ADVERTISEMENT

பெகாசஸ் விவகாரம்: அதிரடி உத்தரவை பிறப்பித்த உச்ச நீதிமன்றம்!

11:47 AM Oct 27, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல்வேறு பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரது தொலைபேசிகள் பெகாசஸ் உளவு மென்பொருளால் ஹேக் செய்யப்பட்டு, ஒட்டுக் கேட்கப்பட்டதாக பெரும் சர்ச்சை வெடித்தது. இந்த விவகாரம் தொடர்பாக ஃப்ரான்ஸ், இஸ்ரேல் ஆகிய நாடுகள் விசாரணையில் இறங்கியுள்ளன. இந்திய உச்ச நீதிமன்றத்திலும் இதுதொடர்பாக விசாரணை நடந்துவருகிறது.

இந்தச் சூழலில், பெகாசஸ் விவகாரத்தை விசாரிக்க வல்லுநர் குழுவை அமைக்க தயார் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த மத்திய அரசு, சட்டவிரோதமாக எந்த ஒட்டுக்கேட்பும் நடைபெறவில்லை என கூறியதோடு, தேசிய பாதுகாப்பு தொடர்பான காரணங்களால் மத்திய அரசு பெகாசஸைப் பயன்படுத்தியதா என்பது குறித்து பிரமாணப் பத்திரத்தில் கூற முடியாது எனவும், இந்த விவகாரம் குறித்து அரசுடன் தொடர்பற்ற வல்லுநர்களின் குழுவை அமைக்க அனுமதித்தால் அந்தக் குழுவின் முன்னர் பெகாசஸ் பயன்படுத்தப்பட்டதா இல்லையா என தெரிவிக்க தயார் எனவும் கூறியது.

இதனையடுத்து, இந்த விவகாரத்தில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கவுள்ளதாக உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் அறிவித்தது. இந்தநிலையில், உச்ச நீதிமன்றம் இன்று (27.10.2021) பெகாசஸ் விவகாரத்தில் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா வாசித்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

"மனுதாரர்களில் சிலர் பெகாசஸால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள். அத்தகைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து தீவிரமாக பரிசீலிக்க வேண்டியது மத்திய அரசின் கடமையாகும். நாம் தகவல் சகாப்தத்தில் வாழ்கிறோம். தொழில்நுட்பம் முக்கியமானது என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும். தனியுரிமையைப் பாதுகாப்பது முக்கியம், பத்திரிகையாளர்கள் போன்றவர்களுக்கு மட்டுமின்றி, அனைத்து குடிமக்களுக்கும் தனியுரிமை முக்கியம். இன்றைய உலகில், தனியுரிமை மீது கட்டுப்பாடு விதிக்கப்படுவது பயங்கரவாத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக மட்டுமே ஆகும். மேலும், இந்தக் கட்டுப்பாடுகளைத் தேசிய பாதுகாப்பைப் பாதுகாக்க மட்டுமே விதிக்க வேண்டும்.

2019ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற பெகாசஸ் தாக்குதல் தொடர்பான அனைத்து தகவல்களையும் வெளியிட மத்திய அரசுக்குப் போதுமான அவகாசத்தை நீதிமன்றம் வழங்கியது. இருப்பினும் வரையறுக்கப்பட்ட பிரமாணப் பத்திரம் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது. அதில் எந்த தகவலும் இல்லை. மத்திய அரசு தனது நிலையைத் தெளிவுபடுத்தியிருந்தால் நம் மீதான சுமை குறைந்திருக்கும். மத்திய அரசு குறிப்பாக எதையும் மறுக்கவில்லை. எனவே மனுதாரர் சமர்ப்பித்தவற்றை முதன்மையாக ஏற்றுக்கொள்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. எனவே உச்ச நீதிமன்றத்தால் கண்காணிக்கப்படும் ஒரு வல்லுநர் குழுவை நாங்கள் நியமிக்கிறோம். இந்தியர்களைக் கண்காணிப்பதில் வெளிநாட்டு முகமைகளின் பங்கு உள்ளதா என்ற தீவிரமான கவலை உள்ளது." இவ்வாறு அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள குழுவிற்கு, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரவீந்திரன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், அந்தக் குழுவில் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியும், ரா உளவுப்பிரிவின் முன்னாள் தலைவருமான அலோக் ஜோஷி, தகவல் தொழில்நுட்ப வல்லுனரான சுந்தீப் ஓபராய், தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழக டீன் நவீன் குமார் சவுத்ரி, பேராசிரியர் பிரபாகரன், இந்திய தொழில்நுட்ப நிறுவன பேராசிரியர் அஷ்வின் அனில் குமாஸ்தே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

வல்லுநர் குழுவை அமைத்துள்ள உச்ச நீதிமன்றம், பெகாசஸ் விவகாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய 8 வாரங்கள் அவகாசமளித்து, வழக்கு விசாரணை 8 வாரங்களுக்குத் தள்ளி வைத்துள்ளனர். பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரிக்க வல்லுநர் குழு அமைக்க மத்திய அரசு அனுமதி கோரியிருந்த நிலையில், அதனை ஏற்க மறுத்து விசாரணை நடத்த தாங்களாகவே ஒரு குழுவினை அமைத்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT