SBI's request at the last moment created a stir for Election bond details

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2018 ஆம் ஆண்டு தேர்தல் பத்திரம் திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தின் மூலம், தனிநபர் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்கள், வங்கி மூலம் தேர்தல் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த பத்திரங்களை வெளியிட பாரத ஸ்டேட் வங்கிக்கு (எஸ்.பி.ஐ) அதிகாரம் அளிக்கப்பட்டது. இந்தத் தேர்தல் பத்திரங்களில் வாங்குபவரின் பெயர், முகவரி, இந்த நிதி யாரிடம் இருந்து பெறப்பட்டது ஆகிய விவரங்கள் மற்றவர்களுக்குத் தெரியாது என்றும் கூறப்பட்டது. அந்த தனிநபரோ அல்லது கார்ப்பரேட் நிறுவனமோ இந்த பத்திரங்களை கொண்டு தங்களுக்கு விருப்பமான கட்சிகளுக்குத் தேர்தல் நிதியாக வழங்கலாம். அந்த கட்சிகள் 15 நாட்களுக்குள், அவற்றை பாரத ஸ்டேட் வங்கியில் கொடுத்து எந்தவித கட்டுப்பாடுமின்றி நிதியாக மாற்றிக் கொள்ளலாம். அப்படி இல்லையென்றால், அந்தத் தேர்தல் பத்திரத் தொகை பிரதமர் நிவாரண நிதியில் டெபாசிட் செய்யப்படும் என்று அந்தத் திட்டத்தில் கூறப்பட்டது.

இந்தத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இதையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதியைப் பெறுவது என்ற திட்டத்தை எதிர்த்துஏடிஆர், காமன் கேஸ் உள்ளிட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மார்க்சிஸ்ட் சார்பில் உச்சநீதிமன்றத்தில் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.

அதில் 5 நீதிபதிகளும் ஒருமித்த கருத்துகளை தீர்ப்பை கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி வழங்கினர். அதன்படி, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தீர்ப்பை வாசிக்கையில் “அரசை கணக்கு கேட்கும் உரிமை நாட்டு மக்களுக்கு உள்ளது என பல தருணங்களில் நீதிமன்றங்கள் கூறியுள்ளன. தகவல்களை வெளிப்படையாக தெரிவிக்காத தேர்தல் பத்திரங்கள் சட்டத்தை மீறும் வகையில் உள்ளன. இந்த திட்டம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் அரசியல் சாசனப்பிரிவு 19 கீழ் உட்பிரிவு 1 ஐ ஆகியவற்றை மீறும் வகையில் உள்ளது. எனவே தேர்தல் பத்திரங்கள் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் மட்டுமே கருப்பு பணத்தை ஒழிக்க முடியாது. தேர்தல் பத்திரங்கள் தகவல் பெறும் உரிமை சட்டத்திற்கு எதிராக அமையும். நன்கொடை தருவோர் குறித்த விவரங்களை தெரிவிக்க தேவையில்லை என்பது வாக்காளர்களின் உரிமைகளை பறிப்பதாக உள்ளது.

Advertisment

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவது, அதனால் ஏற்படும் ஆதாயங்களை கருத்தில் கொண்டு இருக்கலாம். தகவல் அறியும் உரிமை சட்டம் அரசியல் நன்கொடைகளுக்கும் நீட்டிக்கப்படுகிறது. தேர்தல் பத்திரங்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. தேர்தல் பத்திர நன்கொடைக்காக கம்பெனிகள் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது சட்ட விரோதம் ஆகும். தேர்தல் பத்திரத்தை அறிமுகம் செய்ய மக்கள் பிரதிநித்துவ சட்டம் மற்றும் வருமான வரி சட்டத்தில் மேற்கொண்ட திருத்தங்கள் ரத்து செய்யப்படுகிறது. தற்போதைய விதிகளின் கீழ் உள்ள தேர்தல் பத்திர முறை சட்டவிரோதமாக உள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்தவர்கள் விபரங்களையும் வெளியிட உத்தரவிடப்படுகிறது. தேர்தல் பத்திரங்களை வழங்குவதை, எஸ்.பி.ஐ வங்கி உடனடியாக நிறுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.

SBI's request at the last moment created a stir for Election bond details

தேர்தல் பத்திரங்கள் செல்லாது என தீர்ப்பளித்த நீதிமன்றம், வரும் மார்ச் 6ஆம் தேதிக்குள் நன்கொடை தொடர்பாகதேர்தல் ஆணையத்திடம், பாரத் ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ) விவரங்களை அளிக்க வேண்டும். மேலும், அதனை மார்ச் 31ஆம் தேதிக்குள் இணையப்பக்கத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் எனவும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். உச்சநீதிமன்றம் அளித்த இந்த தீர்ப்பை எதிர்க்கட்சியினர்வரவேற்றுள்ளனர்.

Advertisment

இந்த நிலையில், தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு வழங்க ஜூன் 30ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்க வேண்டும் என எஸ்.பி.ஐ வங்கி உச்சநீதிமன்றத்தில் நேற்று (04-03-24_ கோரிக்கை விடுத்தது. இதற்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ள நிலையில், தமிழக தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று (05-03-24) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “நானும் 20 ஆண்டுகள் வங்கியில் பணியாற்றியுள்ளேன். இவ்வளவு கேவலமான வாதத்தை நீதிமன்றத்தில் இவ்வளவு பெரிய வங்கி வைத்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியவர்கள் தரவுகளை சேகரிக்க 2 நிமிடங்கள் கூட ஆகாது. அதற்கு 4 மாதம் தேவை என எஸ்.பி.ஐ கால அவகாசம் கோரியிருப்பது மிகவும் கேவலமானது.

SBI's request at the last moment created a stir for Election bond details

ஒரு வங்கியை நடத்த ரிசர்வ் வங்கி அனுமதி கொடுக்க வேண்டும் என்றால் அடிப்படை தொழில்நுட்ப வசதிகள் இருக்க வேண்டும். உலக பொருளாதாரத்தில் 5வது நாடு எனக் கூறப்படும் நிலையில், அந்த நாட்டின் பெரிய வங்கியால் சிறிய தகவலை கூட அளிக்க முடியவில்லை என்பதை கேட்கவே நடுங்குகிறது. நாளை காலையே தரவுகளை கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டாலும், அதனை அன்று கொடுக்க வேண்டும். அதனை வழங்கும் திறனை எஸ்.பி.ஐ வங்கி கொண்டிருக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் வங்கி தொழிலிலேயே இருக்கக் கூடாது” என்று கூறியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில், தேர்தல் பத்திரங்கள் விவரங்களை வழங்க 4 மாதம் அவகாசம் வேண்டும் என்று எஸ்.பி.ஐ நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்திருப்பது விவாதப் பொருளாக மாறியுள்ளது.