ADVERTISEMENT

"பெரும்பான்மையை நிரூபியுங்கள்"! - முதல்வர் நாராயணசாமிக்கு ஆளுநர் உத்தரவு!

05:57 PM Feb 18, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

மொத்தம் 33 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டது புதுச்சேரி மாநில சட்டப்பேரவை. இதில் மூன்று உறுப்பினர்கள் நியமன உறுப்பினர்கள் ஆவர். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்துவருகிறது. இந்த நிலையில், அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணராவ், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜான்குமார், தீப்பாய்ந்தான் ஆகிய நான்கு பேரும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். ஏற்கனவே, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் தனவேலு பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணிக்கும், என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணிக்கும் சமமாக 14 இடங்கள் உள்ளன.

இந்த நிலையில், புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை இழந்தது. எனவே, முதல்வர் நாராயணசாமி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வந்தன. மேலும், முதல்வர் நாராயணசாமியை பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் (பொறுப்பு) தமிழிசை சௌந்தராஜனை நேரில் சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி வலியுறுத்தினார்.

இதையடுத்து, புதுச்சேரி மாநில சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க, அம்மாநில முதல்வருக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பிறப்பித்துள்ள உத்தரவில், "வருகிற பிப்ரவரி 22- ஆம் தேதி மாலை 05.00 மணிக்குள் புதுச்சேரி மாநில சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் நாராயணசாமிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் நடைபெறவுள்ள வாக்கெடுப்பை வீடியோ பதிவு செய்யவும்" உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

துணைநிலை ஆளுநராகப் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே தமிழிசை சௌந்தரராஜன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது, புதுச்சேரி அரசியலில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநில சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், முதல்வர் நாராயணசாமிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT