாகவும், மீட்டுத் தரும்படியும் குரப்பா போலீசில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கல்லூரி மாணவனான மல்லு ஜகமண்டியும் குரப்பாவின் மகளான பள்ளி சிறுமியும் காதலித்து வந்த நிலையில் இதற்கு சிறுமியின் தந்தை குரப்பா எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். காதலை கைவிடும்படி மகளை பலமுறை எச்சரித்துள்ளார். இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி காதலியை தேடி வீட்டிற்கு சென்ற மல்லு ஜகமண்டி சிறுமியை சந்தித்து தனிமையில் பேசி இருந்துள்ளார். இதனைப் பார்த்த சிறுமியின் தந்தை அவரை கடுமையாக எச்சரித்தார். இதனால் மனமுடைந்த சிறுமி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
தனது மகள் தற்கொலை செய்து கொண்டதை அறிந்து வேதனைப்பட்ட குரப்பா மல்லுவை அழைத்து வந்து சரமாரியாக தாக்கி வலுக்கட்டாயமாக விஷத்தை ஊற்றி கொலை செய்துள்ளார். ஆனால் இந்த கொலையை மறைப்பதற்காக தனது மகளும், மாணவன் ஒருவரும் காணாமல் போனதாக போலீசில் புகார் அளித்தது தெரியவந்தது.
மேலும் சிறுமியின் தந்தையிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இருவரது சடலங்களையும் மூட்டையாக கட்டி கிருஷ்ணா ஆற்றில் வீசியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். பாகல்கோட்டை மாவட்டம் பீலகியில் கிருஷ்ணா ஆற்றில் மிதந்து வந்த மல்லுவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் பள்ளி சிறுமியின் உடலை போலீசார் தேடி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)