ADVERTISEMENT

பக்கா பிளான்; பாதிக்கப்பட்ட பெண்ணை வேட்பாளராக களமிறக்கிய பாஜக!

05:50 PM Mar 27, 2024 | ArunPrakash

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாடு முழுவதும் தேர்தல் திருவிழா களைக்கட்டி உள்ளது. இதனையொட்டி பாஜக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளது. அதில் மேற்கு வங்க மாநிலம் பாசிர்ஹட் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக ரேகா பத்ரா அறிவிக்கப்பட்டது, தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. அம்மாநிலத்தில் உள்ள சந்தேஷ்காலி கிராமத்தில் பட்டியலின பெண்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரமுகரான (தற்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்) ஷாஜகான் ஷேக் பாலியல் தொல்லை கொடுத்தாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் அவர்களின் நிலத்தை அபகரித்துத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவங்களை எல்லாம் வெளியே கூறினால் கடுமையான பின் விளைவுகளை சந்திப்பீர்கள் என்று மிரட்டல் விடுத்துள்ளார் ஷாஜகான் ஷேக்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சந்தேஷ்காலி கிராமத்து பெண்கள் ஷாஜகான் ஷேக் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது போலீஸில் புகார் அளித்துள்ள நிலையில், அதனை போலீசார் கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் போராட்டம் நடத்தினர். ஷாஜகான் ஷேக்கின் கூட்டாளிக்குச் சொந்தமான கோழிப்பண்ணைகளைப் போராட்டக்காரர்கள் தீ வைத்துக் கொளுத்தினர். இது மாநிலம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர் போராட்டத்திற்கு பிறகு ஷாஜகான் ஷேக் கடந்த மாத இறுதியில் கைது செய்யப்பட்டார்.

இந்த போராட்டத்தில் பங்கேற்ற பாதிக்கப்பட்ட பெண்ணான ரேகா பத்ரா கொடுத்த புகாரின் அடிப்படையில் ஷாஜகான் ஷேக் மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ரேகாவுக்கு பாஜக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் பாசிர்ஹட் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சந்தேஷ்காளி கிராமமும் இந்த தொகுதியில்தான் உள்ளது.

பாசிர்ஹட் நாடாளுமன்ற தொகுதியில் ரேகா பத்ராவுக்கு பாஜக சார்பில் வாய்ப்பு கொடுக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்புகளும் எழுந்துள்ளது. அவருக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. அதே சமயம் ரேகாவுக்கு சந்தேஷ்காளி மக்கள் முழு ஆதரவு கொடுத்துள்ளனர். கடந்த 6 ஆம் தேதி மேற்கு வங்கத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, சந்தேஷ்காலி கிராமத்தை சேர்ந்த பெண்களை சந்தித்தார். அந்த சந்திப்பில் ரேகா பத்ராவும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் ரேகா பத்ராவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண்ணை வேட்பாளராக பாஜக களமிறக்கியுள்ளது திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT