ADVERTISEMENT

உச்சநீதிமன்ற உத்தரவிற்கு பணிந்த எஸ்.பி.ஐ.!

07:12 PM Mar 12, 2024 | prabukumar@nak…

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2018 ஆம் ஆண்டு தேர்தல் பத்திரம் திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தின் மூலம், தனிநபர் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்கள் வங்கி மூலம் தேர்தல் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளலாம். இந்தத் தேர்தல் பத்திரங்களில் வாங்குபவரின் பெயர், முகவரி, இந்த நிதி யாரிடம் இருந்து பெறப்பட்டது ஆகிய விவரங்கள் மற்றவர்களுக்குத் தெரியாது என்றும் கூறப்பட்டது. அந்த தனிநபரோ அல்லது கார்ப்பரேட் நிறுவனமோ இந்த பத்திரங்களை கொண்டு தங்களுக்கு விருப்பமான கட்சிகளுக்குத் தேர்தல் நிதியாக வழங்கலாம். மேலும், அந்த கட்சிகள் 15 நாட்களுக்குள் எந்தவித கட்டுப்பாடுமின்றி இதனை நிதியாக மாற்றிக் கொள்ளலாம். அப்படி இல்லையென்றால், அந்தத் தேர்தல் பத்திரத் தொகை பிரதமர் நிவாரண நிதியில் டெபாசிட் செய்யப்படும் என்று அந்தத் திட்டத்தில் கூறப்பட்டது.

ADVERTISEMENT

இந்தத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இதையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதியைப் பெறுவது என்ற திட்டத்தை எதிர்த்து ஏடிஆர், காமன் கேஸ் உள்ளிட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மார்க்சிஸ்ட் சார்பில் உச்சநீதிமன்றத்தில் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி (15.02.2024) தீர்ப்பு வழங்கியது.

ADVERTISEMENT

அதில் 5 நீதிபதிகளும் தேர்தல் பத்திரங்கள் செல்லாது என ஒருமித்த கருத்துகளை தீர்ப்பாக வழங்கினர். மேலும் மார்ச் 6 ஆம் தேதிக்குள் நன்கொடை தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம், பாரத் ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) விவரங்களை அளிக்க வேண்டும். மேலும், அதனை மார்ச் 31 ஆம் தேதிக்குள் இணையப் பக்கத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் எனவும் நீதிபதிகள் தீர்ப்பளித்திருந்தனர். ஆனால் தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு வழங்க ஜூன் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்க வேண்டும் என எஸ்.பி.ஐ. வங்கி உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தது.

இதுதொடர்பாக எஸ்.பி.ஐ. வங்கி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டிருந்தது. நேற்று (11.03.2024) நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையில், எஸ்.பி.ஐ வங்கிக்கு பல்வேறு கேள்விகளை நீதிமன்றம் வைத்திருந்தது. அதாவது, ‘24க்கும் குறைவான அரசியல் கட்சிகளே தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெற்றுள்ளன. கட்சிகளுக்கு நன்கொடை கொடுத்தவர்கள் மற்றும் அவர்களுக்கு இடையிலான தொடர்பு பற்றி எதுவுமே கேட்கவில்லை. ஆனால் மிக சுலபமாக சேகரிக்கக் கூடிய தேர்தல் பத்திர நன்கொடை விவரங்களை வெளியிட எஸ்.பி.ஐ. அவகாசம் கேட்பது ஏன்? மிக எளிமையான உத்தரவை பின்பற்ற கால அவகாசம் கோருவதை எந்த வகையில் ஏற்பது’ என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதற்கு, ‘தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட வேண்டும் என கூறியதால் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது’ என எஸ்.பி.ஐ. வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிமன்றம், ‘26 நாட்கள் ஆகிறது இதுவரை என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? எஸ்.பி.ஐ. வங்கியால் செய்ய முடியாத வேலையை எதுவும் நாங்கள் கொடுக்கவில்லை. எஸ்.பி.ஐ. வங்கியிடம் இருந்து நேர்மையான செயல்பாட்டை நாங்கள் எதிர்நோக்குகிறோம்’ என தெரிவித்திருந்தது. நாளை மாலைக்குள் விவரங்களை எஸ்.பி.ஐ வெளியிடவும், மார்ச் 15 ஆம் தேதிக்குள் எஸ்.பி.ஐ. வங்கியிடம் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான ஆவணங்களை பெற்று வெளியிடத் தேர்தல் ஆணையத்திற்கும் உத்தரவிட்டிருந்தது.

இத்தகைய சூழலில் எஸ்.பி.ஐ. வங்கியின் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் மறு ஆய்வு செய்ய வலியுறுத்துமாறு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு உச்சநீதிமன்ற பார் அசோசியேஷன் தலைவர் ஆதிஷ் அகர்வாலா கடிதம் எழுதி இருந்தார். அதில், “தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தீர்ப்பை நடைமுறைப்படுத்த குடியரசுத் தலைவர் அனுமதிக்கக் கூடாது. வழக்கு மறுபரிசீலனை செய்யப்படும் வரை தீர்ப்பை நிறுத்தி வைக்க நீதிமன்றத்தை வலியுறுத்த வேண்டும்” எனக் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் எஸ்.பி.ஐ. வங்கி வழங்கியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT