ADVERTISEMENT

“எங்கள் குரலை கேட்க முடியாதா” - பிரதமருக்கு சாக்சி மாலிக் கேள்வி

03:14 PM Apr 27, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் சிங் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், சரண் சிங் மற்றும் தேசிய பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் குற்றம் சாட்டியிருந்தார்.

இதையடுத்து, இந்திய மல்யுத்த சம்மேளனத்தை கலைத்துவிட்டு புதிய நிர்வாகத்தை உருவாக்க வேண்டும், பாஜக எம்.பி பிரிஜ்பூஷன் சரண் சிங் பதவி விலக வேண்டும், அதோடு அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அதுவரை எங்களது போராட்டம் ஓயாது என்று கூறி பஜ்ரங் புனியா உள்ளிட்ட ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற வீரர்கள் கூட இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகத்திற்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜனவரி மாதம் 3 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனைத் தொடர்ந்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அப்போது சுமுக முடிவு எட்டப்படாததால் போராட்டத்தை தொடர்ந்து வந்தனர். இந்நிலையில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு 3 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இது குறித்து பேசிய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தங்களது கோரிக்கையை ஏற்று கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது முறையான விசாரணை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததாகவும் தெரிவித்தார்.

மேலும் மல்யுத்த வீரர்களின் கோரிக்கையை ஏற்று பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டினை விசாரிக்க குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் 5 பேர் அடங்கிய குழு ஒன்றை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து இந்த குழுவானது விசாரணை செய்து அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. இந்நிலையில் பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 23 அம் தேதி முதல் மல்யுத்த வீரர்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

இந்நிலையில், பிரதமர் மோடி மாதந்தோறும் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமை அகில இந்திய வானொலி மூலம் மனதின் குரல் என்ற நிகழ்ச்சி முலம் மக்களிடம் பேசி வருகிறார். அதன் 100 வது பகுதி வரும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாக உள்ளது. மேலும் 100வது மனதின் குரல் நிகழ்ச்சியை பிரபலப்படுத்த மத்திய அரசும், பாஜகவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிகழ்ச்சியை குறிப்பிட்டு போராட்டத்தின் இடையே செய்தியாளர்களிடம் பேசிய சாக்சி மாலிக், "பிரதமர் மோடி அவர்களே பெண் குழந்தைகளை பாதுகாப்போம்; பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்று கூறுகிறீர்கள். ஒவ்வொருவரின் மனதின் குரலையும் கேட்கிறீர்கள். எங்களின் மனதின் குரலை உங்களால் கேட்க முடியாதா. நாங்கள் போட்டியில் பங்கேற்று பதக்கம் வென்று வந்தால் எங்களை உங்களின் வீட்டிற்கு அழைத்து மரியாதை செய்கிறீர்கள். எங்களை உங்களின் மகள்கள் என்று கூறுகிறீர்கள். தற்போது நாங்கள் எங்களின் மனதின் குரலை கேளுங்கள் என்று கோரி போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

நாங்கள் உங்களை சந்தித்து எங்களின் கோரிக்கையை தெரிவிக்க விரும்புகிறோம். நீங்கள் எங்களை சந்திக்க முன்வர வேண்டும். நாங்கள் எதற்காக போராடுகிறோம் என்று பிரதமர் மோடியை இன்னும் எட்டவில்லை என்றே கருதுகிறோம். நாங்கள் சந்திக்க முடிந்தால், அவரால் உண்மையை அறிந்து கொள்ள முடியும். கடந்த 4 நாட்களாக ஜந்தர் மந்தரில் கொசுக்கடிக்கு மத்தியில் சாலையிலேயே உறங்கி போராடிக் கொண்டிருக்கும் எங்களை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி சந்திக்காதது ஏன்? ஸ்மிருதி இரானி தற்போது ஏன் அமைதியாக இருக்கிறார். நீங்கள் இங்கு வர வேண்டும். நாங்கள் கூறுவதை கேட்க வேண்டும். எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்" என கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT