ADVERTISEMENT

தலால் ஸ்ட்ரீட்டில் ஏற்ற, இறக்கம் தொடரும்! ஆனாலும் 11,000 புள்ளிகளைக் கடக்கும்!!

09:52 AM Jul 13, 2020 | rajavel

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்திய பங்குச்சந்தைகள் இந்த வாரமும் ஏற்ற, இறக்கத்துடன்தான் இருக்கும் என்றாலும், நிப்டி 11,000 புள்ளிகளைக் கடக்கும் என்கிறார்கள் சந்தை ஆய்வாளர்கள்.


கடந்த வாரத்தில், சென்செக்ஸ் மற்றும் நிப்டி இரண்டு பங்குச்சந்தைகளின் இண்டெக்ஸூம் தலா ஒன்றரை சதவீதம் உயர்ந்தன. கோவிட் 19 தொற்று மீண்டும் அதிகரித்து வருவது முதலீட்டாளர்களை கொஞ்சம் பதற்றத்திலேயே வைத்திருந்ததால் சந்தையில் நிலையற்றத் தன்மையும் காணப்பட்டது.


''நடப்பு வாரத்தில் நிப்டியில் திசை நகர்வு குறியீடு 10,500 - 10,950 மண்டலத்திற்குள் இருக்கும். மேலும், பங்குகள் குறிப்பிட்ட உச்சத்திற்குச் செல்லும்போது ஏற்ற, இறக்கம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்,'' என்கிறார் ரேலிகர் புரோக்கிங் நிறுவன துணைத் தலைவர் அஜித் மிஸ்ரா.


மோதிலால் ஓஸ்வால் நிறுவனத்தின் சந்தன் தபாரியா, கடந்த வாரத்தில் நிப்டி 10,700 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகத்தை முடித்திருப்பது, ஏற்றத்திற்கான அறிகுறியாகும். நடப்பு வாரத்தில் 11,000 புள்ளிகளைக் கடந்து விடும். அல்லது சரிவைச் சந்திக்கும்பட்சத்தில் 10,650 - 10,550 என்ற அளவில் வர்த்தக நடவடிக்கைகள் அமையும் என்கிறார்.


வாரத்தின் முதல் நாளான இன்று (ஜூலை 13) நிப்டிக்கான முக்கியமான சப்போர்ட் லெவல் 10,714.2 புள்ளிகளாகவும் மற்றும் ரெசிஸ்டன்ட் லெவல் 10,660.4 புள்ளிகளாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. இண்டெக்ஸ் மேலே உயர்ந்தால், எதிர்ப்பு நிலைகள் 10,825.6 முதல் 10,873.2 புள்ளிகள் வரை செல்லலாம்.


நிப்டி வங்கி:


ஜூலை 10ஆம் தேதி நிப்டி வங்கிக் குறியீடு 2.22 சதவீதம் குறைந்து 22,398.45 புள்ளிகளுடன் முடிவடைந்தது. வங்கிக் குறியீட்டின் மைய ஆதரவு நிலை 22,200.6 புள்ளிகள் ஆக மதிப்பிடப்படுகிறது. சரிவில் இருந்தால் 22,002.8 புள்ளிகள் வரை செல்லக்கூடும். ஒருவேளை, வங்கிப் பங்குகள் மேலும் உயர்ந்தால் 22,715.7 முதல் 23,033 வரை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


குறுகிய கால ஆதாயம் தரும் பங்குகள்:


ஓப்பன் இன்ட்ரஸ்ட் அடிப்படையில் பின்வரும் பங்குகள் குறுகிய காலத்தில் கணிசமான ஆதாயம் அளிக்கலாம் என்கிறார்கள்.


அதன்படி, செயில், என்.ஐ.ஐ.டி.டெக், இண்டியாபுல் ஹவுன்சிங் பைனான்ஸ், பார்தி ஏர்டெல், டி.சி.எஸ்., டி.எல்.எப்., பவர் கிரிட், கன்கார்டு, பி.வி.ஆர்., எஸ்கார்ட்ஸ் ஆகிய பங்குகள் குறுகிய கால ஆதாயம் தரலாம் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.


காளையின் சென்டிமென்ட்:


கடந்த வெள்ளியன்று (ஜூலை 10) 52 வார சராசரி உச்சத்தைக் கடந்தும் சில பங்குகள் வர்த்தகம் ஆயின. அதனால் அப்பங்குகள் மேலும் உயரக்கூடும் என்ற நம்பிக்கை முதலீட்டாளர்களிடம் எப்போதும் உண்டு.


அதன்படி, ஐ.ஓ.எல். கெமிக்கல்ஸ், பாரத் ரசாயன், லாரஸ் லேப்ஸ், கிரானியூல்ஸ் இண்டியா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய பங்குளின் விலை மேலும் உயரலாம் எனத் தெரிகிறது.


இன்று முடிவுகள் அறிவிக்கும் நிறுவனங்கள்:


5 பைசா கேபிடல், இண்டியா ஹோம் லோன், குவாலிடி பார்மாசூட்டிகல்ஸ், எம்.பி.எல். இன்ப்ராஸ்ட்ரக்ஷர்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஜனவரி & மார்ச் காலாண்டு முடிவுகளை இன்று வெளியிடுகின்றன. இதன் அடிப்படையில் இப்பங்குகளின் விலைகள் ஏற்ற, இறக்கம் காணலாம்.


கடந்த வாரத்தில் மும்பை பங்குச் சந்தையில் எஸ் அண்டு பி மற்றும் பீ.எஸ்.இ. சென்செக்ஸில் 1.59 சதவீதமும், தேசிய பங்குச்சந்தையான நிப்டி 1.52 சதவீதமும் ஏற்றம் கண்டிருந்தது.


கரோனா தொற்று வேகமெடுக்கும் என்ற அச்சத்தால் உலகளவில் பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகளும் புதிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியதிருக்கிறது. அதனால் நடப்பு வாரத்திலும் சந்தையில் ஏற்றம், இறக்கம் கலந்தே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காலாண்டு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், முதலீட்டாளர்கள் அதிகளவில் லாபத்தை புக்கிங் செய்வது அதிகரிக்கும். இதனால் சந்தை குறித்த தகவல்களைத் தெரிந்து கொள்வதில் முதலீட்டாளர்களிடம் ஆர்வமும் அதிகளவில் இருக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT