Rahul Gandhi's controversial speech issue; Delhi High Court action order to Election Commission

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துப் பேசி இருந்தார். கடந்த நவம்பர் மாதம் 22 ஆம் தேதி (22.11.2023) நடைபெற்ற தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசியபோது, “பிக்பாக்கெட் அடிப்பவர்கள் தனியாக வருவதில்லை. அப்படி அவர்கள் தனியாக வந்தால் உங்கள் பாக்கெட்டை வெட்ட முடியாது. அதனால், அவர்கள் மூன்று பேர் கொண்ட குழுவாகத்தான் வருவார்கள்.

Advertisment

ஒருவர் முன்பக்கமும், ஒருவர் பின்புறமும், மற்றொருவர் தூரத்திலும் இருந்து கொண்டு கவனத்தை திசை திருப்பி பணத்தை கொள்ளையடிப்பர். அது மாதிரி, மக்களின் கவனத்தை திசை திருப்புவதுதான் பிரதமர் மோடியின் வேலை. அவர் தொலைக்காட்சி முன் தோன்றி இந்து - இஸ்லாமியர்கள் பிரச்சனை, பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற விஷயங்களை எழுப்பி பொதுமக்களின் கவனத்தை திசை திருப்புவார். இதற்கிடையே, அதானி பின்னால் வந்து உங்கள் பாக்கெட்டில் உள்ள பணத்தை எடுத்துச் சென்றுவிடுவார். இருவருக்கும் இடையே யாராவது வருகிறார்களா என தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருப்பவர்தான் அமித்ஷா. அப்படி யாராவது வந்தால் அவர்களை தடியடி நடத்தி அடிப்பார்” என்று பேசினார். ராகுல் காந்தியின் பேச்சு சர்ச்சையான நிலையில், அவருக்கு பா.ஜ.க தலைவர்கள் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.

Advertisment

இது தொடர்பாக ராகுல் காந்தி மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பா.ஜ.க பிரதிநிதிகள் குழு தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தனர். இதனையடுத்து இது தொடர்பாக விளக்கம் அளிக்க ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்நிலையில் இது தொடர்பான வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று (21.12.2023) விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரதமர் மோடி குறித்த ராகுல் காந்தியின் விமர்சனம் ஏற்கத்தக்கதல்ல. ராகுல் காந்தியின் இந்தபேச்சு தொடர்பாக 8 வாரங்களில் முடிவெடுக்க இந்தியத்தலைமைத்தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இது குறித்து நீதிமன்றம் முடிவெடுக்க முடியாது நாடாளுமன்றம்தான் முடிவெடுக்க முடியும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.