SBI filed affidavit in Supreme Court at Electoral bond

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2018 ஆம் ஆண்டு தேர்தல் பத்திரம் திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தின் மூலம், தனிநபர் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்கள் வங்கி மூலம் தேர்தல் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளலாம். இந்தத் தேர்தல் பத்திரங்களில் வாங்குபவரின் பெயர், முகவரி, இந்த நிதி யாரிடம் இருந்து பெறப்பட்டது ஆகிய விவரங்கள் மற்றவர்களுக்குத் தெரியாது என்றும் கூறப்பட்டது. அந்த தனிநபரோ அல்லது கார்ப்பரேட் நிறுவனமோ இந்த பத்திரங்களை கொண்டு தங்களுக்கு விருப்பமான கட்சிகளுக்குத் தேர்தல் நிதியாக வழங்கலாம். மேலும், அந்த கட்சிகள் 15 நாட்களுக்குள் எந்தவித கட்டுப்பாடுமின்றி இதனை நிதியாக மாற்றிக் கொள்ளலாம். அப்படி இல்லையென்றால், அந்தத் தேர்தல் பத்திரத் தொகை பிரதமர் நிவாரண நிதியில் டெபாசிட் செய்யப்படும் என்று அந்தத் திட்டத்தில் கூறப்பட்டது.

Advertisment

இந்தத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இதையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதியைப் பெறுவது என்ற திட்டத்தை எதிர்த்து ஏடிஆர், காமன் கேஸ் உள்ளிட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மார்க்சிஸ்ட் சார்பில் உச்சநீதிமன்றத்தில் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி (15.02.2024) தீர்ப்பு வழங்கியது.

Advertisment

அதில் 5 நீதிபதிகளும் தேர்தல் பத்திரங்கள் செல்லாது என ஒருமித்த கருத்துகளை தீர்ப்பாக வழங்கினர். மேலும் மார்ச் 6 ஆம் தேதிக்குள் நன்கொடை தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம், பாரத் ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) விவரங்களை அளிக்க வேண்டும். மேலும், அதனை மார்ச் 31 ஆம் தேதிக்குள் இணையப் பக்கத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் எனவும் நீதிபதிகள் தீர்ப்பளித்திருந்தனர். ஆனால் தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு வழங்க ஜூன் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்க வேண்டும் என எஸ்.பி.ஐ. வங்கி உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தது.

இதுதொடர்பாக எஸ்.பி.ஐ. வங்கி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் (11.03.2024) நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையில், எஸ்.பி.ஐ வங்கிக்கு பல்வேறு கேள்விகளை நீதிமன்றம் வைத்திருந்தது. அதாவது, ‘26 நாட்கள் ஆகிறது இதுவரை என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? எஸ்.பி.ஐ. வங்கியால் செய்ய முடியாத வேலையை எதுவும் நாங்கள் கொடுக்கவில்லை. எஸ்.பி.ஐ. வங்கியிடம் இருந்து நேர்மையான செயல்பாட்டை நாங்கள் எதிர்நோக்குகிறோம்’ என தெரிவித்திருந்தது. மார்ச் 12ஆம் தேதி மாலைக்குள் விவரங்களை எஸ்.பி.ஐ வெளியிடவும், மார்ச் 15 ஆம் தேதிக்குள் எஸ்.பி.ஐ. வங்கியிடம் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான ஆவணங்களை பெற்று வெளியிடத் தேர்தல் ஆணையத்திற்கும் உத்தரவிட்டிருந்தது.

Advertisment

SBI filed affidavit in Supreme Court at Electoral bond

இத்தகைய சூழலில் எஸ்.பி.ஐ. வங்கியின் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் மறு ஆய்வு செய்ய வலியுறுத்துமாறு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு உச்சநீதிமன்ற பார் அசோசியேஷன் தலைவர் ஆதிஷ் அகர்வாலா கடிதம் எழுதி இருந்தார். அதில், “தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தீர்ப்பை நடைமுறைப்படுத்த குடியரசுத் தலைவர் அனுமதிக்கக் கூடாது. வழக்கு மறுபரிசீலனை செய்யப்படும் வரை தீர்ப்பை நிறுத்தி வைக்க நீதிமன்றத்தை வலியுறுத்த வேண்டும்” எனக் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் எஸ்.பி.ஐ. வங்கி நேற்று (12-03-24) வழங்கியது.

இந்த நிலையில், நாடு முழுவதும் 2019ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை 22,217 தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில், எஸ்.பி.ஐ வங்கி இன்று (13-03-24) பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், 22,030 தேர்தல் பத்திரங்கள்பணமாக்கப்பட்டுள்ளது என்றும் 187 தேர்தல் பத்திரங்கள் பணமாக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளது. மேலும், தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்கள், வாங்கிய தேதி, வாங்கிய தொகை ஆகியவைவிவரங்களாக தேர்தல் ஆணையத்தில் பட்டியலிடப்பட்டுள்ளதாகவும், அவை அனைத்தும் பென் டிரைவ் வடிவில் அளிக்கப்பட்டதாகவும் எஸ்.பி.ஐ வங்கி தெரிவித்துள்ளது.